Skip to main content

மாஜி ப்ளான்! வலையில் ராக்கெட் ராஜா! -பேராசிரியர் கொலை பின்னணி!

ப்படியும் பிடித்துவிடலாம் என்பதே போலீஸின் நம்பிக்கை. பசுபதிபாண்டியன் தொடங்கி கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிங்காரம் கொலைவரை சம்பந்தப்பட்ட ராக்கெட் ராஜாவை பேராசிரியர் செந்தில்குமார் கொலையில் பொறிவைத்தது காவல்துறை. 1996-ன்போது தூத்துக்குடி மாவட்ட கொடியன்குளம் சுற்று வட்டாரப்பகுதியில் நடந்த இனக்கலவரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் கொடியன்குளம் குமார். அப்போது புதிய தமிழகம் கட்சியில் டாக்டர் கிருஷ்ணசாமியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து அ.தி.மு.க.வின் பக்கம் வந்த கொடியன்குளம் குமார் பிறகு அரசியலில் சைலன்ட் ஆகிவிட்டார்.
rocketraja
பாளை. சாந்தி நகரில் குடியேறிய குமார், தன்னோடு தாட்டியமான ஆட்களைச் சேர்த்துக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வந்திருக்கிறார். விற்க முடியாமல் வில்லங்கத்தில் சிக்கியுள்ள நிலங்களை வைத்துக்கொண்டு தவிப்பவர்களின் ஆபத்பாந்தவனாகி பணம் பார்த்துவந்தார்.

குமாரைச் சுற்றி எதிரிகள் பலர் முளைத்திருக்கிறார்கள்.

பாளை வி.எம்.சத்திரம் பெரிய பாலம் அருகே ஆறுக்கும் மேற்பட்ட பங்காளிகளைக் கொண்ட இரண்டு ஏக்கர் நிலம் வில்லங்கத்தால் விற்க முடியாமல் திணறுவதையறிந்த குமார், அதில் ஒரு பங்காளியிடம், "நான் விற்று பணம் தருகிறேன்' என்ற வாக்குறுதியில் தனக்கான பவரை அவரிடமிருந்து வாங்கி அதை ஆக்கிரமித்திருக்கிறார்.

அதேசமயம் அதன் இன்னொரு பங்காளியிடமிருந்து மறைந்த வழக்கறிஞர் கார்த்தீசன் வாங்கிய பங்கினை ராக்கெட் ராஜாவின் உறவினர் மற்றும் அவரது சகாக்கள் வாங்கி வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த இடத்திலும் புகுந்த குமார், வில்லங்கத்தை உண்டுபண்ணி ஆக்கிரமிக்க அது பஞ்சாயத்தாகியிருக்கிறது. "பத்து லட்சம் தருகிறோம். ஒதுங்கிக் கொள்ளுங்கள்' என்று ராக்கெட் ராஜாவின் சகாக்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளாத குமார், "உங்களால் ஆனதைப் பாருங்கள்' என்று சொல்லிவிட்டார். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் குமாரால் ரியல் எஸ்டேட் பிசினசில், நிலம் கொடுத்து ஏமாந்து பரிதவிப்பவர்களை ஓரணியில் திரட்டியிருக்கிறார்கள். குமாரைத் தனிமைப்படுத்தி, வியூகங்களை வகுத்தவர்கள் அந்த விபரீதத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

rocketraja

பிப்.26 அன்று காலை வழக்கம்போல் தனது அண்ணா நகர் வீட்டின்முன் உள்ள பந்தலில் தனது மகளின் கணவரும் தன் மருமகனுமான செந்தில்குமாருடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் குமார். செந்தில்குமார் தச்சையிலுள்ள தாமிரபரணி பொறியியற்கல்லூரி பேராசிரியர். அதுசமயம் அங்கு காரில் வந்த கும்பல் ஒன்று கண்ணிமைப்பதற்குள் மிளகாய்ப் பொடியை அவர்கள் மீது தூவிவிட்டு, சுதாரிக்க நேரம் வைக்காமல் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறது. பயங்கர சப்தத்துடன் வெடித்த குண்டுகளிலிருந்து புகை கிளம்பவே, விபரீதத்தை உணர்ந்து, தப்பி ஓடியிருக்கிறார் குமார். பொலிபோடத் தேடிய கும்பலிடம் குமார் சிக்காமல் போகவே... ஆத்திர வெறியோடிருந்த அந்தக் கும்பலிடம் அப்பாவியான பேராசிரியர் செந்தில்குமார் சிக்கிக்கொள்ள அவரை வீச்சரிவாளால் கூறு போட்டு கொன்றுவிட்டுத் தப்பியிருக்கிறது.

பீதியோடிருந்த குமாரோ, ""கே.டி.சி. நகரின் அந்த நிலப்பிரச்சினையால் என்னிடம் பஞ்சாயத்துப் பேசவந்த அந்தக் கும்பல், "விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கிவிடு. மீறி தலையிட்டால் தீர்த்திருவோம்'னு என்னை மிரட்டியதைப் பற்றி போலீஸ் விசாரணையில் சொல்லியிருக்கிறேன். அந்தக் கும்பல்தான் இத்தனைக்கும் காரணம்'' என்கிறார் பதட்டமான குரலில்.

இந்தப் படுகொலையில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டத்தின் ராஜசேகரன், வடக்கன்குளம் அஸ்வின் என இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரண்டராகியிருக்கிறார்கள். ராக்கெட் ராஜாவை வழக்கில் சேர்த்து களமிறங்கிவிட்டது போலீஸ். ""அத்தனைபேரும் சிக்குவார்கள்'' என்கிறார் நெல்லை மாநகர டி.சி. சுகுணாசிங்.

senthilkumar

கேரள நெய்யாற்றங்கரை, செங்கோட்டை புளியரைப் பகுதி கள்ளத்துப்பாக்கி விவகாரத்தால் ராக்கெட் ராஜாவிற்கு கெடுபிடியினை காட்டியிருக்கின்றது நெல்லை மாவட்ட காவல்துறை.

"" ராக்கெட் ராஜா வெறும் அம்புதான். இந்த இட விவகாரம் இப்பொழுது நேற்றல்ல... 5 ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஆறு நபர்கள் பங்குகொண்ட இந்த இடத்தினை வாங்கியது நெல்லை மாவட்டத்திலுள்ள பெரும் வி.வி.ஐ.பி.யான மாஜி மந்திரியின் மூத்த மகனுக்கே! அந்த இடம் அவரின் நண்பரின் பெயரிலே பதிவு செய்யப்பட்டிருக்கு. இந்த இடத்திற்கு பங்கு சொந்தக்காரரில் ஒருவர் பெண். அவருக்குரிய பங்கினை ஏனையோர் கொடுக்காததால் அந்தப் பெண்மணி கொடியங்குளம் குமாரை அணுக... அவரோ, அந்தப் பெண்மணியிடமிருந்து பவர் வாங்கிக்கொண்டு தன்னுடைய இடமாகக் காட்டிக்கொண்டு, சமீபத்தில் வி.வி.ஐ.பி. வீட்டிற்கே சென்று அவருடைய கண்முன்னே மூத்த மகனை மிரட்டி திரும்பியிருக்கின்றார். கலங்கிய வி.வி.ஐ.பி.யோ, ""இப்பத்தான் கட்சி மாறி அரசியலில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கின்றோம். அதற்குள் பிரச்சினை வேண்டாமென அசைன்மெண்ட்டை ராக்கெட் ராஜாவிடம் கொடுக்க... இப்பொழுது கொலை விழுந்துள்ளது. தானும், தன்னுடைய மகனும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவே ராக்கெட் ராஜாவை வழக்கினுள் இழுத்துள்ளனர்'' என்றனர் விபரமறிந்த போலீசார்.

-பரமசிவன், நாகேந்திரன்
படங்கள் : ப.இராம்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்