ஏழை எளிய தொழிலாளர்கள் மீது பெருமுதலாளிகள் கூட்டு சேர்ந்து அப்படியொரு புதிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதை கண்டுபிடித்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது நக்கீரன். பொதுவாக, பத்திரிகை ஊடக சுதந்திரத்திற்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வெற்றிகண்ட நக்கீரன்… சமீபத்தில், பத்திரிகை ஊடக சுதந்திரத்திற்கு மட்டுமல்ல சோஷியல் மீடியாக்களின் சுதந்திரத்திற்கு எதிரான தடையையும் உடைத்திருக்கிறது அதே சட்டப் போராட்டத்தால்!
இயக்குனர் ஜனநாதன் இயக்கி ஜீவா நடித்த "ஈ' படத்தில் வருவதுபோல... சென்னை கொருக்குப்பேட்டையிலுள்ள ஏழை-எளிய பெண்களை, "பூக் கட்டும் வேலை' என்று அழைத்துச்சென்று வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து "க்ளினிக்கல் ட்ரையல்' (Clinical Trail) அதாவது,…மருந்து பரிசோதனை செய்வதாக பகீரிடவைக்கும் தகவல் நமக்கு கிடைத்தது.
அதிர்ந்துபோன நாம் உடனே, பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலத்தை வீடியோ மூலம் பதிவு செய்துகொண்டு, அவர்களின் உறவினர் கெட்-அப்பில் சென்று சென்னை உயர்நீதின்றம் எதிரிலுள்ள மூக்கர்நல்லமுத்து தெருவில் ஐ.எஃப்.எம்.ஆர். நிறுவனத்தின் ‘"பிஹேவியர் எக்கனாமிக் லேப்'’மருந்து ஆராய்ச்சியாளர்களிடம் இணக்கமாகப் பேச... வெளிநாட்டு ஆராய்ச்சியாளரான ப்ளஸ்ஸி சாலுடெனியும் நம் நாட்டு ஆராய்ச்சியாளரான ஸ்னேகாவும் நம்மிடம் உண்மையை ஒப்புக்கொண்டார்கள். அவர்களின் வாக்குமூலத்தை நக்கீரன் சீக்ரெட் கேமராவில் பதிவு செய்துகொண்டோம்.
வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து இப்படிப்பட்ட ஆராய்ச்சியை செய்துகொண்டிருக்கும் சென்னை -நுங்கம்பாக்கத்திலுள்ள ஐ.எஃப்.எம்.ஆர். (Institute for Financial Management and Research) நிறுவனத்தின் ஹெச்.ஆர்.ஓ. சுஷிலிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, மத்திய-மாநில அரசுகளிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இப்படிப்பட்ட ஆராய்ச்சியை செய்துவருவது தெரியவந்தது. அதனால், "மர்ம மாத்திரை... சோதனை எலிகளான பெண்கள்!' என்கிற தலைப்பில் 2017, ஆகஸ்ட் 10-12 தேதியிட்ட நக்கீரனில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். மேலும், இதுகுறித்த பிரத்யேக வீடியோவை நக்கீரன் இணையதளத்தில் வெளியிட்டோம். நக்கீரன் செய்"தீ'’ பரவியதோடு நக்கீரன் இணையதள வீடியோ செய்"தீ'’ ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பரவி, பெரும் பரபரப்பை பற்றவைத்தது. இதனால், ஐ.எஃப்.எம்.ஆர். சங்கத்தின் சார்பில் பதிவாளர் சுந்தரராஜன், "நக்கீரன் இணையதளத்தில் வெளியான வீடியோ செய்தியை நீக்கவேண்டும்' என்றதுடன் 25 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். அதில், நக்கீரன் வெளியிட்ட ஐ.எஃப்.எம்.ஆர். செய்திக்கு இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது.
தடையை நீக்கக்கோரி நக்கீரன் சார்பில் நமது வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், சிவக்குமார் ஆகியோர் மூலம் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு, வழக்கறிஞர் பி.டி.பெருமாள் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
""பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த தகவல்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் மக்களின் குரலாக ஒலித்த செய்தி அது. தங்களுக்கு, என்ன மாத்திரை வழங்கப்படுகிறது என்ற அடிப்படை தகவல்கூட மறைக்கப்பட்டதாலும், ஹெச்-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சுந்தரத்திடம் அப்போதே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததாலும் பத்திரிகையை மக்கள் நாடியுள்ளனர். நக்கீரன், இந்த செய்தியை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நல்லெண்ணத்துடன் தீர விசாரித்து அனைத்தையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து எவ்வித உள்நோக்கமுமின்றி வெளியிட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அந்த ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த உயரதிகாரிகளையும் அரசு அதிகாரிகளையும் பேட்டி கண்டு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த ஆராய்ச்சி நிறுவனம் இதுபோன்ற சோதனைகளைச் செய்ய தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், தமிழக அரசிற்கு கொள்கை முடிவுகளை எடுக்க ஆலோசனைகள் வழங்குவதாகவும் கூறுகிறது. ஆனால், அதற்கான எந்த ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. மாறாக, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனம் பதிவுத்துறையில் ஆண்டறிக்கையைக்கூட தாக்கல் செய்யவில்லை என்பதை ஆர்.டி.ஐ. (தகவல் பெறும் உரிமைச் சட்டம்) மூலம் கண்டுபிடித்தோம். எனவே, சங்கப்பதிவு சட்டப்படி இது ஒரு செயல்படாத சங்கம் (Defunct Society) ஆகும். எனவே, இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல''’என்று ஆணித்தரமாக வாதாடினார்.
""இந்த செயல்படாத சங்கத்தின் மூலம் சட்டத்திற்கு புறம்பான சில வேலைகளை செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இவற்றை வெளிக்கொண்டுவரும் நக்கீரனுக்கு எதிராக தடை பெற்று தங்களைப் பற்றிய... மேலும் பல செய்திகளை வராமல் தடுக்க முயற்சிக்கின்றனர். "ஒரு செய்தியில் தங்கள் நிறுவனம் பற்றி அவதூறாக வெளியான கருத்துகள் எது என்பதை வழக்கு தொடுப்பவர் வழக்கில் குறிப்பிட்டுக் கூறவேண்டும்' என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கும்போது, ஐ.எஃப்.எம்.ஆர். நிறுவனம் அவ்வாறு கூறாமல் ஒட்டுமொத்த மூன்று பக்க செய்தியும் தங்களுக்கு எதிரான அவதூறு செய்தி என்று கூறுவது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல''’எனவும் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதிட்டு, பத்திரிகை சுதந்திரம் தொடர்பான உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற, பல்வேறு தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியதோடு, நக்கீரன் தரப்பில் சேகரித்த ஆவணங்கள் -ஆடியோ -வீடியோ ஆதாரங்கள், ஐ.எஃப்.எம்.ஆர். நிறுவனம் பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மாண்புமிகு நீதியரசர் சி.வி. கார்த்திகேயன் அளித்த உத்தரவில், ஆட்டோ சங்கர் தொடர்பான நக்கீரன் வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியதை மேற்கோள்காட்டி, ""ஒருவர் தனது செயல்பாடுகள் மூலம் தாமாகவே சர்ச்சைகளுக்குள் வரும்போது தனிப்பட்ட உரிமை (Right to privacy) கோரமுடியாது. போதுமான அளவு விசாரித்து ஆவணங்களை சேகரித்து நடுநிலையான கருத்துக்களை பொதுநலன் கருதி வெளியிட்டுள்ளதாக நக்கீரன்தரப்பு கூறும்நிலையில், ஐ.எஃப்.எம்.ஆர். என்ற பொது நிறுவனம் தனது ஆண்டறிக்கையைத் தாக்கல் செய்வதில் குளறுபடியான சூழல் நிலவும்போது தனது ஆராய்ச்சி நடவடிக்கைகளை திரைமறைவில் செய்ய முடியாது; பத்திரிகை ஊடகங்களுக்கு எதிராக தடை கோரவும் முடியாது. அந்த பொதுநிறுவனத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது''’என்று கூறி, நக்கீரனுக்கு எதிரான இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.
ஐ.எஃப்.எம்.ஆர். ஆராய்ச்சி குறித்தும் இந்த வழக்கு குறித்தும் சமூக ஆர்வலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான இளங்கோவன் சொல்லும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. ""நக்கீரன் செய்திக்கான தடை நீக்கத்தோடு நின்றுவிடும் பிரச்சனை அல்ல இது. என்ன மருந்தை, எந்த மருந்து கம்பெனிக்காக பரிசோதிக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தியதுபோல, அமெரிக்காவிலுள்ள பிரபல எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology) பல்கலைக்கழகத்தில் அரேபிய நிறுவனமான ஜெ-பல் (Abdul Latif Jameel Poverty Action Lab) இருக்கைகளை உருவாக்கிக்கொண்டு ஐ.எஃப்.எம்.ஆர். நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இப்படிப்பட்ட ஆராய்ச்சியை செய்துவருகிறது. இபுப்ரூஃபன் என்கிற வலி மாத்திரையைக் கொடுத்ததாக நீதிமன்றத்தில் ஐ.எஃப்.எம்.ஆர். நிறுவனம் சொல்கிறது. ஆனால் அவர்கள் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் மத்திய-மாநில சுகாதாரத்துறை ஆய்வு செய்யவேண்டும்.
கோத்தாரி இண்டஸ்ட்ரியல் சுகர்மில்ஸ் சேர்மன்கள் பி.சி. கோத்தாரி மற்றும் பி.ஹெச். கோத்தாரி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சேர்மன் என்.வாஹுல், அஷோக் லேலண்ட் எம்.டி. சேஷசாயி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் ஐ.எஃப்.எம்.ஆர். நிறுவனத்தின் போர்டு மெம்பர்கள். இவர்கள் எல்லாரும் சாதாரண முதலாளிகள் அல்ல... பெருமுதலாளிகள். வலி மற்றும் சத்து மாத்திரைகளைக் கொடுத்து தொழிலாளர்கள் வலியில்லாமல் சோர்வாகாமல் கூடுதலாக உழைக்கிறார்களா என்பதற்கான பரிசோதனைதானே? வேறுமாதிரி சொல்லவேண்டும் என்றால் இது, ’லேபர் வயாக்ரா’ ஆராய்ச்சி. வயாக்ரா எப்படி ஆபத்தானதோ…அதுபோல, உண்ண உணவுகூட இல்லாமல் வறுமையில் வாடும் ஏழைத்தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் இந்த மாத்திரையும் மிகப்பெரிய பின்விளைவுகளை உண்டாக்கும்''’என்று பகீரூட்டுகிறார்.
பொது சுகாதார ஆராய்ச்சியாளர் பிரபல டாக்டர் ராக்காளிடம் கேட்டபோது, ""ஒப்புதல் படிவத்தில் (Informed consent) கையெழுத்து வாங்கிக்கொண்டு, ஒருவருக்கு மருந்து (மாத்திரை) கொடுத்து அதன் எஃபெக்ட்டை பரிசோதிக்கிறார்கள் என்றாலே அது க்ளினிக்கல் ட்ரையல் எனப்படும் மருந்து ஆராய்ச்சிதான். படிக்கத் தெரியாத மக்களிடம் பின்விளைவுகள் குறித்து புரியவைக்காமல் கையெழுத்து வாங்குவதே தவறு. மேலும், என்ன நோக்கத்திற்காக செய்யப்படும் ஆராய்ச்சி? என்ன வகை மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன என்பதே குறிப்பிடவில்லை. படிவத்தின் நான்காவது பக்கத்தில், மாத்திரை சார்ந்த ஆபத்து/பின்விளைவுகள்: மாத்திரைகள் மருந்தகங்களில் மருத்துவரின் குறிப்பின்றி வாங்கக்கூடியவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இபுப்ரூஃபன் (Ibuprofen) மாத்திரையைக் கொடுத்து பரிசோதிக்கிறோம் என்று அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது. ஆனால், மத்திய அரசின் ட்ரக்ஸ் அண்ட் காஸ்மெட்டிக் விதிப்படி ‘Schedule H drug' பட்டியலில் இபுப்ரூஃபன் மாத்திரை வருவதால் மருத்துவரின் மருந்துச் சீட்டு (Prescription) இல்லாமல் வாங்கக்கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது. எத்திக்ஸ் கமிட்டி எந்த அடிப்படையில் இந்த ஆராய்ச்சியை அனுமதித்தது என்பதே கேள்விக்குறியாக உள்ளது''’என்கிறார் விளக்கமாக.
இதுகுறித்து, மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் (CENTRAL DRUGS STANDARD CONTROL ORGANIZATION) துணை இயக்குனர் சாந்தி குணசேகரனிடம் கேட்டபோது, "விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்'’என்றார் உறுதியாக.
ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழக அரசுடன் கூட்டு எனக்கூறி உழைக்கும் மக்களின் உயிரோடு விளையாடுகிறவர்களுக்கு எதிராக நக்கீரன் சட்டப்போராட்டம் நடத்தி தனிமனித உரிமையையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் நீதியின் துணையுடன் பாதுகாத்துள்ளது. சமூக அக்கறையுடன் சாமான்ய மக்களின் குரலாய் நக்கீரன் என்றும் ஓங்கி ஒலிக்கும். ஐ.எஃப்.எம்.ஆர். நிறுவனத்தின் ஆராய்ச்சி உண்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும்வரை போராட்டம் தொடரும்…!
-மனோசௌந்தர்
நமது நிருபரின் முனைப்பு!
"மர்ம மாத்திரை -சோதனை எலிகளான பெண்கள்'’ என்ற தலைப்பில் நக்கீரன் வெளியிட்ட செய்திக்கட்டுரை தொடர்பாக தீரவிசாரித்து, ஆவணங்களை தெளிவாக சேகரித்து வைத்திருந்தார் நமது நிருபர் தம்பி மனோசௌந்தர். அத்துடன், மருந்து சோதனை செய்த நிறுவனத்தினருடன் உரையாடல் நடத்தி, அவர்களின் கருத்தையும் வீடியோ -ஆடியோ ஆதாரங்களுடன் பதிவு செய்திருந்தார். புலனாய்வு இதழில் ஒரு செய்திக்கு வலுச்சேர்ப்பவை இத்தகைய ஆவணச் சான்றுகள்தான். அந்த இலக்கணப்படி தம்பி மனோ சேகரித்திருந்த, தொடர்ந்து சேகரித்த வலுவான ஆதாரங்கள் நக்கீரனின் சட்டப்போராட்டத்திற்கு துணைநின்று நீதிமன்றத்தில் வெற்றியை தந்துள்ளது.
-ஆசிரியர்