அண்ணா பல்கலைக்கழகம் 2017-2018ஆம் ஆண்டிற்கான தேர்ச்சி விபரத்தை வெளியிட்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பேரதிர்ச்சியை வழங்கியிருக்கிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 547 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இந்த முதலாமாண்டு தேர்வில், 43 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. 143 கல்லூரிகளில் பத்து விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். எஞ்சிய கல்லூரிகளில், 57-இல் மட்டுமே 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 298 முதலாமாண்டு மாணவர்களில் 39 ஆயிரத்து 145 பேர் மட்டுமே அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
இவ்வளவு கேவலமான மதிப்பெண்களைப் பெறவும், பெயிலாகவும் காரணம் என்ன?
""பத்து வருடத்திற்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இப்ப தேர்வுத் தாள்களைத் திருத்துகிறார்கள். அன்றைய பாடங்களுக்கும் இன்றைய பாடங்களுக்கும் நிறைய வேறுபாடு. திருத்துபவர்களுக்கு தெரிவதில்லை, குழம்புகிறார்கள். ஒரு தாளுக்கு இவ்வளவு நேரம் என்று நேர நிர்ணயமிருக்கிறது. அதனால் அவசரமாக திருத்துகிறார்கள். திருத்துபவரேதான் கணினியில் பதில் பதிவேற்றம் செய்ய வேண்டுமாம். அதிலும் நேர அவசரம். இன்றைய பாடத்திட்டத்தை நன்கு அறிந்தவர்கள் திருத்தினால் இவ்வளவு மோசமான முடிவுகள் வந்திருக்காது'' என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட மாணவர் கழக துணைத்தலைவர் சாமிதுரையும், மாணவர் பாண்டூர் பாலுசாமியும்.
""பொறியியல் மாணவர்களின் தேர்ச்சி குறைவதற்கு என்ன காரணம் என்பதை, திறமையான குழுவை அமைத்து விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம். ஏகப்பட்ட பணத்தை செலவழித்து படிக்கிறார்கள். இதற்காக ஏழை மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர வேண்டும். கல்வியை உயர்த்த, கற்பிக்கும் கற்றுக் கொள்ளும் திறத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்கிறார் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழகச் செயலாளர் தினேஷ்.
""கல்லூரிக்குள் நுழைந்ததும் திடீரென்று படிப்பு வந்துவிடுமா? பள்ளிகளில் இருந்தே கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் முழுப்பாடங்களையும் சொல்லிக் கொடுக்காமல் கேள்வி பதில்களை மட்டுமே மனப்பாடம் செய்து, எழுதச்சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால்தான் கல்லூரிக்கு வந்ததும் முதலாமாண்டில் திணறிப்போகிறார்கள்'' என்கிறார் கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர் சேகர்.
இவை மட்டுமல்ல... பல கல்லூரிகளில் தகுதியுள்ள பேராசிரியர்கள் கிடையாது. மாதம் 5 ஆயிரம் 10 ஆயிரம் சம்பளம் கொடுக்கும் கல்லூரிகளும் உள்ளன. துணைவேந்தர் நாற்காலிகள் பத்து கோடி, இருபது கோடி என்று ஏலம் போடும்போது எப்படிக் கிடைக்கும் தரமான கல்வி?
-எஸ்.பி.சேகர்