தொல்லியல் சொர்க்கமாக கருதப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் இப்போது கிரானைட் கொள்ளையர்களின் சொர்க்கமாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். மலை சார்ந்த மாவட்டம் இப்போது குவாரிகளில் கிளம்பும் தூசு படிந்து பசுமையை இழக்கும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது.

Advertisment

ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் 12 மலைகள் இடம்பெற்றிருந்தன. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, அந்த மலைகளில் நான்கு முக்கிய மலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சேர்ந்தன. பழமை வாய்ந்த தொல்லியல் சின்னங்களும், பாறை ஓவியங்களும் இடம்பெற்றிருந்த அந்த மலைகள் இப்போது கொள்ளைபோகும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

granide

ஜெயதேவி, தொகரப்பள்ளி, அச்சமங்களம், பர்கூர், சூளகிரி, சானமாவுக்காடு வனப்பகுதி மல்லச்சத்திரம், சென்னசத்திரம், பைரவா மலை, சையத்பாஷா மலை, ஓசூர் வரை பல மலைகள் அழிக்கப்படுகின்றன.

Advertisment

மலைகள் காணாமல்போவது குறித்து வழக்குத் தொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று புலம்புகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள். கல்குவாரிகள் 115, கிரானைட் குவாரிகள் 212, லைம்ஸ்போன் குவாரிகள் 2 என முன்னர் ஏலம் விடப்பட்டது. ஆனால், மதுரை-மேலூர் கிரானைட் சுரங்க ஊழலுக்கு பிறகு, கிரானைட் கற்களை வெட்டி எடுக்கக்கூடாது என்று அரசு தடை விதித்தது.

அதன்பிறகும், அரசு உத்தரவுக்கு பெப்பே காட்டிவிட்டு அனுமதி இல்லாமலேயே கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அடிக்கும் கொள்ளையில் மட்டுமே மாதத்துக்கு 5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறதாம்.

pakoorhill

Advertisment

இந்தக் கொள்ளைக்கெல்லாம் யார் சப்போர்ட் பண்றாங்ளாம். ஜோலார்பேட்டை வீரமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் இருவரும்தான் முழு சப்போர்ட்டாம். அவர்கள் கொடுக்கிற தைரியத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சுரேஷ்பாபு, வனத்துறை அதிகாரி என ஒட்டுமொத்த அதிகாரிகளும் இந்த கொள்ளைக்கு துணையாக இருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மாற்றப்படாமல் இருப்பதற்கு காரணமே இதுதானாம்.

மேலூர் கிரானைட் கொள்ளையின்போதே புதுக்கோட்டை மணல் மாஃபியா ராமச்சந்திரன் கண்டுபிடித்ததுதான் கிருஷ்ணகிரி மாவட்ட மலைகள். அப்போது தனது பினாமியாகவும் சுரேஷ் பாபுவை நியமித்துக் கொண்டார். டி.டி. யாக இருந்தாலும் ராமச்சந்திரனின் பினாமியாக விசுவாசமாக செயல்பட்டதால்தான் இன்றுவரை அவரால் அதே பொறுப்பில் நீடிக்க முடிகிறது.

இந்தக் கொள்ளையின் தலைவர் யார் என்றால், கர்நாடகாவைச் சேர்ந்த சுரேஷ் மாண்டியா. அந்த மாநிலத்தில் உள்ள ஜிகினி கிரானைட் கம்பெனிக்கு கடத்தி, அங்கிருந்து உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். கொள்ளையடிப்பதிலும் ஒரு புதிய வழியைக் கையாளுகிறார்கள். ஒரு கன மீட்டர் கிரானைட் கல்லை வெட்டி எடுக்க 2 ஆயிரத்து 200 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். கடத்தல்காரர்கள் ஒரு கல்லுக்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டு, அந்த ரசீதை வைத்துக்கொண்டு 10 கற்களை ஏற்றிக் கடத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக தாராளமான கவனிப்புகள் நடைபெறுகின்றன.

granideபாலீஷ் செய்யப்பட்ட கிரானைட் தகடுகள் சதுர அடி 80 ரூபாயில் இருந்து 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இது தமிழகத்துக்குள் விற்பனை செய்யப்பட்டால் 2 சதவீதமும், வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டால் 14.5 சதவீதமும் ‘வாட்’ வரி செலுத்த வேண்டும். ஒரு லாரி லோடில் 5 லட்சம் ரூபாய்க்கு கிரானைட் தகடுகள் ஏற்றப்படுகின்றன. அப்படிப் பார்த்தால் ஒரு லோடுக்கு தமிழகமாக இருந்தால் 20 ஆயிரம் ரூபாயும் வெளிமாநிலமாக இருந்தால் 80,500 ரூபாயும் ‘வாட்’ வரி செலுத்த வேண்டும்.

இதை சமாளிப்பதற்காக, கர்நாடகாவில் செயல்படுவதாகச் சொல்லி போலி நிறுவனங்கள் பெயரில் ரசீது புத்தகங்களை அச்சடித்து வைத்து, கிருஷ்ணகிரி பகுதியில் பாலீஷ் செய்யப்படும் கிரானைட் தகடுகள் பெங்களூரூ (போலி) கம்பெனியில் பாலீஷ் செய்யப்பட்டு அங்கிருந்து ஏற்றிவரப்படுவதாக கணக்குக் காட்டிவிடுகிறார்கள். இந்த பணியை மிகவும் சிறப்பாக செய்கிறார் கர்நாடகா கிரானைட் தாதா சுரேஷ்!

இந்தக் கொள்ளை குறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தால், அந்தப் புகார் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரிவிக்கப்படும் வகையில் அனைத்து அதிகாரிகளும் செயல்படுகிறார்கள். சூளகிரியில் விலங்குகள் நடமாடும் பகுதியை வெட்டி எடுக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார்கள். என்ன சொன்னாலும் எடுபடவில்லை என்பதை அறிந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க இயலுவதாய் சொல்கிறார்கள். பெயர்கூட போடாதீர்கள் என்று கையெடுத்து கும்பிடுகிறார்கள்.

இந்தக் கொள்ளை தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சுரேஷிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்...

lawyer-suresh""அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கிரானைட் குவாரிகள் ஏலத்தின் மூலமாகத்தான் விடப்படுகின்றன. இதற்காக மாவட்ட அளவில் 12 பேர் கொண்ட கமிட்டி இருக்கிறது. அவர்களுக்கு மேல் மாநிலக் கமிட்டி இருக்கிறது. அவர்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் ஏலம் விடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு கிடைத்த வருமானம் 75 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரத்து 990 ரூபாய். 2015-16ஆம் ஆண்டில் உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் கனிமங்கள் வெட்டி எடுத்ததாக 2265 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் கிடைத்த வருமானம் 9 கோடியே 4 லட்சத்து 3 ஆயிரத்து 148 ரூபாய். கனிமங்கள் வெட்டியதற்காக போடப்பட்ட அபராதம் 3 கோடியே 10 லட்சத்து 4 ஆயிரத்து 271 ரூபாய். இதேபோல் 2016-17லிலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. கோடிகணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்று நீண்ட விளக்கத்தை கொடுத்தார். மேலும் விவரம் வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் கேட்கும்படி கூறினார்.

ஆனால், மாவட்ட ஆட்சியரிடம் இந்தக் கொள்ளை தொடர்பாக நாம் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அவர் மட்டுமின்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து வழக்கறிஞர் சுரேஷ் என்பவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியது...

""5 வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற குவாரிகள் ஏலம் விடப்படும். அதாவது, 5 வருடத்திற்கு 10 ஹெக்டேர் என்றால், அதை ஒரே வருடத்தில் தோண்டிவிடக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் எடுக்க வேண்டிய அளவு சுற்றுச் சூழல் பாதிக்காதபடிக்கு நிர்ணயிக்கப்படும். ஒரு ஆண்டு எடுக்கவேண்டிய அளவு எடுக்கத் தவறினால் அதை அடுத்த ஆண்டு சேர்த்து எடுத்துவிட முடியாது என்று அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால், இவர்களோ அரசு கொடுத்த அளவைத் தாண்டி வெட்டி எடுக்கிறார்கள். அங்கீகாரம் இல்லாமல் வெட்டப்படும் கிரானைட்டுக்குதான் அரசு அதிகாரி முதல், அரசியல்வாதிகள்வரை ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட்டாக சேர்ந்தே கொள்ளை அடிக்கிறார்கள்.

விலங்குகளின் பாதை அழிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மலையே காணாமல் போகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும். குடிநீருக்கே திண்டாடும் அவலம் நேரும். இந்த அரசு நினைத்தால் இவற்றை தடுத்து நிறுத்த முடியும். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வருவதே இதற்குத்தானே. பிறகு எப்படித் தடுப்பார்கள்?'' என்கிறார் ஆவேசமாக.

இந்த மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லி உடைக்கும் குவாரிகள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் கிரானைட் குவாரிகள் பெருக ஆரம்பித்தது கடந்த 20 ஆண்டுகளுக்குள்தான். 1991-ல் பர்கூரில் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வரானதும் தொகுதியை மேம்படுத்த ‘சிட்கோ’வை அமைத்தார். அந்த சமயத்தில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகச் சொல்லி, கர்நாடக மாநிலம் ஜிகினியில் செயல்பட்டு வந்த கிரானைட் பாலீஷிங் கம்பெனிகளை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது நீதிமன்றம். இதையடுத்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் பார்வை பர்கூர் ‘சிட்கோ’ மீது திரும்பியது. அவர் பெயரில் நடக்கும் தற்போதைய அரசும் ஜெ. போட்ட வழியில் சீராக பயணிக்கிறது என்கிறார்கள் மக்கள்!

-அ.அருண்பாண்டியன்