ந்திராணி முகர்ஜியும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும்தான் பா.ஜ.க.வின் பலமான துருப்புச் சீட்டுகள். கார்த்திசிதம்பரத்திற்கு எதிராக வலுப்பெற்றுவரும் வழக்கில், ப.சிதம்பரம்தான் ஃபைனல் டார்கெட். அதற்கேற்ப, ஐ.என்.எக்ஸ். மீடியா அதிபர்களான இந்திராணி முகர்ஜியும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் கொடுத்த வாக்குமூலத்தில் ப.சிதம்பரத்தையும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளனர்.

Advertisment

""நான் ஒரு பத்திரிகையாளர் மற்றும் டி.வி. முதலாளி என்ற அடிப்படையில் ப.சிதம்பரத்தை எனக்கு நன்கு தெரியும். அவர் 600 கோடி அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை நிதியமைச்சர் என்கிற முறையில் நேரடியாக அனுமதிப்பார். அதற்குமேல் வரும் முதலீடுகளை பண முதலீட்டுக்கான அமைச்சரவை குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைப்பார். சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் எஒடஇ எனப்படும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தை அவரே சரிக்கட்டி விடுவார். இதுபோல பலபேர் அன்னிய முதலீடுகளை நேரடியாக சிதம்பரத்திடம் கொண்டு போய் பலன் பெற்றிருக்கிறார்கள். ஒருவர் மூவாயிரம் கோடி முதலீட்டை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தால்கூட அதை ஐந்து அறுநூறு கோடிகளாகப் பிரித்து வெளிநாட்டு முதலீட்டுக்கான அமைச்சரவைக்கு அனுப்பாமல் சிதம்பரமே நேரடியாக பார்த்துக் கொள்வார்.

indiramukherji

எனது ஐ.என்.எக்ஸ் மீடியா கம்பெனிக்கு வெறும் 300 கோடி ரூபாய் மட்டுமே அன்னிய முதலீடாக நான் கொண்டு வந்தேன். எனது முதலீடு மிகவும் சிறியது. அந்த முதலீட்டை நான் கொண்டு வந்த விதமும் நேர்மையானது என்பதால், நான் நேரடியாக ப.சிதம்பரத்தை சந்தித்தேன். அவர் "உங்களது முதலீடுகள் மிகவும் சுத்தமாக உள்ளன. மற்ற வேலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கார்த்திசிதம்பரத்தை சந்தியுங்கள்' என என்னை அனுப்பி வைத்தார். கார்த்தி ஒரு மில்லியன் டாலர் லஞ்சம் கேட்டார், நான் கொடுத்தேன்'' என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் கணவனும் மனைவியுமான மீடியா அதிபர்கள்.

Advertisment

"இந்திராணியிடம் பெற்ற லஞ்சப் பணத்தை Statistic Advantage, Chest Management ஆகிய கம்பெனிகளில் கார்த்தி முதலீடு செய்துள்ளார்' என சி.பி.ஐ. சொல்லியது. ""இந்தியாவிலும் ஹாங்காங்கிலும் இயங்கும் இந்த கம்பெனிகளுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை'' என கார்த்திசிதம்பரம் சொல்லி வந்தார்.

கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவரிடம் நடத்திய ரெய்டுகளில், இந்த இரண்டு கம்பெனிகளும் கார்த்திசிதம்பரத்தின் கம்பெனிகள்தான் என்பதற்கான ஆதாரத்தை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. பாஸ்கர்ராமன், இந்திய ரூபாய் அளவிலான கார்த்தியின் முதலீடுகளை மட்டும் கையாண்டு வந்தவர். அவர் பத்துலட்ச ரூபாய் மதிப்புள்ள இந்தியப் பணத்தை இந்தக் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார். இந்தப்பணம் இந்திராணி முகர்ஜியின் பணமா என்பதை சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது.

சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்டுள்ள கார்த்திசிதம்பரத்தையும், மும்பை சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியையும் நேரில் வைத்து விசாரித்தபோது, இந்திராணி முகர்ஜி மிகவும் தைரியமாக கார்த்தியை எதிர்கொண்டுள்ளார். இதனால கார்த்தி அதிர்ந்து போனார். கார்த்தியை மட்டுமல்ல அவரது அப்பா சிதம்பரத்தையும் எதிர்த்து அவர்பேசியது பற்றி கோர்ட்டில் அவரது தந்தை மற்றும் தாயாருடன் அதிர்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் கார்த்தி.

Advertisment

pchambaram,karthik chambaram

2ஜி விவகாரத்தில் "அனைத்தும் பிரதமர் தொடங்கி ப.சிதம்பரம் வரை அனைவருக்கும் தெரிந்தே நடந்தது' என்கிற ஆ.ராசாவின் குற்றச்சாட்டைப் போலவே, இந்திராணியும் அவரது கணவரும் ப.சிதம்பரம் குறித்து சி.பி.ஐ.யின் அமலாக்கத்துறையிடம் பேசிவருவது காங்கிரஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. அடுத்தபடியாக மன்மோகன்சிங்கை குறி வைப்பார்களா? என்கிற பதட்டம் டெல்லி வட்டாரத்தில் எழுந்துள்ளது.

காங்கிரஸின் மூத்த பிரமுகர் அபிஷேக் சிங்விதான் கார்த்திசிதம்பரத்துக்காக ஆஜராகிறார். ஆனாலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளிப்படையாகவும் விரிவாகவும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியதை கட்சி சீனியர்களே ஆச்சரியமாய் பார்க்கின்றனர்.

2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்த நிலையில்... ப.சி.. அவசர அவசரமாக பல கோப்புகளில் கையெழுத்திட்டதாக புது சர்ச்சை கிளம்பியுள்ளது. சி.பி.ஐ.யைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் கார்த்திசிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல அதிர்ச்சிகள் வெளிப்படும் என மிரள வைக்கிறது பா.ஜ.க. வட்டாரம்.

தொடர்ச்சியாக கஸ்டடியில் எடுக்க நினைக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், தங்களின் விசாரணைக்கு கார்த்திசிதம்பரம் ஒத்துழைப்பு தராத காரணத்தால் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவெடுத்தனர்.

விசாரணை வளையத்திலிருந்த கார்த்திசிதம்பரத்தைப் பார்க்கப்போன ப.சி., தன்னைச் சுற்றியிருந்த வழக்கறிஞர்களிடம் ""பா.ஜ.க.வின் நோக்கம் எனக்குத் தெரியும். என் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை'' என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

-தாமோதரன் பிரகாஷ்