பத்திரிகையாளர் சந்திப்பில், தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியவர்களைப் பட்டியலிட்டு, பாட்டில் ஒன்றைக் கையில் எடுத்து, "விஷம்' எனச்சொல்லிக் குடித்துவிட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் விரைந்தார் ஷகிலா. "அது ஒன்றும் விஷம் இல்லை; தூக்க மாத்திரைக் கரைசல்தான்; உயிருக்கு ஆபத்து இல்லை'’ என்று அரசு மருத்துவர்கள் அனுப்பி வைத்தாலும், மதுரை - புதூர் காவல்நிலையத்தில் ஷகிலா மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவாகியிருக்கிறது.
ஷகிலாவின் குமுறல் இதுதான்...
""2012-இல் என் கணவர் டேவிட் ராஜையும், என் மாமனாரையும், ரவுடிகளை வைத்துக் கடத்திச் சென்று, அடித்து துன்புறுத்தி, வெற்று காசோலைகளில் கையெழுத்து வாங்கி, என் வீட்டிலிருந்த டாகுமெண்டுகளையும் எடுத்துச் சென்றார் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் லெனின் கிருஷ்ணமூர்த்தி. அதன்பிறகு, நீதிமன்றம் வாயிலாக பிரச்சனைக்கு நாங்கள் தீர்வு கண்டாலும், எங்கள் சொத்துப் பத்திரத்தை வைத்துக்கொண்டு, ரூ.1 கோடி கந்துவட்டி கேட்கிறார். அவருடைய கெட்ட ஆசைக்கு இணங்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார். அவரால், தொடர்ந்து நான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகிறேன்.
ஆளும் கட்சியில் நான் முக்கிய புள்ளின்னு சொல்லிக்கிற அவர், "அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நான் மிகமிக நெருக்கமானவன். போலீஸ் உள்பட யாரையும் விலைக்கு வாங்கி விடுவேன். நான் நினைத்தால், நீ லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய். கோர்ட்டில் ரூ.3000 அபராதம் செலுத்திவிட்டு, உன்னைக் கொன்றவனைக் காப்பாற்றிவிடுவேன். ஏற்கனவே, சித்துராஜபுரம் பிரசிடெண்ட் சுப்புராஜுவை, ரவுடிகளை வைத்து அடித்து, சிவகாசி பஸ்-ஸ்டாண்டில் போட்டேன்' என்றெல்லாம் அச்சுறுத்தலாகப் பேசிவருகிறார். என் கற்புக்கும் உயிருக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற மனஉளைச்சலுடன்தான் சாவதே மேல் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். நான் உயிர்விடுவதற்கு காரணம் சிவகாசியைச் சேர்ந்த லெனின் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய வழக்கறிஞர், விருதுநகர் மாவட்ட பப்ளிக் பிராஸிகியூட்டர் முத்துப்பாண்டி, சிவகாசி கிழக்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சுரேந்திரகுமார் ஆகிய நால்வரும்தான். இதை எழுதியே தருகிறேன்''’என்று பீதி கிளப்பிவிட்டுத்தான், விஷ(?)ப்பாட்டிலைக் கையில் எடுத்தார்.
2016, நவம்பர் 29 - டிசம்பர் 1 தேதியிட்ட நக்கீரன் இதழிலேயே, "ஊராட்சித் தலைவரின் தற்கொலை முயற்சி! மந்திரி பினாமியின் கூலிப்படை டார்ச்சர்?'’என்னும் தலைப்பில், லெனின் கிருஷ்ணமூர்த்தி மீது ரவுடிகளின் தாக்குதலுக்கு ஆளான சுப்புராஜ் தரப்பில் முன்வைத்த குற்றச்சாட்டை, ஆதாரங்களுடன் செய்தியாக வெளியிட்டோம். ஷகிலா மூலம் மீண்டும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார் லெனின் கிருஷ்ணமூர்த்தி.
அவரைத் தொடர்பு கொண்டோம். ""நான் யாருக்கும் பினாமி கிடையாது. மிரட்டலுக்காக அமைச்சர் பெயரை நான் பயன்படுத்தினேன் என்பது தவறான தகவல். நான் யாரையும் மிரட்டவில்லை. சட்ட ரீதியான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. ஷகிலா எத்தனை பொய்யானவர் என்பதற்கு ஆடியோ ஆதாரங்கள் வைத்திருக்கிறேன். ரவுடிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. பிரபலமானவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அது செய்தியாக வெளிவந்தால், கடனாகக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். ஷகிலாவும் அப்படித்தான்''’என்றார்.
விருதுநகர் மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் முத்துப்பாண்டியும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுரேந்திரகுமாரும் "ஷகிலா வீண்பழி சுமத்துகிறார்' என்று ஒரேயடியாக மறுத்துவிட்ட நிலையில்... தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் பேசினோம்.
""லெனினும் நானும் ஆரம்பத்தில் ரியல் எஸ்டேட் தொழில் பார்த்துவந்தோம். அவ்வளவுதான். என் பெயரை லெனின் எங்காவது பயன்படுத்தியிருக்கலாம். மற்றபடி, லெனினுக்காக போலீஸிடமோ, யாரிடமோ நான் பேசியது கிடையாது. இப்படித்தான் வடபட்டியில் எங்க கட்சிக்காரர் ஒருவரின் வாகனத்தை நிறுத்தியிருக்கிறார் ஒரு போலீஸ்காரர். கட்சிக்காரர் போதையில் இருந்திருக்கிறார். அந்த மப்பில், ‘"மந்திரி ராஜேந்திரபாலாஜிகிட்ட சொல்லி, உன்னை தண்ணியில்லாத காட்டுக்கு தூக்கியடிக்கிறேன் பார்..'’என்று சவால் விட்டிருக்கிறார். இதைக்கேட்ட போலீஸ்காரர், அந்த போதை ஆசாமியைத் திட்டியதைக் காட்டிலும் என்னை அதிகமாகத் திட்டியிருக்கிறார். அமைச்சராக இருப்பதால், இப்படித்தான் என்னுடைய பெயர் சம்பந்தமில்லாமல் அடிபடுகிறது''’என்று நொந்துகொண்டார்.
இந்த விவகாரத்தில், ஷகிலா உட்பட சகல பாத்திரங்களும், உண்மையை மறைத்து, தங்களை வெளிப்படுத்திய விதத்தைப் பார்க்கும்போது, "என்ன அருமையான நாடகம்! என்ன அழகான நடிப்பு!'’ என்று "புதியபறவை'’சிவாஜியைப் போல சிரிக்கத் தோன்றுகிறது.
-சி.என்.இராமகிருஷ்ணன், ஷாகுல்