எதிர்பாரா நேரத்தில்தான் அந்த போன் அழைப்பு வந்தது. போன் செய்தவர் நமது சோர்ஸ். அவருக்குத் தெரிந்த மீடியேட்டர் ஒருவருக்கு சிக்கல் என்றும், உதவமுடியுமா என்றும் கேட்டார்.
""திருச்சியில் ஒரு குரூப் தங்களிடம் 4000 கோடி இருக்கிறதாகவும், அதை ரிசர்வ் வங்கியின் மறைமுக ரெக்கவரி ஏஜெண்ட் நிறுவனங்கள் மூலமா மாத்திக்கொடுக்கணும்னும் மீடியேட்டர்கிட்ட கேட்டுருக்காங்க. அவர் ஏற்பாட்டில், அந்தப் பணத்தைப் பார்வையிட வந்த 2 அப்ரைசர்களைக் கடத்திட்டாங்களாம். நாகமங்கலம்-விராலிமலைப் பகுதியிலுள்ள ஏதோ பண்ணையில் மறைத்து வைத்துக்கொண்டு அவங்களை விடுவிக்க 25 லட்சம் பணம் கேக்குறாங்க. அவங்களை மீட்கணும்னு மீடியேட்டர் கதறுறார். நீங்க உதவி பண்ணமுடியுமா?''’என சோர்ஸ் கேட்டார்.
நமக்கு விஷயத்தைக் கேட்டதுமே தலைசுற்றியது. 4,000 கோடி பழைய பணத்தை இப்போது புதிய பணமா மாற்றமுடியுமா, இதென்ன விவகாரம் என்ற கேள்வியெழுந்தாலும், மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி. வரதராஜுலுவைத் தொடர்புகொண்டோம். சுருக்கமாக, விஷயத்தைக் கேட்டுக்கொண்டவர், முதல்வர் எடப்பாடி தலைமையில் சென்னையில் நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர்துறை அதிகாரிகள் மாநாட்டிலிருப்பதைச் சொல்லி, கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பி, நவல்பட்டு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் நமக்கு வேண் டிய உதவிகளைச் செய்வாரென ஆற்றுப் படுத்தினார்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் நம் லைனுக்கு வந்த இன்ஸ்பெக்டர், நம்மிடம் விவரத்தை விசாரித்து தெரிந்துகொண்டு, ""நான் துவாக்குடில இருக்கேன். 2 பேர் துணையோட மப்டில நாகமங்கலம் வந்துடுறேன்'' என்றார். அப்போது மாலை 6:40.
இன்ஸ்பெக்டர் நாகமங்கலம் வந்துசேர்வதற்காகக் காத்திருந்த நேரத்தில், மணி என்கிற அந்த மீடியேட்டரிடம் அப்ரைசர்கள் எப்படி அந்தப் பணப்பார்ட்டிகளிடம் சிக்கினார்கள் என விசாரித்தோம். அவர் நம்மிடம், “""சென்னையிலுள்ள ஓய்வுபெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்குத் தகவல்சொல்லி, திருச்சியிலுள்ள அ.தி.மு.க. பெரும்புள்ளியின் பழைய பணம் 4,000 கோடிய மாத்திக்கொடுக்க உதவி பண்ணுங்கனு சொன்னாங்க'' ’என்றார். இடையில் நாம் குறுக்கிட்டு, “""அதெப்படி மாற்றமுடியும். அதற்கான கால அவகாசம்தான் முடிந்துவிட்டதே. இது ஏமாற்றுவேலையா?''’என கேட்டோம். “""சாமானியமான நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவ்வளவுதான். ரிசர்வ் பேங்க் முதல்ல பழைய பணத்துக்குப் புதுப் பணம் கொடுத்தாங்க. ஆனா, இப்ப பழைய பணம் கொடுத்தா, நாம கொடுத்த பணத்தோட மதிப்புக்கு பாதியா புதுப்பணம் கொடுப்பாங்க. அந்த மீதிப் பணத்தை மத்திய அரசின் முக்கிய அதிகார மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள், ரிசர்வ்வங்கி உயர் அதிகாரிகள் பகிர்ந்துக்குவாங்க. இந்த பணம் மாற்றும் பிஸினஸ்தான் இப்ப வேகமா நடந்துக்கிட்டிருக்கு''’என்று மேலும் அதிர்ச்சி யூட்டினார்.
நாம் பேசிக்கொண்டிருக்கையிலே அந்த கேரள மீடியேட்டர் செல்போனுக்கு, சிறைப்பட்டிருக்கும் அமர்நாத்ரெட்டி செல்போனிலிருந்து "காதலூர்' என்று ஒரு குறுஞ்செய்தித் தகவல் வந்துவிழுந்தது. அத்தோடு போன் ஸ்விட்ச் ஆப்பானது.
தாமதமின்றி தகவலை இன்ஸ்பெக்டருக்குத் தெரிவித்தோம். நாகமங்கலம் வருவதற்கு முன்னதாக மணிகண்டன், ஜெகதீசன், பூபதி, மதியழகன் போன்ற எஸ்.ஐ.க்களையும் தலைமைக் காவலர் திருநாவுக்கரசு, தமிழ்வாசுதேவன், செந்தில்ராஜா, ஜெயக்குமார் என தனக்குக் கீழுள்ள அத்தனை பேரையும் வரவழைத்து, இரண்டு குழுக்களாகப் பிரித்தார்.
அதேநேரத்தில் குறுஞ்செய்தி வந்த செல்போனின் டவரை செக் பண்ணுவதற்கு எஸ்.பி. அலுவலக தனிப்பிரிவு ஸ்ரீதருக்கு விவரம் தெரிவித்தார். பின் தனது குழுவினரிடம், “""இந்த இரவு எதுவும் நடக்கலாம். கடத்தினவங்க எத்தனை பேர் இருக்காங்கனு தெரியாது. எதுக்கும் ஆயத்தமா இருங்க''’’ என தெரிவித்துவிட்டு, இரவு எட்டு மணியளவில் நாகமங்கலத்துக்குள் நுழைந்தார்.
இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுடன் இரண்டு காவலர்கள், நாமும் நமது சோர்ஸும், அந்த மீடியேட்டரும் இருந்தோம். இன்னும் இரண்டு எஸ்.ஐ.க்கள் தலைமையில் வேறு இரு டீம் வெவ்வேறு முனையிலிருந்து ஊருக்குள் நுழைந்தது.
அப்போதுதான் அமர்நாத் ரெட்டியின் செல்போன் டவர் லொக்கேஷன் குறித்துக் கேட்டிருந்த வாட்ஸ் அப் கேள்விக்குப் பதில் வந்தது. "மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர்' என்று பதில் வந்ததைப் பார்த்ததும் அவர் முகம் மாறியது. வண்டியை அவசரமாக நிறுத்தியவர், “""நீங்கள்லாம் எங்க தங்கியிருக்கீங்க, அந்த ரூமை புக் பண்ணினது யார்?''’எனக் கேட்டார்.
அதற்கு மீடியேட்டர்…""சார்… வந்து...''’எனத் தயங்க, கடுப்பான இன்ஸ்பெக்டர், “""நீங்க உண் மையைச் சொல்லலைனா, உங்ககூட வந்தவங் களுக்குதான் கஷ்டம்''’என்று பொரிந்துதள்ள... “""திருச்சி கரன்ஸி குரூப்தான் எங்களுக்கு சென் னையிலிருந்தே கார் புக் பண்ணி அழைச்சுவந்தது. எங்களுக்கு கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள நெல்லை நாடார் ஓட்டலிலும், அவங்களுக்கு பி.எல்.ஏ. ஹோட்டலிலும் ரூம் புக் பண்ணியிருந் தாங்க. நாங்க ஓய்வெடுத்துட்டு பி.எல்.ஏ. ஹோட்டலுக்குப் போனோம். அங்க ஒரு சின்ன மீட்டிங் முடிச்சுட்டு, எங்களை அங்கேயே இருக்கச் சொல்லிட்டு ரெக்கவரி கம்பெனி அப்ரைசர்கள மட்டும் அவங்களோட 0808-ங்கிற இனோவா கார்ல கொண்டுபோயிட்டாங்க. அதுக்கப்புறம்தான் அடைச்சுவெச்சுக்கிட்டு 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டினாங்க''’என அனைத்தையும் விரிவாக விளக்கினார்.
அனைத்தையும் கேட்ட இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ""நீங்க தங்கியிருந்த ஹோட்டல்களுக்குப் போவோம்''’என்றார். திரும்பிச்சென்று அந்த ஹோட்டல்கள் இரண்டையும் செக் செய்து முடித்தபோது, கடத்தப்பட்டிருந்த செல்வம் அறையில் விட்டுச் சென்றிருந்த செல்போன் ஒலித்தது. எடுத்துப் பேசிய மீடியேட்டரிடம், ""பணம் கேட்டு அடிக்குறாங்க.…எங்களை கடத்திட்டு வந்து அடைச்ச அதே இடத்துலதான் வெச்சிருக் காங்க''’என கதறினார் செல்வம். அப்போது, இன்ஸ்பெக்டர் சொல்லிக்கொடுத்தபடி ""பணம் ரெடிபண்ணிட்டிருக்கோம்... கவலைப்படாதீங்க,… தைரியமா இருங்க''’என்று பேசி சமாளித்தார் மீடியேட்டர்.
நாகமங்கலத்துக்குள் இறங்கித் தேடுவது என்ற முடிவுக்கு வந்த சுப்பிரமணியன், தனது போலீஸ் படையுடன் மீண்டும் ஊருக்குள் நுழைந்தார். அந்தப் பகுதியையே சல்லடைபோட்டு சலித்தார். பண்ணை வீடு, சந்தேகத்துக்குரிய மறைவிடங்கள் ஏதாவது அப்பகுதியிலிருக்கிறதா என உற்றுக்கவனித்தார். அதேசயம் கடத்தல்காரனிடமிருந்து மீண்டும் மீடியேட்டருக்கு போன் வந்தது. “""பணம் ரெடியாகிடுச்சு, எங்கவந்து கொடுக்க''’என கேட்டார் மீடியேட்டர்.
""திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்குப் பக்கத்துல இருக்க ஆனந்த் ஹோட்டலுக்கு வா. நீ வர்ற கார் நம்பரை எனக்குச் சொல்லு. தில்லுமுல்லு வேலை எதுவும் பண்ணக் கூடாது''’என அதிகாரத் தோரணையில் எச்சரித் தான் மறுமுனையில் பேசியவன். சுதாரித்த இன்ஸ் பெக்டர் வண்டியை அங்கே விடச்சொன்னார். ஹோட்டலுக்கு சற்றுமுன்பே காரை நிறுத்தி நம்மை இறக்கி விட்டுவிட்டு, டிரைவரிடம் "ஹோட்டல் அருகே காரை நிறுத்திட்டு, நீங்க கொஞ்சதூரம் தள்ளி நில்லுங்க. நான் காருக்குள்ள இருந்துக்கிறேன்' என்றதுடன் மீடியேட்டரிடமும் தனியாக சில விவரங்கள் சொன்னார்.
மீடியேட்டர் மணி ஹோட்டலுக்கு அருகில் நின்றுகொண்டிருக்க, நள்ளிரவு 12:20-க்கு அவரை நெருங்கி "பணம் எங்கே?' என கேட்டனர் இரண்டு பேர். "காரில் இருக்கு' என அவர் பதிலளிக்க, பணத்தை எடுத்துக்கொள்ள வந்தவர்களை போலீஸ் படை துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்தது. போலீஸ் கவனிப்புடன் கூடிய விசாரிப்பில் தங்கள் பெயர் சந்திரசேகர், யுவராஜ் எனவும் பி.எல்.ஏ. ஹோட்டலில் அறை எண் 314, 317-ல் தங்கியிருப்பதாகவும் சொன்னார்கள்.
அதற்கப்புறம் நடந்ததெல்லாம் மின்னல் வேகம்தான். ஹோட்டல் மானேஜரிடம் போலீஸ் விசாரித்தபோது, "அவர்கள் 20 நாட்களாக ஹோட்டலிலேயே தங்கியிருப்பதாகச் சொன்னார். அவர்களிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் குரூப்பின் தலைவன் விக்னேஷுக்கு இன்ஸ்பெக்டர் போன் பண்ண, “""நாங்க யாரையும் கடத்தல. கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்துக்கு எல்லாரையும் கூட்டிட்டு வர்றோம்''’ என ஏகப்பட்ட உளறலுடன் சொல்லிமுடித்தான் குரூப்பின் தலைவனான விக்னேஷ். பி.எல்.ஏ. ஹோட்டலின் கீழ்த்தளத்திலேயே அப்ரைசர் களைக் கடத்திய காரும் பிடிபட் டது. அப்புறமென்ன சேஸிங்...… ரவுண்ட்- அப்...… அரெஸ்ட்தான்.
அடுத்த சிலமணி நேரத்துக் கெல்லாம் விக்னேஷ், ஸ்கார்பியோ செக்யூரிட்டி அந்தோணி சிக்கினர். கோயமுத்தூரிலிருந்து வந்திருந்த சந்திரசேகரன், ராஜேந்திரன், யுவராஜ் ஆகியோரும் சிறையி லடைக்கப்பட்டனர். அப்ரைசர்கள் அமர்நாத் ரெட்டி, செல்வம் இருவரும் மீட்கப்பட்டனர்.
போலீஸ் சடங்குகள் முடிந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, விக்னேஷின் பின்னணியை விவரித்தார். ""பணமதிப்பிழப்பு நடந்த நாளிலிருந்தே திருச்சியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ், "எங்களிடம் பெரும் பணம் இருக்கிறது' என புரோக்கர்கள் மூலம் தூண்டில்போடுவான். பண ஆசையில் வருகிறவர்களின் குழுவிலிருந்தே ஆட்களைக் கடத்தி பணத்தைப் பிடுங்குவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறான். இந்தமுறை சிக்கிவிட்டான்'' என்றார்.
நக்கீரன் மேற்கொண்ட முயற்சியால் ஒரு கொள்ளைக்கும்பலை அதிரடியாக மடக்கியிருக் கிறது காவல்துறை. இன்ஸ்பெக்டர் டீமுக்கும், ஐ.ஜி.க்கும் நாம் நன்றி தெரிவித்த அதே நேரத்தில், இன்னும் எத்தனை கும்பல்கள் எந்தெந்த இடங்களிலோ என்ற பீதியும் உருவானது.
-ஜெ.டி.ஆர்.