ப்போதும் தீக்குளிப்பு முயற்சிகளை போலீஸார்தான் தடுப்பார்கள். ஆனால், சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்திற்குள், பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற இரண்டு போலீஸ்காரர்கள் கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

Advertisment

casteinpolice

மார்ச் 15-17 நக்கீரன் இதழில், தேனி எஸ்.பி. பாஸ்கரனின் சாதிப் பாசத்தையும், எஸ்.பி.க்கு எதிராக தேனி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதையும், நீதிபதி எச்சரித்ததையும் "வந்த செய்தி விசாரித்த உண்மை' பகுதியில் எழுதியிருந்தோம்.

அதே எஸ்.பி.யின் அதே சாதிய செயல்களால் பாதிக்கப்பட்ட அவருக்குக் கீழே ஆயுதப் படையில் பணிபுரிந்த காவலர்கள் ரகுவும், கணேசனும், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்தார்கள் எஸ்.பி.பாஸ்கரன் மீதான தங்கள் புகார் மனுவை கொடுத்தார்கள். கொடுத்துவிட்டு வெளியே வந்த இருவரும் காம்பவுண்ட் சுவரோரம் மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் பெட்ரோலை தங்கள் தலையில் ஊற்றிக் கோஷமிட்டபடியே தீயைப் பற்ற வைத்துக்கொள்ள முயன்றார்கள். அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மின்னல் வேகத்தில் தடுத்து அவர்களைக் காப்பாற்றினர்.

Advertisment

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட தேனி எஸ்.பி. பாஸ்கரன் உடனே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ""அந்த ரகு, கைதிகளை கோர்ட்டுக்குக் கூட்டிச் செல்லும் போது, கஞ்சா வாங்கிக் கொடுத்தார். கணேசன் என்பவர் டூட்டிக்குப் போகாமல் "ரேக்ளா' ரேசில் கலந்து கொண்டார். அதனால்தான் ராமநாதபுரத்துக்கு டிரான்ஸ்பர் செய்தோம். சாதிரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று அவசரப் பேட்டி கொடுத்தார்.

தேனி மாவட்ட ஆயுதப்படை வட்டாரத்தில் இதுபற்றி விசாரித்தோம்...

""எஸ்.பி. பாஸ்கரன் நாயக்கர் சாதிக்காரர். அதேசாதி ஆர்.ஐ. சீனிவாசன் எஸ்.பி.க்கு ஆல் இன் ஆல். எஸ்.பி. தேனிக்கு வந்ததும் யார், யார் தன் சாதிக்காரர்கள் என்று தேடிப்பார்த்து, திருப்பதி, பாண்டுரங்கன், கனி, சக்கப்பன், சரண்யா, ராஜா, செந்தில், மணிகண்டன் என 16 பேரை முக்கிய பொறுப்புகளில் நியமித்துக்கொண்டார். வேறு சாதிக்காரர்களை ஓரம்கட்டிவிட்டார். எஸ்.பி.க்கு எதிராக கண்டன போஸ்டர் அடித்து ஒட்ட காரணம் ரகுவும், கணேசனும், ஜெகதீசனும், தினேஷ்குமாரும்தான் என எண்ணிப் பழிவாங்கும் விதமாகத்தான் நால்வரையும் ராமநாதபுரத்துக்கு தூக்கியடித்தார்'' என்கிறது தேனி ஆயுதப்படை வட்டாரம்.

பாதிக்கப்பட்ட காவலர்கள் முதல்வர் தனிப்பிரிவு, டி.ஜி.பி., உளவுத்துறை, ஐ.ஜி., கலெக்டர், டி.ஐ.ஜி. என பலருக்கும் புகார்களை அனுப்பிவிட்டு, கடைசியாக உயிரைவிடத் துணிந்த இருவரையும் விசாரித்த சென்னை மெரினா போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

தேனி மாவட்ட நிலவரம் போல இன்னும் பல மாவட்ட நிலவரங்கள் உள்ளன.

-சக்தி