கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் சென்னை -சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன். கடந்த 28-ஆம் தேதி காலை, வழக்கம் போல் க்ரீன்வேஸ் சாலையில் இருக்கும் அமைச்சரின் இல்லத்திற்குச் சென்று, காரை சுத்தப்படுத்திவிட்டு காத்திருக்கிறார். தலைமைச் செயலகம் செல்வதற்காக, அமைச்சர் காரில் ஏறியதும் வண்டியை ஸ்டார்ட் பண்ணிய போது, திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலியால் துடித்திருக்கிறார் சவுந்தரராஜன்.
இதைப் பார்த்த அமைச்சர் மணியன், அங்கிருந்த ஊழியர்களிடம், சவுந்தரராஜனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறி பணமும் கொடுத்துவிட்டு, முதல்வரை சந்திக்க வேண்டிய அவசரத்துடன் புறப்பட்டுவிட்டார். அங்கிருந்த ஒருவருக்குக்கூட 108 ஆம்புலன்சுக்கு போன் பண்ணவேண்டும் எனத் தெரியவில்லை. ஒரு காவலர் மட்டும் தனது பைக்கில் சவுந்தரராஜனை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குப் போகும் வழியில், பைக்கில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்துவிட்டார் சவுந்தரராஜன்.
டிரைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்தனர் சவுந்தரராஜனின் உறவினர்கள். பின்னர், தன் தரப்பு நியாயத்தை மீடியாக்களிடம் தெளிவாக விளக்கினாôர் அமைச்சர் ஓ.எஸ்.எம். விளக்கங்களால் உயிர் திரும்புமா?
ஆறு வயது மகனுடன் பரிதவிக்கிறார் சவுந்தரராஜனின் மனைவி ரேவதி.
-செல்வகுமார்