காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் பந்த் நடத்திய அன்று குரோம்பேட்டை அருகே எதிர்பாராமல் ஒரு விபத்து நடந்தது. அந்த விபத்தில் சிக்கிய கார்த்திகேயன் என்ற போலீஸ்காரர் விரல்கள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டதும் பொறிதட்டியது.

Advertisment

adgp-daughter

ஆம். அந்த போலீஸ்காரர் வேறு யாருமில்லை. சில நாட்களுக்கு முன் நீலாங்கரை கடற்கரையில் ஏ.டி.ஜி.பி. தமிழ்ச்செல்வனின் மகளால் மிரட்டப்பட்ட கான்ஸ்டபிள் கார்த்திகேயன்தான்.

நீலாங்கரையில் பணிபுரிந்த அவருக்கு பந்த் அன்று மெரினாவில் டூட்டி போட்டார்கள். குரோம்பேட்டையில் உள்ள தனது வீட்டிலிருந்து மெரினாவுக்கு செல்லும் வழியில், கிண்டி அருகே அவர் விபத்தில் சிக்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisment

""பலத்த சத்தம் கேட்டது. அவர் சாலையின் நடுவே தூக்கிவீசப்பட்டார். என்ன நடந்தது என்றே அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. உடனே அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருடைய விரல்கள் உடைந்திருப்பது தெரியவந்தது'' என்கிறது போலீஸ் வட்டாரம்.

கார்த்திகேயன் பணிபுரியும் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு சென்றோம். அவருடன் பணிபுரிந்தவர்களும், இன்ஸ்பெக்டரும் சரியான பதில் சொல்லாமல் மழுப்பினார்கள். அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையையும் சொல்ல மறுத்தார்கள். டூட்டிக்கு போயிருக்கிறார் என்றார்கள். எங்கே டூட்டி என்று கேட்டால் அதையும் மாற்றிச் சொல்லி மழுப்பினார்கள்.

போலீஸ்காரர் கார்த்திகேயன் ஏ.டி.ஜி.பி. மகள் மற்றும் மனைவியால் கொடூரமாக மிரட்டப்பட்டிருக்கிறார். அந்த மிரட்டலின் தொடர்ச்சிதான் இந்த விபத்து என்று சில காவல்துறையினர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

போலீஸ் வீட்டு வசதிக் கழக ஏ.டி.ஜி.பி. தமிழ்ச்செல்வனின் மகள் வள்ளிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனஉளைச்சலை தனது ஆண் நண்பருடன் பகிர்ந்துகொள்ள கடந்த திங்கள்கிழமை நீலாங்கரை கடற்கரைக்கு காரில் வந்திருக்கிறார்.

இருவரும் மது அருந்தியபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அந்தப் பகுதியில் இரவுக் காவலில் ஈடுபட்டிருந்த கார்த்திகேயன் அவர்களை விசாரித்திருக்கிறார். சட்டம்- ஒழுங்கு மற்றும் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணிபுரியும் அவர், வள்ளியை விசாரித்திருக்கிறார்.

policestation

கடலுக்கு மிக அருகில் காரை நிறுத்தி இருந்ததால், “""நீங்கள் யார்? எந்த ஊர்? இங்கு மது அருந்தக் கூடாது. இரவு நேரம் ஆகிவிட்டது. இங்கிருந்து செல்லுங்கள்'' என கூறியிருக்கிறார்.

ஆனால், கார்த்திகேயன் சொன்னதை காதில் வாங்காமல், மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டே கை சைகையால் இடத்தைவிட்டு நகரும்படி கூறியுள்ளார். பின்னர், ஒரு வாழைப் பழத்தை தின்று கொண்டே காவலரை முறைத்துள்ளார்.

கார்த்திகேயன் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் இடத்தைக் காலிசெய்யும்படி கூறியதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற வள்ளி "வேலையை விட்டே தூக்கணுமா' என கான்ஸ்டபிளை மிரட்டினார்.

(வள்ளியின் இந்த அத்துமீறலை வீடியோ எடுத்தார் கார்த்திகேயன். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளிவந்தது.)

பின்னர், தனது அம்மாவுக்கு போன் செய்த வள்ளி, நடந்த விவரத்தை சொல்லி விட்டு தனது போனை கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார். போனில், ஏ.டி.ஜி.பி.யின் மனைவி அவரை மிரட்டிய வார்த்தைகள் படுபயங்கரம்.

"அந்த வீடியோவை டெலிட் செய்யவில்லை என்றால் உன்னை காலி செய்துவிடுவேன். உன் வேலையை காலி செய்துவிடுவேன். உன் குடும்பமே இருக்காது. உன் நம்பர் என்ன? உன் பெயர் சொல்' என மிரட்டி உள்ளார்.

அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் போனை வள்ளியிடமே கொடுத்து விட்டார் கார்த்திகேயன். பின்னர் காலை விடிந்ததும் மேல் அதிகாரிகள் மூலம் மறைமுகமாக மிரட்டல் வரவே, தன்னை காப்பாற்றிக் கொள்ளவே வீடியோவை வெளியிட்டுள்ளார். உயிருக்கு குறி வைத்து தொடர்ந்து கொலைமிரட்டல் வந்த நிலையில், அவரை தூத்துக்குடிக்கு மாற்றும் முயற்சிகளும் வேகமெடுத்தன.

இந்நிலையில், கார்த்திகேயனின் மர்மமான விபத்து, அவரைப் பற்றி அவருடைய அதிகாரிகள் தெரிவிக்கும் குழப்பமான தகவல்கள் சக காவலர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது. கார்த்திகேயனின் மனைவியும் காவலர்தான்.

காவலர் குடும்பங்கள் தங்கள் உயரதிகாரிகளின் குடும்பத்தாரால் பீதியில் உறைந்துள்ளன.

-மகி, அருண்பாண்டியன்