பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடனின் திடீர் மறைவு, திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. புலவர் புலமைப்பித்தனை இழந்த துயரம் ஆறுவதற்குள் அடுத்த இழப்பைச் சந்தித் திருக்கிறது திரையுலகம்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த பிறைசூடனின் இயற்பெயர் சந்திரசேகரன். இளம் வயதிலேயே ஜோதிட ஆராய்ச்சியில் மூழ்கியவர் பிறைசூடன். "இயக்குநர் சிகரம்' பாலசந்தரின் ஊர்க் காரரான பிறைசூடன், அவருக்கு ஒருமுறை ஜோதிடப் பலன்களைச் சொல்ல, அதில் வெளிப்பட்ட கவித்துவம், பாலசந்தரை பெரிதும் ஈர்த்தது. அதனால், "நீங்கள் என் படத்துக்குப் பாட்டெழுதுங்கள்' என்று பிறைசூடனை அவர் சென்னைக்கு அழைத்தார். அதே நேரத்தில், அவருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி தேடிவர... அதை ஓரம்கட்டிவிட்டு சென்னைக்கு வந்தவரை, கோடம்பாக்கம் கைவிடவில்லை.
"ராஜாதி ராஜா' படத்தில் இடம்பெற்ற ’"மீனம்மா மீனம்மா', "கேப்டன் பிரபாகரன்' படத்தில் இடம்பெற்ற "ஆட்டமா தேரோட்டமா?'’உள்ளிட்ட துள்ளல் பாடல்கள் அவரது பெயரை எல்லாத் திசைகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தன. அதேபோல் "என் ராசாவின் மனசிலே' படத்தில் இடம்பெற்ற ‘"சோலப் பசுங்கிளியே...'’ போன்ற அவரது இதமான பாடல்கள், எண்ணற்ற இதயங்களைத் தாலாட்டின. எளிமையாய் எல்லோரிடமும் பழகும் தன்மை கொண்ட பிறைசூடன், ஏறத்தாழ ஆயிரம் படங்களுக்கு மேல், 5 ஆயிரம் பாடல்கள்வரை எழுதி தனக்கென ஒரு இடத்தை அமைத்துக்கொண்டார். கதை -வசனம் -நடிப்பு என்று திரையுலகில் பல தளங்களிலும் முத்திரை பதித்த பிறைசூடன், சிறந்த சொற்பொழி வாளராகவும் திகழ்ந்தார். அதனால், பல நாடுகளுக்கும் சென்று உலகத் தமிழ் மக்களின் இதயங்களிலும் இடம் பிடித்திருக்கிறார்.
தனது பாடல்களுக்காக தமிழக அரசின் விருது, மற்றும் "கலைச்செல்வம்' விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற பிறைசூடனுக்கு, "மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி. "கவிஞானி' பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த பிறைசூடன், அண்மையில் "ஆஸ்கர்' விருதுக்கு இந்திய திரைப்படங் களை பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றார்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மாலை, தனது குடும்பத்தினருடன் இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென மயங்கி விழுந்து மரணத்தைத் தழுவியிருக்கிறார். திரையுலத்தினர் உட்பட பலரும் அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.
பிறைசூடனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனி இடம் பிடித்த கவிஞர்' என்று அவருக்குப் புகழாரம் சூட்டியதோடு, நேரிலும் சென்று பிறைசூடனுக்கு அஞ்சலி செய்தார்.
விவசாயக் குடும்பத்தில் இருந்து பாடல் எழுத வந்த கவிதை விவசாயி பிறை சூடனின் விதைப்புகள், காற்றும் இசையும் உள்ள வரை விளைந்திருக்கும்.