டாக்டர்கள் பலரும் சிகிச்சையின்போது நாங்கள் ஜெ.வை பார்க்கவில்லை என்று வாக்குமூலம் தருகிறார்கள். ஜெ.வின் உதவியாளர்களோ, "நாங்க பார்த்தோம். எங்களிடம் ஜெ. பேசினார்' என்ற ரீதியில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். குழப்பத்தில் இருக்கிறது விசாரணைக் கமிஷன்.
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனுக்கு ஒரு போலீஸ் படை ஒதுக்க அரசு பரிசீலிப்பதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஆணையம் பயணிக்கும் திசைப்போக்கு புரிபடத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு தொற்றியிருக்கிறது.
பொதுவாக எந்த ஒரு விசாரணை ஆணையத்திற்கும் போலீஸ் படை ஒதுக்கப்படுவதில்லை. லோக் அயுக்தாவுக்குத்தான் போலீஸ் படை ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை எந்தவொரு விசாரணை ஆணையத்திற்கும் இல்லாத அளவுக்கு, நீதிபதி ஆறுமுகசாமி "தனது உதவிக்கு டி.எஸ்.பி. தலைமையிலான போலீஸ் படை தேவை' என்று அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அவருடைய கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசும் கூறியிருக்கிறது.
எதற்காக இந்த போலீஸ் படை? போலீஸ் உதவியுடன் ஆணையம் எதை விசாரிக்கப்போகிறது என்று துருவியபோது ஒரு உண்மை புரிந்தது. அதாவது ஜெயலலிதாவை சசிகலா கொன்றுவிட்டார் என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்கள் 320. அதுதவிர, மற்ற பகுதிகளில் இதேபோன்ற 140 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புகார் கொடுத்த இத்தனை பேரையும் ஆணையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை. விசாரணையை முடிக்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ளநிலையில், இந்த புகார்களைத் தூசுதட்டி எடுத்து போலீஸ் படை உதவியுடன் விசாரித்து வாக்குமூலம் பெற நீதிபதி ஆறுமுகசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர்களை குறுக்குவிசாரணை செய்ய சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் அனுமதி கோரியிருக்கிறார்.
அவர்களிடம் குறுக்குவிசாரணை நடைபெற்றால், அதைப் பார்வையிட பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் தரப்பில் நீதிபதி ஆறுமுகசாமியிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்த ஆணையம் ரகசிய விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டது என்பதால் அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. பத்திரிகையாளர்களை அனுமதித்தால் ரகசியங்கள் வெளியாகிவிடும் என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக ஆறுமுகசாமி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் "ஜெயலலிதாவுக்கு அதிக அளவில் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் அவர் இறந்தார்' என்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் கூறியிருந்தார். அதாவது, ஜெயலலிதாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை கொடுக்கப்பட்ட வரை, அவர் உற்சாகமாக பிரச்சாரத்துக்கு சென்றுவந்தார். ஆனால், ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்ட பிறகுதான் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது' என்று தெரிவித்திருந்தார். அவரையும் ஆணையம் விசாரிக்க திட்டமிட்டிருக்கிறது. அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா மாரடைப்பால் இறந்த அன்று அவரை பார்வையிட்ட அரசு மருத்துவர் தினேஷுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டிருக்கிறது.
ஆக, இந்த ஆணையத்தின் விசாரணைப் போக்கு முழுக்க முழுக்க சசிகலா மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே பயணிப்பதாக தோன்றுகிறது. இதற்காகத்தான் ஆறுமுகசாமி ஆணையத்தின் அலுவலராக கோமளா என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான பாபு என்பவரின் மனைவி என்கிறார்கள். இவரும்கூடத்தானே விரும்பி இந்தப் பணிக்கு வந்தாராம்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சுமார் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்தது. அந்த ஆவணங்களை ஆணையத்திற்கு விளக்குவதற்காக ஒரு மருத்துவர் குழுவை அமைக்கும்படி ஆறுமுகசாமி கோரியிருந்தார். ஆனால், அந்த குழுவை அரசு இதுவரை அமைக்கவில்லை. ஆனால், சசிகலாவுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார்களை தூசுதட்டி எடுத்து போலீஸ் உதவியுடன் விசாரித்து வாக்குமூலம் பெற ஆணையமும், அரசும் தயாராகிறது என்றால், சசிகலாவை குற்றவாளியாக்கும் நோக்கத்தை இலக்காகக் கொண்டே ஆணையம் பயணிக்கிறது என்கிறார்கள்.
ஆணையத்தின் நோக்கத்தை புரிந்துகொண்டுதான், ஒரு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்த சசிகலா, "ஜெயலலிதா வீட்டில் வேலை செய்த ஆட்களையும், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியான வீரப்பெருமாளையும் ஆணையத்தில் ஆஜராகி, ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்று பல்வேறு தகவல்களை கூறும்படி செய்கிறார்' என்கிறார்கள்.
தனக்கு எதிராக ஆணையமும் அரசும் திட்டமிடும் சதிகளை முறியடிக்கும் விதமாக பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் மூலமாக சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இறுதியாக, ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பதற்கு ஆதாரமாக தன்னிடம் இருக்கிற வீடியோக்களையும் சசிகலா கடைசி ஆயுதமாக பயன்படுத்துவார் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
ஜெ. மரணத்துக்கு யார் -என்ன காரணம் என்ற உண்மை எப்போது முழுமையாக வெளிப்படுமோ?