ஜெ. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு 60 சதவிகிதம் உடம்பு கெட்டுப் போய்விட்டது. அவருக்கு 40 சதவிகிதம்தான் நல்ல உடல்நிலை இருந்தது. ஜெ.வின் உடல்நிலை 60 சதவிகிதம் எப்படி கெட்டது என்பதுதான் ஜெ.வின் மரணத்தைப் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனின் நோக்கமாக மாறிவிட்டது என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.
உடல்நல பாதிப்பால் ஒருவாரம் விசாரணைக் கமிஷனை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி ஆறுமுகசாமி. இந்த விசாரணை கமிஷனின் விசாரணைக் காலம் கடந்த டிசம்பர் மாதமே முடிந்திருக்க வேண்டும். வரும் ஜூலை மாதம் வரை விசாரணைக் கமிஷனின் காலகட்டத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. ஆனால் விசாரணைக் கமிஷன் முன்வைக்கும் எந்த கோரிக்கைக்கும் தமிழக அரசு செவிமடுக்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனை ஜெ.வுக்கு தினசரி அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றி 4,000 பக்கங்களுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. அதில் 22-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற அப்பல்லோவின் டாக்டர்களும் எய்ம்ஸ் டாக்டர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
அந்த மருத்துவக் குறிப்புகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மருத்துவ குறிப்பில் சொன்னபடி ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? அப்படி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது சரியா? ஒருவேளை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் ஏற்பட்ட தவறுகளின் காரணமாக ஜெ.வுக்கு இருதய அடைப்பு ஏற்பட்டதா? அதனால் அவர் மரணமடைந்தாரா? இப்படி ஏகப்பட்ட சந்தேகங்களை நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பினார். அதை அரசுக்கு கடிதமாக எழுதினார். நீதிபதியின் சந்தேகங்களை தீர்க்க மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படும் என தமிழக அரசு விசாரணைக் கமிஷனுக்கு தெரிவித்தது.
ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோவின் டாக்டர்கள், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரிச்சர்ட் பீலே உட்பட வெளிநாட்டு மருத்துவர்களை சம்மன் செய்து அழைக்கலாம் என திட்டமிட்ட ஆணையம் அதற்காக அப்பல்லோவின் மருத்துவக் குறிப்புகளை விளக்கும் மருத்துவர்கள் குழுவை தமிழக அரசு அமைக்கும் என காத்திருந்தது.
கமிஷனின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக, 2016 டிச.5-ம் தேதி என்ன நடந்தது என விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் 2011-ம் ஆண்டு சசிகலாவை ஏன் ஜெ. வெளியேற்றினார். அப்போது சசிகலாவின் கணவர் நடராஜன் முதல்வராக விரும்பினாரா? ஜெ.வின் உடல்நலம் நல்லநிலையில் இருந்தால் அவர் நீண்ட நாட்கள் தமிழக முதல்வராக நீடித்திருப்பார் என்பதால் அவரை மெல்ல கொல்லும் விஷம்- அதாவது ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதா? ஜெ.வின் உடலில் ஏற்பட்ட தோல் நோய்களுக்காக செலுத்தப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளை ஜெ. தானாக வாங்கினாரா? போன்ற கேள்விகளுக்கு ஆறுமுகசாமி தலைமை தாங்கும் விசாரணைக் கமிஷன் விடை தேடுகிறது.
ஜெ.வுக்கு நெருக்கமாக இருந்த போலீஸ் அதிகாரிகளிடமிருந்து ஜெ.வுக்கும் சசிக்கும் இடையேயான மோதல் பற்றி ஒரு விரிவான அறிக்கை கிடைத்தால் போதும் விசாரணை கமிஷன் தனது வேலையை முடித்துக் கொள்ளும். சசிகலா குடும்பத்தினருக்கு முதல்வர் பதவி மீது ஆசை இருந்ததால் ஜெ.வுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டிருக்கலாம் என ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை அளிக்க அதை சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாசிக்கத் தயாராகி வருகிறார் என்கிற தகவல் சிறை திரும்பிய சசிகலாவை டென்ஷனாக்கியுள்ளது.
ஜெ. நன்றாகத்தான் இருந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதை ஜெ.வின் தனிப்பட்ட வேலைக்காரர்களை கமிஷனில் ஆஜர்படுத்தி தெரிவிக்கச் செய்த சசிகலா, அதனை வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலமாக ஊடகங்களில் லீக் செய்து வருகிறார். சசிகலாதான் மரணத்துக்குக் காரணம் என 2011-ம் ஆண்டு சசிகலாவுக்கும் ஜெ.வுக்கும் இடையில் நடந்த மோதல் பற்றிய காவல்துறை பதிவுகளை எந்த அதிகாரியாவது கொண்டு வந்து கொடுத்தால் விசாரணை முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான் கமிஷன் தரப்பிலிருந்து சசிகலாவுக்கு அவரது சமூகத்தார் மூலம் கிடைத்துள்ள தகவல் என்கிறது சொந்த பந்தம்.
இன்றோ நாளையோ கவிழலாம் என்ற நிலையில் இருக்கும் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக சசிகலாவை பகைத்துக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் யாரும் தயாராக இல்லை. ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜரான ராமானுஜம், அம்ரேஷ் பூஜாரி, திரிபாதி, தாமரைக்கண்ணன் ஆகியோர் சசிகலாவுக்கு எதிராக பெரியளவில் கருத்து எதுவும் சொல்லவில்லை. அதனால் அவர்களை மறுபடியும் சம்மன் அனுப்பி விசாரிக்கலாமா? என விசாரணைக் கமிஷனும் எடப்பாடியும் ஆலோசிக்கிறார்கள். அப்படி அவர்கள் திரும்ப வந்தால் அவர்களை குறுக்கு விசாரணை செய்வோம் என சசிகலா தரப்பும் தீவிரமாக உள்ளது. இப்படி ஒரு ஆடு-புலி ஆட்டம்தான் விசாரணைக் கமிஷனில் நடந்து கொண்டிருக்கிறது.