"ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் அரங்கேறும் காட்சிகள், எந்த நோக்கத்திற்காக விசாரணைக் கமிஷன் உருவாக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி ஒருவித கேலிக் கூத்துகள் அரங்கேறும் இடமாக மாறிவருகிறது' என்கிறார்கள் ஜெ.வின் விசுவாசிகளான அ.தி.மு.க. தொண்டர்கள்.

விசாரணைக் கமிஷன் அமைப்பதற்கு முன்பு ஜெ.வின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதி இடம் பெறும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஜெ. மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் கோரிக்கையோடு 307 புகார்கள் பதிவாகியிருந்தன. சசிகலாதான் ஜெ.வின் மரணத்திற்கு காரணம் என பெரும்பாலான அளவில் பதிவான அந்தப் புகார்களோடு விசாரணையை ஆரம்பித்த ஆணையம் இன்று வரை சசிகலாவை விசாரிக்கவே இல்லை.

jayaleg

சசிகலாவை ஆணையம் விசாரிக்க முற்படும்போது சசிகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஏற்கனவே வந்த 307 புகார்களோடு ஜெ. தீபா, மாதவன், மனோஜ்பாண்டியன் போன்றோர் "சசிகலாவே ஜெ.வின் மரணத்திற்கு காரணம்' என கொடுத்த சாட்சியங்களின் விவரமும் வேண்டுமென கேட்டார். ஜனவரி மாதம் 5-ம் தேதி சசிக்கு எதிரான சாட்சியங்களின் பட்டியல் அவரது வழக்கறிஞரிடம் அளிக்கப்பட்டது. ஜனவரி மாதம் 12-ம் தேதி அவர்கள் சசிக்கு எதிராக அளித்த சாட்சியங்களின் விவரங்களும் ஆணையத்தால் வழங்கப்பட்டது.

Advertisment

அதன்பிறகும் சசி சாட்சி சொல்லவேயில்லை. சசியின் வழக்கறிஞர், சசி சார்பில் ஏற்கனவே சசிக்கு எதிராக சாட்சி அளித்தவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரினார். அதற்கு பதிலளித்த நீதிபதி ஆறுமுகசாமி, ""குறுக்கு விசாரணை செய்ய நேரமில்லை. கமிஷன் 3 மாதத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்றுதான் முதலில் அமைக்கப்பட்டது. தற்பொழுது ஆறு மாதம் என கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. விரைவில் பிரமாண பத்திரங்கள் மூலம் பதில் சொல்லுங்கள். ஆணையம் முடிவு செய்தால் பரப்பன அக்ரஹாரா சிறைக்கே சென்று விசாரணை செய்யும்'' என எச்சரிக்கை விடுத்தார்.

அந்த எச்சரிக்கையை சசிகலா தரப்பு கண்டுகொள்ளவில்லை. அதற்கு நேர்மாறாக ஒட்டுமொத்த ஆணையத்தையும் முடக்கிப் போட அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார் என்கிறது மன்னார்குடி வட்டாரம். ஆணையத்தில் ஆஜரான பூங்குன்றன் ஜெ.வைப் பற்றி தெரிந்த வேலைக்காரர்கள் 33 பேரை சாட்சியாக விசாரிக்குமாறு கோரினார். அதனடிப்படையில்தான் சமையல்காரப் பெண்மணி ராஜம், டிரைவர்கள் கண்ணன், ஐயப்பன் என ஒவ்வொருவராக சாட்சியம் அளித்து வருகிறார்கள்.

jaya-aliceமுன்பு போயஸ் கார்டனில் வசித்து வந்த பூங்குன்றன் தற்பொழுது டி.டி.வி. தினகரனின் அடையாறு வீட்டில் பணிபுரிகிறார். சமீபத்தில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் பப்ளிஷராக நியமிக்கப்பட்டார். பூங்குன்றனும் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியும் ஜெ.வின் வேலைக்காரர்களை சாட்சியம் முன்பு கொண்டு வருகிறார்கள். வழக்கறிஞருடன் விசாரணைக் கமிஷனில் ஆஜராகும்போது ரகசிய டேப் ரெக்கார்டர்களுடன் வருகிறார்கள். சாட்சியம் முடித்து வெளியே வந்ததும் 2,000 ரூபாய் கட்டுகளை பூங்குன்றன் அவர்களுக்கு வழங்குகின்றார். அதனால்தான் வாங்குகிற காசுக்கு மேலே அதிகமாக கூவுகிறார்கள் வேலைக்காரர்கள்.

Advertisment

ராகுல்காந்தி, அருண்ஜெட்லி, தமிழக கவர்னர், தமிழக அமைச்சர்கள் என யாரும் சிகிச்சையின் போது பார்த்திராத ஜெயலலிதாவை "நாங்கள் பார்த்தோம்' என ராஜம், டிரைவர் கண்ணன் ஆகியோர் சொன்னார்கள். ""அந்தம்மாவை பார்த்தால் இன்பெக்ஷன் என்றுதான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்றார்களே என நீதிபதி ஆறுமுகசாமி அதிர்ந்து கேட்க, ""அந்தம்மா நல்லா சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க, நாங்க பார்த்தோம். அவங்களும் எங்களை பார்த்தாங்க, சிரிச்சாங்க, பேசினாங்க'' என அடுக்கி கொண்டே போனார்கள்.

வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவில் ஜெ. சுயநினைவுடன் குளிர்பானம் குடிப்பதாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல் ஜெ. நன்றாக இருந்தார். திடீரென இறந்தார் என மெய்ப்பிக்கத் தான் வேலைக்காரர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது மன்னார்குடி வட்டாரம். போயஸ் கார்டனில் இருந்த வேலைக்காரர்கள் எல்லாம் ஜெ., சசி, இரண்டுபேருக்குமே விசுவாசமானவர்கள். அவர்களில் ஒருவர்தான் ஐயப்பன். இவரது மனைவி பெயரையே ஜெயலலிதா என மாற்றி வைத்துக் கொண்டவர். இவரது மனைவியும் போயஸ் கார்டன் ஊழியர்தான். ஜெ.வை காரில் எறி அமர வைப்பது மனைவியின் வேலை.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் சாட்சியம் அளித்து விட்டு வந்து நிருபர்கள் கேட்காமலே பேசத் தொடங்கினார். ""ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுய நினைவின்றி இருந்தார்'' என சொன்ன அப்பல்லோ மருத்துவமனை குறிப்புகள் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதற்கு நேர்மாறாக சாட்சியமளித்த ஐயப்பன், ""ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கால் மணி நேரத்தில் பேசினார். நான் ஜெ.வை மூன்று முறை பார்த்தேன். ஒருமுறை அவர் என்னை புரிந்து கொண்டு தலை அசைத்தார். ஜெ.வின் கை, கால் விரல்கள் துண்டிக்கப்பட்டது என்பது தவறான தகவல். ஜெ.வின் மரணத்திற்குப் பிறகு கை, கால் விரல்களை நான்தான் கட்டினேன். சசிகலா ஜெ.வை கொல்லவில்லை. சசிகலாவின் உண்மை ஜெயிக்கும்'' என்றார். அடுத்த சாட்சியாக இன்னொரு டிரைவரை சசிகலா களமிறக்குகிறார். அவர் பெயர் சரவணன்.

வேலைக்காரர்கள் சாட்சியம் முடிந்தபிறகு, கடைசியாக சிகிச்சை பெற்ற 75 நாட்களும் என்ன நடந்தது என சசிகலா பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப் போகிறார். அதில் என்ன விஷயங்கள் இடம்பெறப் போகிறதோ? என மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் இருப்பவர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்