.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் தவிர்த்து மற்ற பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்புடன் ம.நடராஜன் படத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்டன. பழ.நெடுமாறன் தலைமையில் தோழர் நல்லகண்ணு திறந்து வைக்க, கி.வீரமணி மலர் வெளியிடுகிறார். தா.பா., திருமா, சீமான், வைரமுத்து, பாரதிராஜா உட்பட பெரும் பட்டாளம் பங்கேற்கிறது.

sasikala

இந்நிலையில், கணவரின் மறைவுக்காக கொடுக்கப்பட்ட பரோல் நாட்கள் முடியப்போகும் நேரத்தில், திடீரென சசிகலாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பி.பி.யும் சுகரும் அதிகமாகி, மிகவும் சோர்வாகிவிட்ட சசிகலாவை, டாக்டர் கணபதி வந்து பரிசோதித்தார்.

"நடராஜனின் உடல் அருளானந்தம் நகர் வீட்டில் இருந்தபோதும், இறுதிக்காரியங்கள் நடந்த போதும் நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள்தான் சசிகலாவின் உடல்நிலையைப் பாதித்துள்ளன'’என்கிற மன்னார்குடி உறவுகள்... அந்தக் கசப்பான நிகழ்வுகளை நம்மிடம் சொல்லத் தொடங்கினார்கள்.

Advertisment

அப்போதும் இப்போதும்

போயஸ் கார்டனிலிருந்து ஜெயலலிதாவால் விரட்டப்பட்டார் சசிகலா. "எனது கணவர் உட்பட, உறவினர்கள் யாரும் கட்சி விஷயத்தில் தலையிடமாட்டார்கள், அவர்களோடு நானும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டேன்'’என மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் கார்டனுக்குள் நுழைந்தார். அப்போது சிதறிக்கிடந்த மன்னார்குடி உறவுகளை ஒருங்கிணைத்தார் ம.நடராஜன். அந்த ஒருங்கிணைப்பின் எஃபெக்ட்தான், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெ.உடலைச் சுற்றி நின்றன மன்னார்குடி சொந்தங்கள்.

ஆனால் நடராஜன் இறந்தபோது... அவரது உடலைச் சுற்றி, அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட சொந்தங்கள் திசைக்கு ஒருவராக நின்றுகொண்டிருந்தனர். நடராஜன் இறந்த தகவல் கிடைத்ததும் சென்னைக்கு வந்துவிட்டு, உடனே தஞ்சை திரும்பிய சசிகலாவின் தம்பி திவாகரன், இறுதிக்காரியத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் கவனிப்பதற்கு, தனது விசுவாசியான எஸ்.காமராஜ் தலைமையில் மன்னார்குடி ஆட்களையே இறக்கியிருந்தார்.

Advertisment

தினகரனோ, பெங்களூருவிலிருந்து சசிகலாவை அழைத்துவரும் பொறுப்பை, தான் ஏற்றுக் கொண்டதோடு, நடராஜனின் உடலை தஞ்சை கொண்டு செல்ல, தனது விசுவாசியான வெற்றிவேலையும், தஞ்சையில் ஏற்பாடுகளைச் செய்ய ரங்கசாமி எம்.எல்.ஏ.வையும் நியமித்திருந்தார். ஆனால் தஞ்சையில் திவாகரனை மீறி ரங்கசாமியால் எதுவுமே செய்ய முடியவில்லை.

அந்தப் பக்கம்... இந்தப் பக்கம்!

அருளானந்தம் நகர் இல்லத்திற்கு சசிகலா வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே திவாகரனின் மனைவியும் மகன் ஜெய்ஆனந்தும் வந்துவிட்டனர். ஜெய்ஆனந்தின் கருப்புச்சட்டை இளைஞர்கள் கோஷ்டி ஒன்றும், தினகரனுக்காக மதுரையிலிருந்து இளைஞர்கள் கோஷ்டி ஒன்றும் வந்திருந்தது. நடராஜனின் உடல் வீட்டிற்குள் கொண்டு போகப்பட்டபோது, மேற்படி இளைஞர்கள் கோஷ்டிகள் ஒன்றுக்கொன்று முறைத்தபடியே இருந்து... ஒருகட்டத்தில் மோதிக்கொள்ளும் நிலைக்குப் போய், சில பெரியவர்களின் முயற்சியால் அடங்கியது.

அதேபோல் நடராஜனின் உடல் அருகே திவாகரன் இருந்தால் தினகரன் வெளியேயும், தினகரன் இருந்தால் திவாகரன் வெளியேயும் என போக்குக் காட்டினர். இதற்கடுத்து, பிறந்தவீட்டுச் சீர் எடுத்துக் கொண்டு திவாகரன் வருவதைத் தெரிந்துகொண்ட தினகரன், விருட்டென கிளம்பி, தான் தங்கியிருந்த ஓட்டலுக்குப் போய்விட்டார். "இந்த மாதிரியெல்லாம் நடப்பதற்கு யார் மேல குத்தம் சொல்றதுன்னே தெரியல தம்பி'’என்கிறார் நடராஜனின் உறவினரான அந்த பெரியவர்.

natarajan-funeral

சவுண்டு பார்ட்டிகள்!

தனது ஆட்களுடன் ஓட்டலில் தங்கியிருந்த தினகரன், ""யாரு இங்க பாஸ்... இப்ப வரச்சொல்லு அந்த பாஸை. இங்க நான்தான் பாஸ்''’என செம உற்சாகமாக சவுண்ட் விட்டதைப் பார்த்து ஓட்டல் ஊழியர்களே விக்கித்துப் போய்விட்டனர். இதெல்லாம் திவாகரன் காதுக்கு எட்டியதோ என்னவோ, நடராஜன் உடல் அடக்க இடத்தில் பழ.நெடுமாறன், திருச்சி வேலுச்சாமி ஆகியோரை வைத்து இரங்கல் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார். சற்று தூரத்தில் தினகரன் முன்னிலையில் நடராஜன் உடலுக்கு சில சடங்குகள் செய்து, மந்திரங்கள் ஓதிக்கொண்டிருந்தனர். இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்த தினகரனின் ஆள் ஒருவர், ""மந்திரம் ஓதுவதற்கு டிஸ்டர்ப்பா இருக்குன்னு சொல்லச் சொன்னாங்க'' என்றதும், செமகாட்டமான திவாகரன்... ""யாரு சொன்னது, கூட்டத்தை நிறுத்த முடியாதுன்னு போய்ச் சொல்லு''’என ஒருமையில் எகிறியிருக்கிறார்.

இதன் எஃபெக்ட்தான் தஞ்சையில் தினகரன் ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதத்தில் திவாகரனோ அவரது மகன் ஜெய்ஆனந்தோ கலந்துகொள்ளாதது.

பாசமும் வெறுப்பும்

திவாகரன் மீது நடராஜனுக்கு எப்போதுமே அலாதி பிரியமும் பாசமும் உண்டு. அதேபோல்தான் சசிகலாவுக்கும். ஆரம்பத்திலிருந்தே நடராஜனுக்கு தினகரனைப் பிடிக்காது. சசிகலா சிறைக்குப் போன பின்பு கண்ட்ரோல் இல்லாமல் தினகரன் செயல்பட ஆரம்பித்தது, தனியாக கட்சி தொடங்கியது இவை எல்லாமே நடராஜனை மேலும் சுகவீனப்படுத்தியிருக்கிறது. அதேநேரம் எடப்பாடியை முதல்வராக்கலாம் என்ற திவாகரனின் ஆலோசனை, இப்போது தனக்கு எதிராகவே திரும்பியதால், திவாகரனிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டார் சசிகலா.

தானாக வந்த கூட்டம்

கடந்த ஒருவாரமாக தஞ்சை அருளானந்தம் நகர் நடராஜனின் வீடு, சசிகலாவிடம் துக்கம் விசாரிக்க வருபவர்களால் நிரம்பி வழிகிறது. சசிகலாவால் வாழ்வு பெற்ற முக்கிய அதிகாரிகளின் மனைவிமார்கள், ஏற்றம் அடைந்த அரசு ஒப்பந்ததாரர்களின் மனைவிமார்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து துக்கம் விசாரித்தபடியே இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிநிரலைக் கவனித்துக்கொண்டவர் சசிகலாவின் பி.ஏ.வாக செயல்படும் கார்த்தி. கோட்டையில் உள்ள அதிகாரிகள் உட்பட பலரும் சரண்டர் தொனியில் கார்த்திக் மூலம் சசியிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கி, தங்கள் குடும்பப் பெண்களை அனுப்பி துக்கம் விசாரிக்கிறார்கள்.

தஞ்சையில் தினகரன் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான அ.ம.மு.க. தொண்டர்களும், சசிகலாவைச் சந்தித்து... ""இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். துரோகத்தைத் தூள்தூளாக்குவோம், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்'' என கண்ணீருடன் ஆறுதல் சொன்னதும் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டாராம் சசிகலா. உண்ணாவிரதத்திற்கு வந்த அய்யாக்கண்ணுவும் சசிகலாவிடம் துக்கம் விசாரித்தார்.

28-ஆம் தேதி மாலை, நடிகை விஜயசாந்தி, துக்கம் விசாரித்துவிட்டு, தனி அறையில் சசிகலாவுடன் இரண்டு மணி நேரம் பேசினார். வெளியே வந்த விஜயசாந்தியை, கார்வரை சென்று வழி அனுப்பினார் பெங்களூரு புகழேந்தி. மாடியிலிருக்கும் சசிகலா, துக்கம் விசாரிக்க வருபவர்களைச் சந்திக்க கீழே வருவதும் மாடிக்குப் போவதுமாக இருந்ததால், லேசான காய்ச்சல் ஏற்பட்டு உடல் சோர்வுற்றார்.

அக்காவுக்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவல் கிடைத்ததும் பதறி அடித்தபடி தனது மனைவியுடன் மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்கு விரைந்து வந்தார் திவாகரன். ஆனால் தினகரனோ, ""டாக்டர் கணபதி எங்க சொந்தக்காரர்தான், அவரும் துக்கம் விசாரிக்கத்தான் வந்தாரு. அதுக்குள்ள சித்திக்கு ஒடம்பு சரியில்லைன்னு கௌப்பி விட்டுவிட்டார்கள்''’என்றார்.

சொத்து -சுகம் -சோகம்

நடராஜன் -சசிகலா இருவருக்குமான தனித்தனி சொத்துகள் குறித்து குடும்பத்திற்குள் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க, இரு குடும்பத்தின் நிலவரம் அறிந்தவர்களிடம் நாம் பேசினோம். சசிகலாவின் மனநிலையைச் சொன்னார்கள். ""அவரு (நடராஜன்) மட்டும் ஆரோக்கியமா இருந்திருந்தா அ.தி.மு.க.வை நம்ம கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திருப்பார். உன்னை கட்சி தொடங்கவே விட்டிருக்கமாட்டார். நீ கட்சி தொடங்கியதால்தான் அ.தி.மு.க.வில் இருக்கும் சீனியர்கள் பலர் நம்ம பக்கம் வரவே தயங்குகிறார்கள். இனிமே எப்படி அ.தி.மு.க.வை மீட்பதுன்னு தெரியல. இதயெல்லாம் நினைச்சா எனக்கு நிம்மதியா தூக்கம் வரமாட்டேங்குது. அவரோட படத்திறப்பு நிகழ்ச்சி முடிஞ்சதும் பரோல் முடியுறதுக்குள்ளே ஜெயிலுக்கு போகப் போறேன். இங்கே இருக்கிறதைவிட ஜெயிலே தேவலை'' என பொங்கித் தீர்த்துவிட்டார் என்கிறார்கள்.

அரசிகள் பாணியில் ஆணையிட்டே பழகிவிட்ட சசிகலாவின் இப்போதைய நிலை வியப்புக்குரியதாகத்தான் இருக்கிறது. அவரின் தண்டனைக் காலம் முடிவதற்குள் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ, எப்படியெல்லாம் நடக்கப்போகிறதோ என உறவுகள் கவலைப்பட, தண்டனைக் காலம் முடிந்து திரும்பியதும், என் அரசியலின் முழு வேகமும் தெரியும் என்ற கணக்கில் இருக்கிறாராம் சசி.

-இரா.பகத்சிங், செல்வகுமார், மகி

---------------------------

உறவுகள் தொடர்கதை!

நடராஜனுடன் திருமணம் ஆன சில ஆண்டுகளில் சென்னைக்கு குடிபெயர்ந்த சசிகலாவுக்கு, போயஸ்கார்டனே நிரந்தர முகவரியாகிப் போனது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது உறவினர்கள் யாரையும் சசிகலா சந்தித்ததில்லை, சில உறவுமுறைகளும் கூட அவருக்குத் தெரிவதில்லை. ஆனால் இப்போது அருளானந்தம் நகர் வீட்டில் இருக்கும் சசிகலாவைத் தேடிவரும் அவரது உறவுகள், "அத்தாச்சி தைரியமா இருங்க... அக்கா ஒடம்ப பார்த்துக்கங்க... அத்தை உங்களுக்கு நாங்க இருக்கோம்...' என உறவுக்காரப் பெண்கள் உரிமையுடன் பேசுவதைக் கேட்டு, "இத்தனை வருஷமா இவர்களையெல்லாம் இழந்துவிட்டேனே' என கண்ணீர் வடித்திருக்கிறார் சசிகலா.