பள்ளிச் சிறுமிகளையும், கல்லூரிப் பெண்களையும், வேலைக்குச் செல்லும் பெண்களையும் "ஒருதலைக் காதல்' என்ற பெயரில் கொலை செய்யும் போக்கு தமிழ்நாட்டை அச்சத்தின் பிடியில் சிக்க வைத்திருக்கிறது.
பட்டப்பகலில் சென்னை -நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே ஸ்வாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். அதில் கைது செய்யப்பட்ட இளைஞர் ராம்குமார், மர்மமான முறையில் சிறையில் இறந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை -ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர் இந்துஜா தன்னை காதலிக்க மறுத்ததால், அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கடந்த பிப்ரவரி மாதம் மதுரை -திருமங்கலம், அச்சம்பட்டி அருகே சித்ராதேவி என்ற 14 வயது பள்ளிச்சிறுமி காதலிக்க மறுத்தார் என்றுகூறி அவர்மீது பெட்ரோல் ஊற்றிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியக் குற்றஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இளம் வயதினர் ஈடுபடுவது 132 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிவரத்தை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இத்தகைய வன்முறைகள் கடந்த காலங்களைவிட அதிகரித்து வருவதை அந்த புள்ளிவிவரம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில்தான் சென்னையில் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி பட்டப்பகலில் கல்லூரி வாசலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை குறித்து நக்கீரன் நடத்திய விசாரணையில் பல விவரங்கள் அதிரவைத்தன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த சங்கரன்-காந்தரூபி தம்பதியினருடன் வேலை தேடி சென்னை -மதுரவாயலில் குடியேறினான் இவர்களின் ஆறாவது மகன் அழகேசன். பின்னர் பெற்றோர் சொந்த ஊருக்கே திரும்பிவிட, அழகேசன் மட்டும் மதுரவாயலில் தனது அக்கா பரிபூரணம் வீட்டில் தங்கினார். வீடுகளுக்கு வாட்டர்கேன் போடுவதுடன், ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி கொசு மருந்து அடிப்பவராகவும் வேலை செய்திருக்கிறார்.
அழகேசன் வசித்த வீட்டின் மாடியில் வசித்தவர்தான் அஸ்வினி. இவருடைய அப்பா மோகன் கட்டட வேலை செய்யும்போது இறந்துவிட்டார். எனவே, தாய் சங்கரியின் பாதுகாப்பில் அஸ்வினியும் அவர் தம்பி அபிமன்யுவும் வளர்ந்தனர்.
அழகேசனுக்கும் அஸ்வினிக்கும் மூன்று ஆண்டுகளாக இருந்த பழக்கம், காதலாக மாறியதாக அழகேசன் உறவினர்கள் கூறுகிறார்கள். அஸ்வினிக்கும் அவருடைய குடும்பத்துக்கும் பல வகையில் அழகேசன் பண உதவி செய்ததாக சொன்ன அழகேசனின் அக்கா பரிபூரணம், ""ரெண்டுபேரும் மூணு வருஷமா லவ் பண்றாங்க. அழகேசன் எதையும் என்கிட்ட நேரடியா சொல்லமாட்டான். அந்தப் பொண்ணு எங்க வீட்டுக்கு வரும். இவனும் அவுங்க வீட்டுக்கு போவான். பிளஸ்டூவில் அந்தப் பொண்ணு 900 மார்க் எடுத்துச்சு. இவன்தான் காலேஜுக்கு பணம் கட்டி சேத்துவிட்டான். தினமும் காலேஜுக்குக்கூட கூட்டிப்போனான். 18 வயது முடிஞ்ச சமயத்துல ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னான். போட்டோவெல்லாம் காட்டினான். இந்தக் கல்யாண விவரம் அவுங்க சொந்தக்காரவுங்களுக்கு தெரிஞ்ச பிறகுதான் வில்லங்கமே ஆரம்பமாச்சு''’என்றார்.
அழகேசன் தலித், அஸ்வினி முதலியார் என்ற நிலையில் அஸ்வினியின் உறவினர்களோ... கட்டாயத் தாலி கட்டியதாகக் குற்றம்சாட்டி, வழக்கறிஞருடன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். புகாரின்பேரில் அழகேசனையும் அவருடைய உறவினர்களையும் விசாரணைக்கு அழைத்த போலீசார், சட்டப்பூர்வமான நடவடிக்கைக்குப் பதிலாகப் பஞ்சாயத்து பேசி, இருவரையும் பிரித்து வைத்தனர். அஸ்வினி தனது உறவினர்கள் சொன்னபடி தாலியைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார். அழகேசனிடம் இருந்த திருமணப் போட்டோக்கள் மற்றும் இதர ஆதாரங்களை இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் அழித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
அழகேசன் இதன்பிறகு பைத்தியக்காரனைப் போல அஸ்வினியை பின்தொடர்ந்திருக்கிறான். அஸ்வினியின் குடும்பம் மதுரவாயலில் இருந்து ஜாபர்கான் பேட்டைக்கு இடம்பெயர்ந்தது. இந்நிலையில்தான், மார்ச் 9ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு, கல்லூரி வாசலுக்கு வந்த அழகேசனைப் பார்த்த அஸ்வினி ஒதுங்கிச் செல்ல முயன்றிருக்கிறார். அழகேசனோ, அஸ்வினியை தடுத்து, தன்னையே கொளுத்திக்கொள்வதாக மிரட்டியிருக்கிறார். பலரும் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். திடீரென்று தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அஸ்வினியின் கழுத்தை ஆழமாக அறுத்துவிட்டார். உடனே ரத்தம் பீறிட கீழே விழுந்த அஸ்வினி துடித்து உயிரிழந்தார். இதைப்பார்த்து திகைத்த சிலர் அழகேசனை பிடித்துத் தாக்கி, பின்னர் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
இந்த பரபரப்பில்... கல்லூரிக்கு அழகேசனை மோட்டார் சைக்கிளில் அழைத்துவந்த நபர் தப்பிவிட்டார். அழகேசன், அஸ்வினியை கொலை செய்ததை நேரில் பார்த்த இளைஞரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பிவிட்டனர்.
இதுபோன்ற கொலைகளுக்கு வழக்கமாக கூறப்படும் பொருளாதார நிலை, படிப்பு, சாதி, செல்போன் தொழில்நுட்பம் உள்ளிட்ட எல்லா காரணங்களும் இதிலும் கூறப்படுகிறது. அதையெல்லாம் மீறி, இளைஞர்கள் மனதில் பரவிவரும் வக்ர வன்முறையும், காவல்துறையின் பஞ்சாயத்து நடவடிக்கைகளும்... தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவருவதைக் காட்டுகிறது.
-அரவிந்த், சி.ஜீவாபாரதி
படங்கள்:அசோக்