உட்கார்ந்த நிலையிலேயே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது ஜெயேந்திரரின் உடல். மரணத்திற்கு முன்பான கடைசி நாட்களில் அவர் மனரீதியாக உட்கார முடியாமல் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்தார் என்கிறார்கள் அவர் சமாதி வைக்கப்பட்டிருக்கும் காஞ்சி மடத்திற்குள் இருப்பவர்கள்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சங்கரராமன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஜெயேந்திரரின் காலம் பொற்காலமாக இருந்தது. அந்தப் பொற்காலத்தின் இன்னொரு பக்கத்தை கிளறிக் கொண்டே இருந்தவர் சங்கரராமன். சங்கர மடத்திற்கு தொடர்பில்லாத சம்பவங்கள் நடக்கும்போது "சோமசேகர கனபாடிகள்' என்னும் பெயரில் கடிதங்கள் எழுதுவது சங்கரராமன் வழக்கம். அதே பெயரில், இறுதி எச்சரிக்கை என்கிற பெயரில் சங்கரராமன் எழுதிய கடிதம்தான் அவரது படுகொலைக்கு காரணமானது என்பதை போலீசின் விசாரணை அறிக்கைகள் பதிவு செய்துள்ளன.
சோம என்றால் அது சந்திரனைக் குறிக்கும். சோமசேகர கனபாடிகள் என்பது ஜெயேந்திரருக்கு முன்பு பீடாதிபதியாக இருந்த சந்திர சேகரேந்திர சரஸ்வதி சாமிகளைக் குறிக்கும். அந்தப் பெயரில் சங்கரராமன் எழுதிய கடிதங்களில் சங்கர மடத்தில் நடந்த சொத்து தகராறு மற்றும் பெண் விஷயங்களைத்தான் குறிப்பிட்டு எழுதுவார். அதுபோன்ற தகராறுகள் சங்கர மடத்தில் ஜெயேந்திரருக்கும் விஜயேந்திரருக்கும் தொடர்ந்து முளைத்தன.
சங்கரராமன் படுகொலை வழக்கில் இருந்து வெளியே வந்தபிறகு ஜெயேந்திரர் தயாள குணம் உடையவராக மாறிவிட்டார். யார் எந்த ஊர்ல இருந்து கோவில் கட்ட வேண்டும் என்றாலும் எவ்வளவு ஆகும் என கேட்டு அள்ளிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார். இது மடத்தின் அடுத்த வாரிசான விஜயேந்திரருக்குப் பிடிக்கவில்லை.
விஜயேந்திரரும் மடத்தின் காரியதரிசியான சுந்தரேச ஐயரும் ஒரே கூட்டணியாக சேர்ந்து ஜெயேந்திரரின் திடீர் தயாள குணத்தை எதிர்த்தனர். ஆனால் ஜெயேந்திரர் அவர்கள் இருவரையும் மதிக்கவில்லை. விஜயேந்திரர் தனது அணியில் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஜெயேந்திரரின் தம்பிகளையும் சேர்த்துக் கொண்டார்.
ஜெயேந்திரரின் தம்பிகள் மட விவகாரத்தில் தலையிடுவதை மடத்து பக்தர்கள் எதிர்த்தனர். மடாதிபதியாக இருப்பவருக்கு எந்தவிதமான ரத்த சம்பந்தமான உறவுப் பற்றும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தாலும் அந்த உறவினர்கள் மட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்கிற சங்கர மட அனுஷ்டானங்களை காட்டி பக்தர்கள் தங்கள் எதிர்ப்பை ஜெயேந்திரரிடம் தெரிவித்தார்கள். அதை ஜெயேந்திரர் ஏற்றுக் கொண்டார். ஆனால் ஜெயேந்திரரின் தம்பி ராமகிருஷ்ணன் கேட்பதாக இல்லை.
சென்னையில் ராமகிருஷ்ணன் பதினைந்து பள்ளிகளை சங்கரமடம் பெயரில் நடத்தி வந்தார். திருப்பதியில் ஒரு கல்யாண சத்திரத்தையும் நடத்தி வந்தார்.
திருப்பதியில் சங்கரமடம் போல பல மடங்கள் திருமண மண்டபத்தையும் தங்கும் விடுதிகளையும் நடத்துகின்றன. ஏழைகளாக வரும் பக்தர்கள் இலவசமாகத் தங்கவும் அங்கேயே இலவசமாக உணவருந்தும் வகையிலும் பல மடங்களும் திருப்பதியில் மண்டபங்களை நடத்துகின்றன. ஆனால், காஞ்சி மடத்தின் மண்டபங்களில் இலவச வசதிகள் எதுவும் இல்லை. இந்த விஷயத்தை கையிலெடுத்த ஜெயேந்திரர், அவருக்கு நெருக்கமான இரண்டு இளைஞர்களை திருப்பதிக்கு அனுப்பினார்.
அதுவரை கைகளால் எழுதப்பட்ட ரசீதுகளை ஆதித்யா, சங்கர் என்கிற அந்த இளைஞர்கள் டிஜிட்டலாக மாற்றினர். அதன்படி பார்த்தால், விஜயேந்திரர் சுந்தரேச ஐயரின் துணையுடன் ஜெயேந்திரரின் தம்பி ராமகிருஷ்ணன் இதுவரை 50 கோடிக்கும் மேல் முறைகேடு செய்தது தெரிய வந்தது. அத்துடன் நில்லாமல் சென்னையில் ராமகிருஷ்ணன் பொறுப்பில் நடக்கும் பள்ளிகளில் நடைபெற்ற முறைகேடுகளையும் ஆதித்யாவும் சங்கரும் வெளியே கொண்டு வந்தார்கள்.
கணக்கு வழக்கு மோசடிகள் அம்பலமானதும் ஜெயேந்திரர் தரப்புக்கும் விஜயேந்திரர் தரப்புக்கும் தகராறு முற்றியது. ஏற்கெனவே விஜயவாடாவில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய ஜெயேந்திரருக்கு காஞ்சி மடத்திலும் மூச்சுத் திணறல் வந்தது என சொல்லி அவரை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துக் கொண்டு போக ஏற்பாடு செய்தனர் விஜயேந்திரரும், சுந்தரேச ஐயரும். ஜெயேந்திரருடன் காஞ்சிபுரத்திலிருந்து போரூருக்குச் சென்ற வேனில் ஏறிச் சென்ற ஆதித்யாவும், சங்கரும் "பெரியவா உங்களுக்கு உடம்பு முடியலன்னு சொல்லி உங்களோட உயிரைப் பறிக்க விஜயேந்திரர் சதி செய்துதான் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்புறாரு' என ஜெயேந்திரர் காதில் ஓத, தன்னை மரணம் துரத்துவதை உணர்ந்து பீதியடைந்த ஜெயேந்திரரும், ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வேன் வந்தபோது அதிலிருந்து இறங்க மறுத்து, "அவா என்னைக் கொல்லப் பார்க்குறா.. எனக்கு எதுவும் கிடையாது' என அலறியபடி, டாக்டர்கள் பரிசோதிக்கவும் அனுமதிக்காமல் திரும்பினார். இதை கடந்த ஜனவரி 26, 2018 "நக்கீரன்' இதழில், "சங்கர மடத்தில் கொலை பீதி- வில்லங்க விஜயேந்திரர்' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெயேந்திரரை மிரட்டுவதற்கு வேறு ஆயுதங்களை தேர்ந்தெடுத்தார் விஜயேந்திரர். ஆந்திராவில் மருத்துவக் கல்லூரி ஒன்றை சங்கர மடத்தின் பெயரில் நடத்தும் பெண்மணி ஜெயேந்திரருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த பெண்மணியும் அவருடன் சக்கரவர்த்தி என்கிற இளைஞரும் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்தனர். ஜெயேந்திரரின் அறைக்குச் சென்று கதவை மூடிக் கொள்வார் அந்தப் பெண்மணி. அவரும் சக்கரவர்த்தியும் சேர்ந்து சில போட்டோக்களை காட்டி ஜெயேந்திரரிடம் குரலை உயர்த்திப் பேசுவது வழக்கமாம். அவர்களது மிரட்டலுக்கு பயந்து ஜெயேந்திரர் தனக்கு ஆல் இன் ஆலாக இருந்த ஆதித்யா, சங்கர் இருவரையுமே கடைசிக் காலத்தில் தூக்கி எறிந்தார். ஏன் என அவர்கள் கேட்டதற்கு, "பல்கலைக்கழக லேடியையும் சக்கரவர்த்தியையும் சுட்டிக்காட்டி, அவா சொல்றா நான் என்ன பண்றது' என ஜெயேந்திரர் புலம்பியதுதான் அவர் கடைசி நாட்களில் பேசிய அதிகபட்ச வார்த்தைகள் என்கிறார்கள் மடத்தைச் சேர்ந்தவர்கள்.
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கொண்ட மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த மடாதிபதியான ஜெயேந்திரரின் பழைய நடவடிக்கைகளும் அதன் தொடர்ச்சியும் உருவாக்கிய நடவடிக்கைகளால், எல்லா அதிகாரங்களையும் தன் வசமாக்கினார் விஜயேந்திரர். ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, மடத்து மேலாளர் சுந்தரேச ஐயர் ஆகியோர் மடத்திற்கான முதலீடுகளைச் செய்து, தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டனர். ஜெயேந்திரர் கையிலிருந்த அதிகாரங்களெல்லாம் நழுவிய நிலையில், மன அழுத்தத்தால் அடிக்கடி ஏற்பட்ட மூச்சுத்திணறலும் சிரமப்படுத்த, பிப்ரவரி 28-ந் தேதி அவரது உயிர் மோட்சத்தை சேர்ந்தது.
அறுபது ஆண்டுகளாக ஜெயேந்திரருக்கு உதவியாளராக இருந்தவர் ராஜு. காலையில் ஜெயேந்திரரை குளிக்க வைப்பதில் இருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரை, அனைத்துத் தேவைகளையும் கூடவே இருந்து கவனித்துக் கொள்பவர். பிப்.28-ஆம் தேதி காலை ஜெயேந்திரரை குளிக்க வைக்க முயற்சித்த போதே உடல் ஜில்லிட்ட நிலைக்குப் போய்விட்டதை ராஜூ, உணர்ந்ததாகச் சொல்கிறது மடத்து வட்டாரம். ஜெயேந்திரரின் பெர்சனல் சமையல்காரர் வசந்த்ராஜை, கடந்த இருமாதங்களுக்கு முன்பே, நீக்கிவிட்டார்களாம். அதனால் தனக்குத் தேவையான உணவு வகைகள் கிடைக்காமல் ரொம்பவே சிரமப்பட்ட நிலையில், பூஜை செய்வதற்கு உதவியாக இருக்கும் குல்பெர்கா சங்கர், ஆதித்யா ஆகியோரைக் கூட விஜயேந்திரர் தரப்பு ஓரங்கட்டியதால், மனம் நொந்த நிலையில் தான் இருந்துள்ளார் ஜெயேந்திரர்.
சந்திரசேகர சரஸ்வதி மடாதிபதியாக இருந்தபோது ஜெயேந்திரரை இளைய மடாதிபதியாக நியமித்தார். 1980களில் தண்டத்தை போட்டுவிட்டு ஜெயேந்திரர் மடத்தை விட்டு வெளியேறிய போது விஜயேந்திரரை கொண்டு வந்தார் பெரியவர். ஜெயேந்திரரின் மரணத்தால் தற்போது விஜயேந்திரர் கையில் முழு அதிகாரமும் உள்ள நிலையில், அவருக்குத் துணையாக ஜெயேந்திரரால் உபதேசம் பெற்று சந்நியாசம் வாங்கிய மத்தூர் சாமிகள் என அழைக்கப்படும் ஞானபரசுனேந்திர சரசுவதியை கொண்டு வர ஒரு குரூப் முயற்சிக்கிறது. அவரது வருகையை விஜயேந்திரர் தரப்பு விரும்பாததால், காஞ்சி மடத்தில் சர்ச்சைகள் நீடிக்கின்றன.
பெருந்தலைகளின் இரங்கலும் நேரடி அஞ்சலியும் காஞ்சி மடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியபோதும் அங்கு இன்னும் விலகாத மர்மங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தை மடத்தின் பக்தர்கள் மனதில் விதைத்துள்ளன.
-தாமோதரன் பிரகாஷ், அரவிந்த்