வரலாற்றுப் புகழ்பெற்ற மகாபலிபுரம் அருகே நடக்கும் ராணுவ கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் 1-ந் தேதி பிரதமர் மோடி வருகை தருவதை நினைத்து பதட்டமாக இருக்கிறார்கள் வெடிகுண்டு நிபுணர்கள்.
1991, மே 21-ந் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ்காந்தி, மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்குப்பிறகு கிடைத்த தேர்தல் வெற்றியால் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, இந்தியாவின் அதிமுக்கிய பிரமுகர்களின் தமிழக வருகையின்போது பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர் குழு அமைக்கும் வகையில் உள்துறை செயலாளராக இருந்த மலைச்சாமி ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தார்.
தமிழக அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில், தமிழ்நாடு வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த பாம் ஸ்குவாடில் இடம்பெறுவதற்கான தகுதிகள், தேர்வு செய்யும் முறை, அதற்கான கமிட்டி உறுப்பினர்கள், ஸ்குவாடின் செயல்முறைகள், சம்பளம் என்பது உள்பட பல்வேறு விதிகளுடன் இரண்டு அரசாணைகள் (எண் 2037, 2038) 15.12.92-ல் மலைச்சாமியின் கையொப்பத்துடன் போடப்பட்டன.
உள்துறையின் கீழ் செயல்படும் இந்த ஸ்குவாடு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில கவர்னர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள், தூதர்கள் என தமிழகம் வரும் அதிமுக்கியமானவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்பட்டு வருகிறது.
இந்த ஸ்குவாடில் தற்போதுள்ள சர்ச்சைகள் குறித்து நம்மிடம் பேசியவர்கள், ""இந்திய ராணுவத்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் மட்டுமே பாம் ஸ்குவாடு இருப்பதை அறிந்து அவர்களை பயன்படுத்த அப்போதைய ஜெ. அரசு முடிவெடுத்தது. அவர்களும்கூட ஹரியானாவிலுள்ள நேசனல் செக்யூரிட்டி கார்டு பயிற்சி மையம், டெல்லியிலுள்ள பியூரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிடி மையம், புனேயில் இருக்கும் காலேஜ் ஆஃப் மிலிட்டரி இன்ஜினியரிங் இந்த மூன்றில் ஒன்றில் பயிற்சி எடுத்து சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்கிற இந்திய ராணுவ முறையே தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படவேண்டும் என அரசாணையும் போடப்பட்டது. ராணுவத்திலோ, ஐ.பி.யிலோ பாம் ஸ்குவாடு பிரிவில் மூன்று வருட அனுபவமும் கட்டாயம்.
இந்த பிரிவு உருவாக்கப்படும்போது, 181 இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், தமிழக அரசின் இப்பிரிவில் தற்போது தமிழகம் முழுவதும் 120 பேர்தான் இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 60 பேர். பாம் ஸ்குவாடு டெக்னீசியன்களை இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள்ஸ், கான்ஸ்டபிள்ஸ் என 4 நிலையில் தரம் பிரித்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் சென்னைக்கு வந்து திரும்பிச் செல்லும்வரை அனைத்து வகையிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மிகவும் சென்சிட்டிவ்வான பணியில் இருக்கும் வெடிகுண்டு நிபுணர்களை தேர்வு செய்வதில்தான் கோட்டைவிட்டுக்கொண்டிருக்கிறது தமிழக அரசு''‘எனச் சொல்கிறார்கள்.
இது குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, பாம் ஸ்குவாடு பிரிவில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்ப தமிழகத்திலிருக்கும் முன்னாள் ராணுவத்தினரில் இருந்துதான் தகுதியானவர்களை எடுக்க வேண்டும். மற்ற மாநிலத்தவரை எடுக்கக்கூடாது. ஆனால், சமீப வருடங்களாக கேரளாவை சேர்ந்த மலையாளிகளை தேர்வு செய்வது அதிகம் நடக்கிறது. இன்றைய சூழலில், பாம் ஸ்குவாடில் இருக்கும் டெக்னீஷியன்களில் 50 சதவீதம் பேர் மலையாளிகள்தான். 10 சதவீதம் பேர் மற்ற மாநிலத்தவர்கள். தமிழர்கள் 30 சதவீதம்தான். கடந்த மார்ச் மாதம் 28 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் 15 பேர் மலையாளிகள். பொதுவாக, இதற்கான டெக்னீஷியன்களை எடுப்பதற்கான விளம்பரங்களை தமிழக அரசு தமிழக நாளிதழ்களில் கொடுப்பதே இல்லை.
இதே பிரிவின் உயரதிகாரியாக இருந்து பணி ஓய்வுபெற்ற மலையாளி ஒருவர் கேரளாவில் இருந்தபடி, தமிழக பாம் ஸ்குவாடுக்கு கேரளாவிலுள்ள முன்னாள் ராணுவத்தினரை அனுப்பி, மேலதிகாரிகள் மூலம் செலக்ட்டாக வைக்கிறார். இதற்காகவே, கோவை பாம் ஸ்குவாடில் இருக்கும் தனது சிஸ்யரை புரோக்கராக வைத்திருக்கிறார். ஒவ்வொரு பணி நியமனமும் 3 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. ராணுவத்தில் டி.எஸ்.பி. கேடரில் இருந்த மலையாளி இங்கு இன்ஸ்பெக்டராக பணியில் சேர்கிறார். காரணம், ராணுவத்தில் 30 ஆயிரம் சம்பளம். இங்கு 55 ஆயிரம் சம்பளம். இப்படி தேர்வு செய்யப்படுகிற மலையாளிகளில் பெரும்பாலானவர்களது சர்டிஃபிகேட்டும் போலியானது. இவற்றை சரி பார்ப்பதேயில்லை.
தற்போது தமிழக பாம் ஸ்குவாடில் உள்ளவர்களின் சர்டிபிகேட்டுகளை மத்திய அரசு அனுமதித்திருக்கும் 3 பயிற்சி மையங்களில் பரிசோதித்தால் அவை போலியானவை என்பது தெரியவரும். அனுபவமற்ற போலிகளால் வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது'' என பகீரூட்டுகிறார்கள்.
இதுகுறித்து, இப்பிரிவை கவனிக்கும் உயரதிகாரியான ஏ.டி.ஜி.பி. (ஆபரேசன்) ஆசிஸ் பங்க்ராவுக்கும், உள்துறை செக்ரட்டரி நிரஞ்சன் மார்ட்டிக்கும், உள்துறையை வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் புகார் அனுப்பி 6 மாதங்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. முதல்வரின் நேரடி கவனிப்பில் உள்ள உள்துறையில் இப்படியொரு நிலை. இதனால் தலைவர்களுக்குத்தான் ஆபத்து‘’ என ஆதங்கத்தோடு வெடிக்கின்றனர் மேற்கண்ட உண்மைகளை அறிந்த நேர்மையான பாம் ஸ்குவாடு அதிகாரிகள்.
-இரா.இளையசெல்வன்