/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3c-30c.jpg)
மருதமலை அடிவாரத்திலிருக்கும் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் வி.சி. எனச் சொல்லப்படும் துணைவேந்தர் கணபதி, யுனிவர்சிட்டிக்கு எதிரே உள்ள தன் வீட்டுக்கு வந்தார்.
அவரிடம் கரன்ஸியை நீட்டியபடி, ""சார்... பேசியபடி முப்பது லட்சம் கொடுத்துர்றேன். இந்தாங்க சார்... முன்பணமா ஒருலட்சம் தர்றேன், மீதி 29 லட்சத்துக்கு செக் போட்டு குடுத்துர்றேன். எனக்கு துணைப்பேராசிரியர் ஆர்டரை மட்டும் சீக்கிரமா கொடுங்க சார்...'' என்ற துணைப்பேராசிரியர் சுரேஷ் பணத்தைக் கொடுத்ததும் சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்டார் துணைவேந்தர் கணபதி.
வெளியே வந்த சுரேஷ் ஓரமாய் நின்றுகொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம்... ""ரசாயனம் தடவிக் கொடுத்த பணத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டேன்'' என சிக்னலைக் காண்பித்த பின் திபுதிபுவென கணபதியையும், புரொபசர் தர்மராஜையும் சுற்றி வளையம்போட்டு நின்றது லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, கோவை டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான டீம்.
பதறிப்போன கணபதியும் அவரது மனைவியான சொர்ணலதாவும் உடனே பாத்ரூமுக்குள் ஓடினார்கள். லஞ்சமாய் கொடுக்கப்பட்ட பணத்தை பாதியாய்க் கிழித்தும், கொஞ்சப் பணத்தை கழிவறையிலும் போட்டுவிட... இதை சற்றும் எதிர்பாராத டீம், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பத்துபேரை வரவழைத்தனர். அவர்கள் செப்டிங் டேங் ஓரங்களை பெயர்த்து பணத்தை எடுத்துக் கொண்டிருக்க... கணபதி, சொர்ணலதா. புரொஃபசர் தர்மராஜ் ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3c-30c1.jpg)
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் அறைகளிலும், தர்மராஜின் அறைகளையும் சோதனையிட்டதில் சில ஆவணங்களை எடுத்தனர்.
கிட்டத்தட்ட 13 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர் .
"என்னதான் நடந்தது..?' என பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர் ஒருவரிடம் கேட்டோம். ""2016-ல் இவர் துணைவேந்தராய் வந்தபோது 72 பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்ததில் பல லட்சங்கள் பெற்றுக்கொண்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்து, ஹைகோர்ட்டில் பாதிக்கப் பட்டவர்கள் சார்பில் வழக்கு போடப்பட்டது.
அதற்கு பின்னால் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் உதவிப்பேராசிரியர்கள், ஆசிரியர்கள், இணை ஆசிரியர்கள் பதவிக்கு பல்கலைக்கழகத்தின் 28 துறைகளுக்கும், உறுப்புக் கல்லூரிகளில் காலியாக இருந்த 82 பணியிடங்களுக்கும் நியமனம் அறிவிப்பு செய்தார். எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை.
அதாவது காலையில் இன்டர்வியூ நடத்தியவர், மாலை ஐந்தரை மணிக்கு மேல் சிண்டிகேட் நபர்களைக் கூட்டி அத்தனை பேருக்கும் பணி வேலை நேரம் முடிந்த பின்னால், இரவோடு இரவாக பணி நியமனம் செய்துவிட்டார். அதுவும் எப்படி... ஒவ்வொரு சீட்டுக்கும் 30 லட்சம் முதல் 60 லட்சம் வரைக்கும் எல்லாரிடமும் லஞ்சமாக வாங்கிவிட்டார்.
கணபதிக்கு மூளையாகவும், இரு கரங்களாகவும் புரொபசர் தர்மராஜும், கணபதியின் உறவினரான தொலைதூரக் கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணனும் இருந்தனர். "3 சி' கொடுத்து பதவி வாங்கி கிட்டத்தட்ட "30 சி' அளவுக்கு பலரிடம் நகைகளாகவும், வைரங்களாகவும் கணபதி டீமால் சேர்த்த பணம் போக... எக்ஸ்ட்ராக்களும் வாங்கப்பட்டிருக்கின்றன.'' துணைவேந்தரின் "பிஸினஸ்' பற்றி 2016 டிசம்பரிலேயே "ஒரு போஸ்டிங் 40 எல்- லஞ்சப் புகாரில் துணைவேந்தர்' என நக்கீரன் அம்பலப்படுத்தியுள்ளது.
புகார் கொடுத்திருக்கும் சுரேஷ், வேதியியல் துறையில் துணைப்பேராசிரியர் பணிக்கு தேர்வானவர். அவருக்குப் பணி நியமன ஆணையை வழங்க வேதியியல்துறைத் தலைவர் பேராசிரியர் தர்மராஜ் மூலம் முப்பது லட்சம் பணம் கேட்டதையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மதிவாணன் மீது வழக்குப் பதிந்து ரகசிய இடத்தில் விசாரணை செய்துகொண்டிருக்கிறார்கள். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், லோக்கல் அமைச்சர் வேலுமணி இருவரது சிபாரிசுகளைக் கூட அலட்சியப்படுத்தியதன் விளைவுதான், தற்போதைய நடவடிக்கையின் பின்னணி. வெளிப்பட்டிருப்பது கொஞ்சம்தான். கிணறு வெட்டப்பட்டுள்ளது; நிச்சயம் பூதம் கிளம்பும்.
-அ.அருள்குமார்
சொந்த ஊரில்...! கையும் களவுமாய் பிடிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதியின் சொந்த ஊர், திருச்சி துறையூரை அடுத்த கோட்டாத்தூர். அங்கே 5 ஏக்கர் விவசாய நிலமும் சிறிய பண்ணை வீடும் அவருக்கு இருக்கிறது. திருச்சி -பாரதிதாசன் பல்கலையில், பேராசிரியராகவும், தாவரவியல்துறைத் தலைவராகவும் 35 ஆண்டுகள் கணபதி பணிபுரிந்தார். 15 வருடம் முன்பு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை அருகே, நவல்பட்டு அண்ணாநகரில் சொந்த வீடு வாங்கினார். 2016 வரை அங்கேதான் வசித்தார். இந்த வீட்டிற்கு எதிரில் தன் பிள்ளைகளுக்காக ஒரு மருத்துவமனையை கணபதி கட்டிக்கொண்டிருக்கிறார். கோவையில் துணைவேந்தர் கணபதி கைதான பிறகு, இரவு 8:15 மணிக்கு திருச்சி -நவல்பட்டில் உள்ள அவரது வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். ஒருமணி நேரச் சோதனையில் சில ஆபரணங்களை எடுத்துச் சென்றனர். -ஜெ.டி.ஆர். |
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02-12/3cc.jpg)