அடுத்தடுத்து பலம் காட்டுவதுதான் அரசியல் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரான நடிகர் கமல்ஹாசன். மதுரையில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, சென்னையில் மகளிர் தின கூட்டத்தை மார்ச் 8-ந் தேதி ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடத்துகிறார்.
தமிழகத்தில் வெற்றிபெறும் அளவுக்கு ஓட்டு வாங்கவேண்டும் என்றால் ஒட்டுமொத்த வாக்காளர்களில் அதிகளவில் உள்ள பெண் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் கட்சிப் பணிகளுக்கு பெண்களைக் கொண்டு வந்தாகவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் இதனைக் கச்சிதமாகச் செய்துவருவது அ.தி.முக.. மட்டுமே. மகளிர் அணியுடன் இளம்பெண்கள் பாசறையையும் உருவாக்கி, அதன் உறுப்பினர்கள் மூலமாக கட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் பெண்களைக் கொண்டு வருவது அ.தி.மு.க. பாணி. அதனை உணர்ந்துள்ள கமலின் ம.நீ.ம., மகளிர் தினக் கூட்டத்தை நடத்தி, பெண்களே பெருமளவில் பங்கேற்கச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களைக் கவர்வதுடன், ஜாதிரீதியாக மெஜாரிட்டி ஓட்டுக்கள், மைனாரிட்டி ஓட்டுக்கள், வெற்றியைத் தீர்மானிக்கிற ஓட்டுக்கள் என வகைப்படுத்தி பட்டியல் தயார்செய்யும்படி, அந்தந்த மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் கமல். தனது நற்பணி இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளைக் கொண்ட ஒரு குழுவையும் மாவட்டந்தோறும் களமிறக்கியுள்ளார்.
தேசியக் கட்சிகள்-மாநிலக்கட்சிகள் செல்வாக்குள்ள குமரி மாவட்டத்தில் ம.நீ.ம.வின் உறுப்பினர் சேர்ப்பு எப்படி இருக்கிறது என நிர்வாகிகளிடம் விசாரித்தோம். ""எங்களுடைய முதல் பணியாக மாவட்டம், ஒன்றியம், நகரம், வார்டு ரீதியாக ஜாதி அடிப்படையில் வாக்காளர்களை ஸ்டடி செய்து, அதன் அடிப்படையில் பட்டியல் தயார்செய்து தலைமைக்கு அனுப்ப உள்ளோம். இது பா.ஜ.க.வுக்கு வலுவான அடித்தளம் உள்ள மாவட்டம். அதனாலே இந்து- கிறித்துவர் என துருவ அரசியலுக்கான வாய்ப்புள்ள மாவட்டம். இங்கு மெஜாரிட்டியாக நாடார் ஓட்டுக்கள் உள்ளன. அவர்கள் இந்துக்கள், கிறித்துவர் என இரு பிரிவாக உள்ளனர். அதுபோக மீனவர்கள், தலித்துகள், இஸ்லாமியர் ஓட்டுக்களும் கணிசமாக உள்ளன.
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கணிசமான ஓட்டுக்கள் உள்ளதுபோலவே… எதிராகவும் கணிசமான ஓட்டுக்கள் உள்ளன. இந்த எதிர்ப்பு ஓட்டுக்களை இதுவரை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வாங்கிவந்தன. இனி அந்த ஓட்டுக்களை "மக்கள் நீதி மய்யம்' வாங்குவதற்கான அடிப்படைகளை ஆலோசித்து வருகிறோம்.
ஒவ்வொரு பகுதியிலும் அரசியல் மற்றும் சமுதாயரீதியாக செல்வாக்குள்ள நபர்களைப் பற்றிய கள ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறோம். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து தலைமையின் கைக்கு பட்டியல் வந்தபிறகு, அடுத்தகட்ட நிர்வாகிகள் நியமனம் இருக்கும்''’’ என்கிறார்கள்.
இன்னும் சிலரோ, “""ஓகி புயலின்போது மத்திய-மாநில அரசுகள் காட்டிய மெத்தனத்தால் குமரி மாவட்டத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு பெரிது. இதனால் மீனவர்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளும் பெரிதாக போராட்டம் எதுவும் செய்யவில்லை என்ற மனநிலையும் நிலவுகிறது. மீனவ சமுதாயத்தின் நம்பிக்கை, மக்கள் நீதி மய்யத்தின்மீது திரும்பும்படி எங்கள் செயல்பாடுகள் அமையவேண்டுமென தலைமை அறிவுறுத்தியுள்ளது''’என்கிறார்கள். இப்படியே டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை ஈர்க்கும் வகையில் கணக்குப் போடப்படுகிறதாம்.
முதற்கட்டமாக ஆன்லைன் மூலமாக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்க ஏற்பாடு செய்த கமல், அது கிராம அளவில் பயன்தராத நிலையில், நேரடி உறுப்பினர் சேர்க்கைக்கு வசதியாக உறுப்பினர் படிவங்களை அச்சடிக்கச் சொல்லியுள்ளார். இதற்காக சிவகாசியிலிருந்து 4 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர் படிவங்கள் அச்சடிக்கப்பட்டு சென்னை -ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்த உறுப்பினர் சேர்க்கை படிவம் இரண்டுவிதமாக தயார்செய்யப்பட்டுள்ளது. தனி நபர்களாக சேர்பவர்களுக்கான உறுப்பினர் படிவம், 25 நபர்கள் கொண்ட குழுவாகச் சேர்பவர்களுக்கு உறுப்பினர் படிவம் இரண்டும் இருக்கும். இவை கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்களை நேரில் அழைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. உறுப்பினர்களிடம் இ-மெயில் முகவரி, வாட்ஸ் அப் எண், நற்பணி மன்ற அடையாள அட்டை எண் என பல்வேறு விவரங்களும் கேட்டுத் தொகுத்துக்கொள்ளப்படுகின்றன.
அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் தமிழக மக்களை, ம.நீ.ம. பக்கம் திருப்ப வேண்டும் என கமல் நினைக்கும் நிலையில், பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள ஒரே மாவட்டமான கன்னியாகுமரியில் ஜாதி-மத பலத்தின் அடிப்படையில் கமல் கட்சியினர் கணக்கெடுப்பது டெல்லி வரை உறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாம். அதனால்தான், ஏற்கெனவே பிரதமரின் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று சந்தித்தவரான கவுதமியிடமிருந்து கமல் வைத்த சம்பள பாக்கி பற்றிய கமெண்ட் வெளிப்பட்டுள்ளது. கமலுக்கு எதிராக கவுதமியை களமிறக்கும் பா.ஜ.க. வியூகத்தின்படி, அடிக்கடி கமலை டேமேஜ் செய்யும் ஸ்டேட்மெண்ட்டுகள் வரலாம் என்கிறார்கள்.
அரசியல் என்றால் இதெல்லாம் சகஜம்தான் என்று கமலிடம் தெரிவித்துள்ளது அவரது கட்சியின் உயர்நிலைக் குழு. அதனால் சென்னையில் மார்ச் 8-இல் நடக்கும் மகளிர் தின பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 4-ஆம் தேதி திருச்சியில் திருப்புமுனைக் கூட்டம் நடத்துவதில் முனைப்பாக இருக்கிறார் கமல்.
-மணிகண்டன்