ஜெயலலிதா மரணம் குறித்து விதவிதமாக விசாரணை நடத்தி வருகிறது நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்.

Advertisment

இந்த நிலையில், ஜெ. சிகிச்சையில் இருந்தபோது அவரைக் காப்பாற்றுவதற்காக தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர்ராவை சந்தித்து ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் சசிகலாவின் நெருங்கிய சொந்தக்காரரும் தமிழக காங்கிரசின் சீனியர்களில் ஒருவருமான பட்டுக்கோட்டை ராஜேந்திரன். அந்தக் கோரிக்கை என்னவானது என அறிய பட்டுக்கோட்டை ராஜேந்திரனை சந்தித்தோம்...

Advertisment

jayalalitha

""சசிகலாவின் சித்தப்பா விஜயேந்திரன், என்னுடைய மாமா. அதாவது, என்னுடைய சொந்த சகோதரியின் கணவர்தான் விஜயேந்திரன். சசிகலாவின் அப்பா விவேகானந்தனும் விஜயேந்திரனும் உடன்பிறந்த சகோதரர்கள்.

அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டானதிலிருந்து அவரது உடல்நலன் குறித்து ஒவ்வொருவிதமான தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருந்தன. சிகிச்சை குறித்து மருத்துவமனை சொல்வதெல்லாம் உண்மையா? என்கிற சந்தேகம் பரவலாக எதிரொலிக்க ஆரம்பித்த நேரம் அது. எங்கள் தலைவர் ராகுல்காந்தி அக்டோபர் 7-ந்தேதி (2016) அப்பல்லோவுக்கு வந்துபோனார். அப்பல்லோ விசிட் குறித்து டெல்லி தலைவர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ராகுல். "ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. ஆனால், ஏதோ ஒரு கிரிட்டிக்கல் பொசிஷனில் அவர் இருக்கிறார்ங்கிறதை உணர முடிந்தது' ‘என ராகுல் பகிர்ந்துகொண்டதாக டெல்லியிலிருந்து எனக்குத் தகவல் கிடைத்தது.

Advertisment

இந்தச் சூழலில்தான், அரசு டாக்டராக பணிபுரிந்து ஓய்வுபெற்றிருக்கும் டாக்டர் பத்மராஜனை பற்றி எனக்குத் தெரியவந்தது. ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட ஆட்கொல்லி நோய் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தவர். ஆட்கொல்லி வைரஸ்களை கட்டுப்படுத்துவது குறித்து உலக சுகாதார மையமே (ரஐஞ) அவரது ஆராய்ச்சியை அங்கீகரித்திருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளில் 3 மாதம் ஆராய்ச்சி செய்ய அவரை அனுப்பி வைத்தது உலக சுகாதார மையம். ஆஸ்திரேலியாவில், ‘பயோலாஜிக்கல் சேஃப்டி கேபினெட் க்ளாஸ்-1 என்கிற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சிக்கூடத்தில் ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொண்டவர்.

dr-rajendran

இந்த ஆராய்ச்சிக்கூடம் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது. இதில் அவ்வளவு எளிதாக யாருக்கும் அனுமதி கிடைத்துவிடாது. பத்மராஜனின் ஆராய்ச்சி அறிவை உணர்ந்த உலக சுகாதார மையத்தின் முயற்சியில் அவரால் அங்கு செல்ல முடிந்தது. மர்ம காய்ச்சல்களில் மரணம் நிகழ்வதை தடுத்து மனித உயிர்களைக் காப்பாற்றும் ஆராய்ச்சி குறித்து அங்கிருந்த டாக்டர்களுக்கு வகுப்பு எடுத்தவர் டாக்டர் பத்மராஜன். அவரது ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளுமாறும் 1991-96 காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, உலக சுகாதார மையமும், தெற்கு ஆஸ்திரேலியா ஹெல்த் கமிஷனும் 1993-ல் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட டாக்டர் பத்மராஜனை, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வைக்கும் நோக்கத்தில், பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகரராவை நவம்பர் 10-ந்தேதி (2016) சந்தித்தேன். டாக்டர் பத்மராஜனை பற்றி விரிவாக அவரிடம் நான் சொன்னபோது, ஆச்சரியப்பட்ட அவர், தமிழகத்திலேயே இப்படிப்பட்ட டாக்டர் இருக்கும்போது அவரை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கிறேன். மாநிலத்தின் முதல்வரைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது'' என்றவர், பத்மராஜன் குறித்த தகவல்களை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, "முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்தீர்களா? அவரது உடல்நலன் எப்படி இருக்கிறது?' என நான் கேட்டதற்கு, "நான் பார்க்கவில்லை. டாக்டர்களிடம் ஆலோசித்தேன். ஜெயலலிதா நாட்-குட்' என கவர்னர் வித்யாசாகர்ராவ் சொன்னார். அப்போது, "டாக்டர் பத்மராஜனை அப்பல்லோவுக்குள் செல்ல உடனடி நடவடிக்கை எடுங்கள் சார். நிச்சயம் அவரால் காப்பாற்ற முடியும் சார்' என வலியுறுத்தினேன். அவரும் நம்பிக்கை தெரிவித்தார். அதன்பிறகு, பத்மராஜன் குறித்து அரசுக்கு தெரிவித்தாரா? தெரிவிக்கவில்லையா? தெரிவித்தும் அரசாங்கம் அதில் அக்கறை காட்டவில்லையா? என எதுவும் தெரியவில்லை. ஆனால், அப்பல்லோவுக்கு பத்மராஜன் அனுப்பப்படவில்லைங்கிறது மட்டும் தெரிந்தது.

பத்மராஜனுடன் கவர்னரை சந்தித்தால் என்ன? என முடிவு செய்து, டாக்டர் பத்மராஜனை தொடர்புகொண்டேன். அவரோ, "கவர்னரிடமிருந்து அழைப்பு வந்தால் வருகிறேன். நானாக வருவது சரியாக இருக்காது' என்றார். அதனால், நாம் மட்டுமே மீண்டும் கவர்னரை சந்திக்கலாம் என முயற்சித்தபோது, டெல்லிக்கும், மும்பைக்கும் பறந்துகொண்டிருந்தார் வித்யாசாகர்ராவ். அதனால் சந்திக்க முடியவில்லை. அப்பல்லோவுக்குள் டாக்டர் பத்மராஜன் சென்றிருந்தால் ஜெயலலிதா காப்பாற்றப்பட்டிருப்பார்'' என்கிறார் மிக மிக நம்பிக்கையாக.

padmarajan

டாக்டர் பத்மராஜனை சந்தித்து இது குறித்து விசாரித்தபோது, ""என்னைப் பற்றி கவர்னரிடம் தெரியப்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். அந்த சமயத்தில், கவர்னரை சந்திக்க செல்வதாகவும் தன்னுடன் வருகிறீர்களா என்றும் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் என்னை தொடர்புகொண்டு கேட்டார். "ராஜ்பவனிலிருந்து ஆர்டர் வந்தால் வருகிறேன். நீங்கள் அழைத்தால் வர இயலாது' என கூறிவிட்டேன். ராஜ்பவனிலிருந்து எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை. ஆனால், ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்க முடியும்ங்கிறது என்னுடைய உள்ளுணர்வு'' என்பதோடு முடித்துக்கொண்டார். இவரைப் போல எத்தனை திறமையாளர்களை தவிர்த்தனரோ ஜெ. சிகிச்சை வளையத்தை கட்டமைத்தவர்கள்?