புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்தது தமிழகத்தைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாண்டிச்சேரியில் கவர்னர் நியமித்த எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச், "கவர்னருக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உண்டு' என புதுவை சட்டமன்ற சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.
பாண்டிச்சேரி வழக்கு என்பது தமிழகத்தில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்களை தமிழக சபாநாயகர் பதவி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு. அந்த வரிசையில், தமிழகத்தின் 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தீர்ப்பு வெளிவந்துவிடும் என்கிற தகவல் தமிழக அரசியல் வானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. அகில இந்திய அளவில் எடுத்துள்ள நிலைப்பாடுகள் தமிழக நிலைமையை சூடேற்றுகின்றன. உத்திரபிரதேச தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அதிகம் எதிர்பார்க்கும் மாநிலம் கர்நாடகம். அங்கு இதுவரை மோடியை முன்வைத்துதான் பா.ஜ.க. தேர்தலை சந்திக்கிறது. கர்நாடக தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பது காவிரி மேலாண்மை வாரியம். அதை தேர்தலுக்கு முன்பு அமைப்பது எந்தவிதத்திலும் சிறந்த காரியமல்ல என மத்திய பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது.
தமிழகத்திற்கு எதிரான இந்த முடிவை செயல்படுத்த வேண்டுமென்றால் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வுடன் ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலை. தமிழகத்தில் பா.ஜ.க.வின் மூளை எனப்பட்ட ஆடிட்டர் குருமூர்த்தியையும் கூட சந்திப்பதை மோடி தவிர்த்து வருகிறார். அத்துடன் கவர்னர் புரோஹித், ""தமிழகத்தில் நடைபெறுவது ஊழல் ஆட்சி. மக்களிடம் மிகுந்த கெட்ட பெயர் கொண்ட அ.தி.மு.க.வை மத்திய அரசுதான் திரைமறைவில் இயக்குகிறது. அது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல'' எனத் தெளிவாக மோடியிடம் சொல்லிவிட்டார். அதனால் மோடி சுத்தமாக அ.தி.மு.க.வை ஒதுக்கிவிட்டார்.
மத்திய அரசிடம் இணக்கமாக போக எடப்பாடி பல வடிவங்களில் தூதுவிட்டார். அது டெல்லியில் எடுபடாமல் போகவே... தமிழக சட்டமன்றத்தில் "பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. ஆதரவு இல்லை' என முதலமைச்சர் வாய் திறந்தார். இப்படி அ.தி.மு.க. பேசுவது கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கன்னடர்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கும் என்பதால் அ.தி.மு.க.வை விட்டு அதிகளவில் தள்ளி இருப்பது என்கிற பா.ஜ.க.வின் முடிவை மேலும் வலுவாக்குகிறது. அத்துடன் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கு எடப்பாடிக்கு எதிராக அமைந்து விட்டால் தமிழக ஆட்சி கவிழ்வதையே பா.ஜ.க. விரும்பும் என்கிற நிலைக்கு பா.ஜ.க.வை அழைத்துச் சென்றுள்ளது என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள். பா.ஜ.க. எதிர்ப்பு என்பது, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வையும் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வையும் ஒரு புள்ளியில் இணைத்துள்ளது. "இரு அணிகளும் இணைய வாய்ப்புள்ளதா?' என தினகரன் அணியைச் சேர்ந்த பதவி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை கேட்டோம்.
""எடப்பாடியின் பா.ஜ.க. எதிர்ப்பு என்பது ஒரு இயலாமையின் வெளிப்பாடு. எங்களது பா.ஜ.க. எதிர்ப்பு என்பது போர்க்களத்தில் எடுத்த வீரசபதம். பா.ஜ.க. எதிர்ப்பு என்கிற ஒற்றை புள்ளியில் சேர்வோமா? என கேட்டால் இன்றைய நிலையில் முடியாது. எடப்பாடி மீது ஊழல் புகார்கள் கூறினார் என்கிற ஒரே காரணத்துக்காக எங்களது தரப்பு எம்.எல்.ஏ.வான வெற்றிவேலை ஏழு தனிப்படைகள் வைத்து துரத்தி அடித்தார்கள். அவர்களுடன் இப்போதைய சூழ்நிலையில் சேரமுடியாது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றிய வழக்கின் தீர்ப்பு வெளிவந்தால், அந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வருமானால் இன்றைய சூழலில் நாங்கள் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்போம். அதே நேரம் அமைச்சர்கள் நான்கைந்து பேரை கழட்டிவிட்டு ஒரு சமாதானப் படலத்துக்கு எடப்பாடி முன்வந்தால் நாங்கள் அவருடன் பேசுவோம். அது நாளைய சூழல்'' என்றார்.
அதேநேரத்தில், சசிகலாவின் கணவர் நடராஜனின் சாவில் எடப்பாடி அணியின் வலிமை வெளிப்பட்டது. 2011-ல் சசிகலாவை கார்டனிலிருந்து ஜெ. வெளியேற்றியபோது மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை தொடர்பு கொண்டார்கள். ஜெ.வால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. நடராஜன் மறைந்துவிட்டார். சசிகலா பரோலில் வந்திருக்கிறார். ஆனாலும் எடப்பாடி-ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஒருவரும் நடராஜன் சாவை திரும்பிக் கூட பார்க்கவில்லை. யாராவது வருகிறார்களா? என கண்காணிக்க நடராஜனின் உடல் வைக்கப்பட்டிருந்த தஞ்சை அருளானந்தம் நகர் வீட்டைச் சுற்றி தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த உளவுத்துறை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். "ஒருவரும் வரவில்லை' என்கிற ரிப்போர்ட்டை உளவுத்துறை எடப்பாடிக்கு அளித்திருக்கிறது. "சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதில் ஜெ.வை விட திறமையாக எடப்பாடி செயல்படுகிறார்' என்கிறார்கள் எடப்பாடி அமைச்சரவையை சேர்ந்தவர்கள்.
வருகிற 3-ம் தேதி வரை பரோலில் இருக்கும் சசிகலா அதற்குள் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு தீர்ப்பு வந்துவிட்டால் சீனுக்குள் குதிப்பார். தினகரன் பக்கம் இதுவரை 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். தீர்ப்பு தினகரனுக்கு சாதகமானால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி சுப்ரீம் கோர்ட் போனாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் எம்.எல்.ஏ.க்களும் மந்திரிகளும் நடராஜன் இறந்த துக்கத்தை லேட்டாக விசாரிப்பது போல சசிகலாவை சந்திப்பார்கள்.
அதை எதிர்பார்த்து மந்திரிகளிடம் ரகசிய செல்போனில் பேச்சு நடத்தி வருகிறார் சசிகலா என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.
-தாமோதரன் பிரகாஷ்