ன்மிக அரசியல் தலைவர் ரஜினி, இமயமலைப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமாலை சந்தித்து அரைமணி நேரம் தனிமையில் பேசியுள்ளார். அடுத்ததாக காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள குகைக் கோவிலுக்கு குதிரையில் சென்றார். தனக்குப் பின்னால் இருக்கும் பா.ஜ.க. இமேஜை குறைப்பதற்காக, காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லாவையோ, அவரது மகன் உமர் அப்துல்லாவையோ சந்திப்பதில் செவ்வாய் இரவு வரை முனைப்பு காட்டி வந்தார் ரஜினி.

Advertisment

kamal

இமயமலைப் பயணம் முடிந்து, சென்னை திரும்புவதற்குள் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்துவிடும்படி, ரஜினி உத்தரவிட்டுச் சென்றிருப்பதால், மீண்டும் ராகவேந்திரா மண்டபம் பரபரப்பாகியுள்ளது.

Advertisment

கடந்த 11-ஆம் தேதி மதுரை மாவட்டத்திலிருந்து 300 பேர் வந்திருந்தினர். முன்னாள் நிர்வாகி சத்தியநாராயணனின் ஆதரவாளரான ஜாபர், தனது ஆட்கள் சகிதம் வந்திருந்தார். சுதாகரும் ராஜூ மகாலிங்கமும் இருக்கும் அறைக்குள் செல்லும் முயற்சியில் இப்போதைய நிர்வாகிகளுக்கும் ஜாபர் தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பகல் முழுவதும் நீடித்த பஞ்சாயத்து நள்ளிரவில் ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி இருதரப்பையும் திருப்திபடுத்தும் விதமாக, மாநகர், புறநகர் என மதுரையை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது ரஜினி மக்கள் மன்றத் தலைமை.

12-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆஜராகியிருந்தனர். இம்மாவட்டத்தில் சத்தியின் சிஷ்யராக இருக்கும் பாலநமச்சி மீது சில வழக்குகளும் சர்ச்சைகளும் இருப்பதால், மண்டபத்திற்குள்ளேயே அவரை அனுமதிக்கவில்லையாம். இதற்கடுத்ததாக தர்மபுரி, சேலம், நாமக்கல், சிவகங்கை என 16-ஆம் தேதிவரை சுதாகரும் ராஜுமகாலிங்கமும் ஆலோசனை நடத்துகின்றனர். அதே நேரம் மாவட்டப் பொறுப்பு கிடைத்தவர்களுக்கும் கிடைக்காதவர்களுக்கும் சில கசப்புகளும் மனக்குறைகளும் இருந்தாலும் ரஜினியின் இலக்கான 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கையை நோக்கியும் மாவட்ட செயற்குழுவை நடத்துவதிலும் இளைஞரணி, மகளிரணிக்கான அலுவலகங்கள் திறப்பதிலும் பூத் கமிட்டி அமைப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisment

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசனோ தனது பாதையையும் பயணத்தையும் விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார். ஏப்ரல் 04-ஆம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக, கொங்கு மண்டலத்தின் பல்ஸ் பார்க்கும் முடிவோடு, கடந்த 10, 11 தேதிகளில் கோவை மாவட்டத்தின் அவினாசியிலும் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான ஏரியாக்களிலும் ஒரு ரவுண்டு வந்து கொங்கு பெல்ட்டில் வலிமையாக இருக்கும் அ.தி.மு.க.விலும்கூட அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

rajini

11-ஆம் தேதி காலை 9.35-க்கு ஈரோட்டிலிருக்கும் பெரியார்-அண்ணா நினைவகம் வந்த கமல், "மீடியா நண்பர்கள் வரவேண்டாம் ப்ளீஸ்...'’என்ற வேண்டுகோள் வைத்துவிட்டு, உள்ளே சென்றார். நினைவகத்தின் பொறுப்பாளர் பொன்.முகிலன், பெரியார் புகைப்படங்கள் குறித்து விளக்கிக்கொண்டே வந்தார். ஒருமணி நேரம் பெரியார் இல்லத்தில் இருந்த கமல், பார்வையாளர் பதிவேட்டில், "என் சிந்தனையை வளர்த்த வீடு, அவர் சிந்தனை வளர்ந்த காரணத்தால்...'’என எழுதினார்.

ஈரோடு கிளம்புவதற்கு முன்பாக, மக்கள் நீதி மய்யத்தின் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர் சந்துருவை அழைத்த கமல், ""பணம் கொடுத்து யாரையும் அழைத்து வரவேண்டாம்'' என கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். கொங்கு பெல்ட்டின் பல்ஸ் பார்த்தபின், ""ஒரு நடிகராகத்தான் என்னை பார்க்க வந்தாங்கன்னு நல்லாவே தெரியும், ஆனாலும் மாற்றத்தை எதிர்பார்த்து நம்பி வர்றாங்க''’என தனது நட்பு வட்டத்தில் கமல் சொல்லிவருகிறார்.

இதற்கிடையே ‘கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டுப் பணத்தில் தான் கமல் கட்சி நடத்துகிறார் என்ற பகீர் புகாரைக் கிளப்பியிருக்கிறார் இந்து மக்கள் கட்சியின் கணபதி ரவி என்பவர். இதற்கு பதில் அளித்த கமல் ""அது ஒரு ஜோக்'' என்றார். என்னதான் விமர்சனங்கள் வந்தாலும் உறுப்பினர் விண்ணப்ப படிவம் அச்சடித்துக் கொடுப்பது, கூட்டங்கள் நடத்துவது என அனைத்துமே கமலின் சொந்த செலவு தான்’’ என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள். மக்கள் நீதி மய்யத்திற்கான உறுப்பினர்கள் சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள் அக்கட்சியினர். திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் ஹாஜாமைதீன் நன்னிலத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தியபோது, திருவாரூர் சப்-கலெக்டர் வைத்தியநாதன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துவிட்டார்.

ரஜினிக்கும் கமலுக்கும் பொதுவான நட்பு வட்டத்தில் பேசியபோது, ""ரஜினியின் "காலா'வை வாங்கியிருக்கும் "2.0'’வை தயாரித்திருக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ்தான் ரஜினிக்கும் கமலுக்குமான ஃபைனான்ஸ் சப்போர்ட். முதலில் ரஜினிக்கு 70% கமலுக்கு 30% என ஃபைனான்ஸ் ரேஷியோ வைத்திருந்த லைக்கா, இப்போது 60%, 40% என ஃபிக்ஸ் பண்ணியுள்ளது. இதில் அ.தி.மு.க. வழியில் கமல் தன் கட்சி நிர்வாகிகளுக்கு அள்ளி வீசுகிறார். ரஜினியோ தி.மு.க. பாணியில் சிக்கனமாக இருக்கிறார். அரசியல் கேள்விகளையும் தவிர்க்கிறார். ரஜினி எதற்கும் வாய் திறப்பதில்லை என கமல் ஓப்பனாக சீண்டிய பிறகும், ரஜினி ஒதுங்கியே இருக்கிறார். அவரோட திட்டம் இனிமேல்தான் தெரியும்'' என்கிறார்கள்.

-ஈ.பா.பரமேஷ்வரன், ஜீவாதங்கவேல்,

ஜீவாபாரதி