தான் உருவாக்கிய புதிய கட்சியை, வெறும் அமைப்புதான் என சொல்லிவருகிறார் தினகரன். அவரது ஆதரவாளர்களும் அதை வழிமொழிந்தாலும், ""தினகரன் துவக்கியிருக்கும் அ.ம.மு.க. தனிக் கட்சிதான். அ.தி.மு.க.வை மீட்கவும் இரட்டை இலையை கைப்பற்றவும்தான் அமைப்பை கட்டமைத்திருக்கிறோம். இதையும் தாண்டி நிறையவிவகாரங்கள் இருக்கின்றன'' என்கிறார்கள்.

Advertisment

ops-eps-dinakaran

தினகரனின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, ""இரட்டை இலை யாருக்கு என்கிற பஞ்சாயத்தில், பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதில் பெரும்பான்மை எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி-பன்னீர் தரப்பிடம் இருப்பதாகக் கருதியதால் சின்னத்தையும், அ.தி.மு.க. கட்சி பெயரையும் அவர்களுக்கு ஒதுக்கியது தலைமைத் தேர்தல் ஆணையம். இது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுதானே தவிர, அ.தி.மு.க.வை முழுமையாக அவர்களிடம் ஒப்படைத்துவிட்டதாக கருத முடியாது. அதனால்தான், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதையும், கட்சியின் சட்ட விதிகளைத் திருத்தி "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி எங்களை அங்கீகரிக்க வேண்டும்' என எடப்பாடி-பன்னீர் தரப்பு தாக்கல் செய்த மனுவையும் இன்னமும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க, எடப்பாடி-பன்னீர் தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கில் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என தனி நீதிபதி அறிவித்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோதும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அதேநேரத்தில்... "பொதுக்குழு -செயற்குழுவின் முடிவுகள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' என அப்போது தீர்ப்பளித்ததால், அந்த வழக்கும் இன்னமும் நிலுவையில் இருக்கத்தான் செய்கிறது.

Advertisment

swamy

அதனால் "அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவையும் அவரால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரனையும் நீக்கியது செல்லாது' என்கிற தீர்ப்பை மேல்முறையீட்டு வழக்கில் பெற முடியும் என்கிற நம்பிக்கை தினகரனுக்கு இருக்கிறது. ஒரு கட்சிக்கு தலைவரோ, பொதுச்செயலாளரோ இல்லாமல் ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமையில் கட்சியை வழிநடத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. அதனால், இந்த விவகாரத்தில் தங்களுக்குச் சாதகமாக ஆணையத் திலும் தீர்ப்பு வரும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் தினகரன். இதற்காக, எடப்பாடி-பன்னீருக்கு எதிராக ஏகப்பட்ட காய்களை நகர்த்தி வைத்திருக்கிறார் சுப்பிரமணியசாமி.

தவிர, தனிக்கட்சி என அறிவித்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தினகரனுடன் இணைந்து நிற்க முடியாது. ஆட்சி அதிகாரம் எடப்பாடி-பன்னீரிடமிருந்து விலகிவிட்டால் இயல்பாகவே கட்சி தம்மிடம் வந்துவிடும் எனவும் கணக்குப் போட்டுள் ளார் தினகரன். தனிக்கட்சி என பிரகடனப் படுத்திவிட்டால், அதைச் சுட்டிக்காட்டியே, அ.தி.மு.க.வுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி-பன்னீர் தரப்பு வாதங்களை வைத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுவிடும். கட்சி துவங்குவதற்கு முன்பு சசிகலாவை 2 முறை சந்தித்தபோதும் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார் தினகரன்'' என்று விவரிக்கின்றனர்.

சுப்பிரமணியசாமி தரப்பில் விசாரித்த போது, ""நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டமன்றத்துக்கும் ஒரேநேரத்தில் தேர்தலை நடத்துவதுங்கிறது பா.ஜ.க.வின் எதிர்கால திட்டம். எடப்பாடி- பன்னீரோடு கூட்டணி வைப்பதில்லைங்கிறது பா.ஜ.க.வின் தற்போதைய முடிவு. மேலும், தமி ழகத்தில் திராவிட கட்சி களால் கட்டமைக்கப் பட்டிருக்கும் சின்னத்தின் முக்கியத்துவத்தை, அரசியலை உடைப்பதுங்கிறதும் பா.ஜ.க.வின் செயல்திட்டமாக இருக்கிறது. அதன் முதல்கட்டமாக, இரட்டை இலையை மீண்டும் முடக்கவிருக்கிறது டெல்லி. அது நடந்தேறும்போது அ.தி.மு.க.ங்கிற கட்சியும் இருக்காது.

அந்தச் சூழலில், அ.தி.மு.க.வை சசிகலாவோ, தினகரனோ சொந்தம் கொண்டாடினாலும் கிடைக்காது. இவைகளுக்காகத்தான், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்ததற்கு எதிராக முன்னாள் எம்.பி. கோவை கே.சி.பழனிச்சாமியின் மனு உட்பட எடப்பாடி-பன்னீருக்கு எதிரான அத்தனை மனுக்களையும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் வைத்திருக்க செய்திருக்கிறது பா.ஜ.க. தேவைப்படும்போது அவை தூசு தட்டப்படும். எங்க சுப்பிரமணியசாமி மூலம் கிடைத்த இந்த தகவல்களையெல்லாம் வைத்துத்தான் எதிர்காலத் தில் தனிக்கட்சி தேவைப்படும் என்பதால் அ.ம.மு.க.வை துவக்கியிருக்கிறார் தினகரன்'' என்று ரகசியங்களை உடைத்தனர்.

kcpalanisamyஇந்தநிலை யில், எம்.ஜி. ஆரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட கே.சி. பழனிச்சாமியை அ.தி.மு.க.விலிருந்து எடப்பாடியும் பன்னீரும் நீக்கியிருக்கிறார்கள். அவரிடம் நாம் பேசியபோது,’ ""அ.தி.மு.க.வின் சட்டவிதிகள்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்துதான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்தலை நடத்தாமல் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதால் சசிகலாவின் நியமனத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன். என்னுடைய அந்த மனு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அதேபோல, கட்சியின் விதிகளைத் திருத்த, பொதுச்செயலாளர் இல்லாத பொதுக்குழுவுக்கு அதி காரமில்லை. அந்தவகையில் கட்சியின் விதிகளை எடப்பாடியும் பன்னீரும் திருத்தியது செல்லாது.

அதனால்தான், திருத்தப்பட்ட விதிகளையும், தங்களது நியமனத்தையும் அங்கீகரிக்க வேண்டுமென எடப்பாடியும் பன்னீரும் வைத்த கோரிக்கையை இன்னமும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இந்த இரண்டுமே அவர்களுக்கு எதிராகத்தான் திரும்பும். இதனையறிந்ததால்தான் நான் போட்ட மனுவை வாபஸ் வாங்க வலியுறுத்தினர். நான் மறுத்துவிட்டேன். ஆணையத்தின் அங்கீகாரமில்லாத இந்த சர்வாதிகாரிகளுக்கு என்னை நீக்கும் அதிகாரம் கிடையாது. இவர்களைப்பற்றி பல ரகசியங்கள் என்னிடம் இருக்கிறது. இவர்களால்தான் அ.தி.மு.க.ங்கிற கட்சியே இல்லாமல் போகப்போகிறது''’என்றார் கோபமாக. அ.தி.மு.க.வில் அதிருப்தி அதிகரிப்பதைப் பார்த்து, அ.ம.மு.க. ஹேப்பியாக உள்ளது.

-இரா.இளையசெல்வன்

----------------------------------------------

அமைச்சர் அப்செட்! மாஜி அதிருப்தி!

shanmuganathanஇ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். உடன் படிக்கையின்படி திருச்சி மாநகர் மா.செ.வாக இருந்த அமைச்சர் வெல்ல மண்டி நடராஜனுக்குப் பதில் எம்.பி. குமார் நியமிக்கப்பட்டுள் ளார். இதய பிரச்சனையால் சுகவீனமாக இருக்கும் வெல்ல மண்டி நடராஜன், சற்று ஓய்வில் இருந்தாலும், தன்னிடம் மேலிடம் தகவல் தெரி வித்துவிட்டு மாற்றம் செய்யும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் குமார் மா.செ.வாக நியமிக்கப்பட்டதை டி.வி.யைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டார். அப்போது அமைச்சரின் வீட்டுக்கு வெளியே சுரேஷ்குப்தா, ராஜ்குமார், அன்பழகன், மாணவரணி மா.செ. கார்த்திகேயன் ஆகிய ர.ர.க்கள் பேசிக் கொண்டிருந்தனர். சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த பேச்சு சூடாக ஆரம்பித்ததும்... "மாத்திரை எடுத்துட்டு வர்றேம்பா' எனச் சொல்லிவிட்டு, வீட்டுக்குள் போனார் வெல்லமண்டி.

""நீ மாவட்டம் ஆகுறதுக்கு முயற்சி பண்ணி கிடைக்காததால, குமாருக்கு ரெகமண்ட் பண்ணிட்டியோ''’எனக் கேட்டவாறே கார்த்திகேயனை அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள் மற்ற மூவரும். சண்டையில் சட்டை கிழியும் அளவுக்கு நிலைமை போனாலும் வீட்டுக்குள்போன அமைச்சர் வெளியே வரவேயில்லை. ஒரு வழியாக அவர்களுக்குள்ளேயே சமாதானமாகி கலைந்து போயிருக்கிறார்கள். தனது ஆட்களிடம் பேசிய வெல்லமண்டி, “""அப்பாடா இனிமே கட்சி வேலை டென்ஷன் கிடையாது. அமைச்சரா மட்டும் இருந்துக்கிட்டு காலத்தை ஓட்டிட வேண்டியது தான்''’என்கிறாராம்.

குமார் நியமிக்கப்பட்ட தற்கு திருச்சி அ.தி.மு.க.வில் கடுமையான எதிர்ப்பு இருப்ப தாகத் தகவல் பரவிய நிலை யில்... புது மா.செ.ஆனதும் ஸ்ரீரங் கம் கோவிலுக்குச் சென்றார் குமார். அங்கே அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜனும் வளர்மதியும் குமாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஆச்சர்யப்படுத்தினர். அடுத்ததாக, அமைச்சர் வெல்லமண்டி பெர்மனெண்டாக தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குப் போன குமார், பகுதிச் செயலாளர்களைச் சந்தித்து, ""உங்களுக்கு என்ன தேவையோ நான் செய்றேன். என்னிடம் தவறு இருந்தா சொல்லுங்க, திருத்திக்கிறேன்''’என உருக்கமாக பேசியிருக்கிறார். ஏர்போர்ட் ப.செ. வெல்லமண்டி சண்முகமும், ஸ்ரீரங்கம் ப.செ. டைமண்ட் திருப்பதியும் ஆப்சென்ட்டாகிவிட்டனர்.

"திருச்சிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட், ஏர்போர்ட் விரிவாக்கம் இதெல்லாம் குமார் வசிக்கும் ஏரியாவுக்குள் வருவதால், சுறுசுறுப்பு காட்டுவார் மா.செ.'’என்கிறார்கள் ர.ர.க்கள். இதற்கிடையே கட்சியின் இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராக முன்னாள் மந்திரியும் ஓ.பி.எஸ். ஆதரவாளருமான பரஞ் ஜோதி அறிவிக்கப்பட்டார். "எனக்கு 58 வயசாச்சு, இப்பப் போயி இளைஞர் பாசறை பதவியா?'’என நொந்த பரஞ் ஜோதி, தனக்கு சால்வை போட வந்தவர்களிடம் வேண் டாம் என திருப்பிவிட்டாராம். இதனிடையே கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆர்வம்காட்டத் தொடங்கிவிட்டது புது மா.செ. தரப்பு.

-ஜெ.டி.ஆர்., மகி

தினகரன் பக்கம் இன்னொரு எம்.எல்.ஏ.?

minister-upset

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தினகரன் தரப்பிற்கு தூதுவிட்டிருக்கின்றார் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வான சண்முக நாதன். ""ஜெ. இருக்கும்போதே மா.செ., மந்திரி என பதவி வகித்தவன் நான். அதன்பின் தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.கூட போனேன். இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.ஸும் இணைந்தாங்க. அங்கேயாவது மந்திரி இல்லை, மா.செ. கொடுப் பாங்கன்னு எதிர்பார்த்தேன். மந்திரிக்கு, மாவட்டத்தில் வேறொரு ஆள் இருக்கும்போது, மா.செ.வாவது கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். அதிலேயும் மண் விழுந்துடிச்சு. மாநில அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்திருக்காங்க. இனிமேல் இங்கே இருந்து என்ன பிரயோசனம்? என்னை நம்பியிருக்கின்ற ஆட்களுக்கு என்ன செய்வது..? என்பதால்தான் சில முடிவுகள் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்'' என பீடிகை போட்டு தன் ஆதரவாளர்களிடம் தினகரனிடம் தூதுவிட்டதை பகிர்ந்திருக்கின்றார், கூவத்தூர் முகாமுக்குப் போகும்முன் எஸ்கேப்பான ஸ்ரீவைகுண்டம் ச.ம.உ. சண்முகநாதன்.

ஆளும்தரப்போ, ""அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். முதலில் சென்னை வாருங்கள். தி.மு.க.வில் உள்ளதைப்போல் தூத்துக்குடியை வடக்கு, தெற்காகப் பிரித்து உங்களை மா.செ.வாக்குகிறோம்'' என சமாதானம் பேசியும், தினகரனைச் சந்திக்கும் மூடில் சென்னைக்குப் புறப்பட்டார் சண்முகநாதன்.

-நாகேந்திரன்