மிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்பை நீட் தேர்வு சிதைத்து சின்னாபின்னமாக்கியிருப்பது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பின் மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது.

Advertisment

கடந்த மே மாதம் சி.பி.எஸ்.இ.-யால் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் 13 லட்சம் மாணவர்கள் 2,256 மையங்களில் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையக் குழப்பத்தால், 7 ஆயிரம் பேர் வெளிமாநிலங்களில் அல்லாட வேண்டியிருந்தது. அந்த மன உளைச்சலால் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் அப்பா கிருஷ்ணசாமி உயிர்ப்பலியானார். தேர்வு முடிவுகளால் பாதிக்கப்பட்ட மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார்.

neetexam

தேர்வு நடந்து முடிந்த வேகத்திலேயே தமிழ்மொழியில் கேட்கப்பட்ட நீட் தேர்வு கேள்விகளில் பிழைகள் நிறைந்திருப்பதை டெக் ஃபார் ஆல் (பங்ஸ்ரீட் எர்ழ் ஆப்ப்) என்ற அமைப்பு ஆதாரத்துடன் அறிவித்தது. இயற்பியல் பாடப் பிரிவில் 10 வினாக்களும், வேதியியலில் 6 வினாக்களும், உயிரியலில் 33 வினாக்களும் தவறாக கேட்கப்பட்டிருந்தன. மேலும் கேள்வி எண்கள் 50, 75, 77, 82 ஆகியவையும் தவறாக இருப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டது. அப்போதும்கூட சி.பி.எஸ்.இ. தரப்பு அலட்சியமான பதில்களை அளித்தது.

Advertisment

judges

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது +2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ஜூன் 6-ஆம் தேதி வரவேண்டிய தேர்வு முடிவுகள் இந்த வழக்கின் காரணமாகத்தான் முன்கூட்டியே ஜூன் 4-ஆம் தேதி அவசர அவசரமாக மதியம் 12:30 மணிக்கு வெளியிடப்பட்ட மோசடியும் அரங்கேறியது.

neetexamவழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜூலை 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியபோது, வழக்குத் தொடரப்பட்ட நிலையில் அவசர அவசரமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், நீட் விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. தரப்பு தன்னிச்சையாகவும் சர்வதிகார போக்குடனும் செயல்படுவதை வேதனையுடன் கண்டித்து, தமிழ்மொழி வினாத்தாளில் தவறாக இடம்பெற்றிருந்த 49 கேள்விகளுக்கு 196 கருணை மதிப்பெண்கள் அளிக்க உத்தரவிட்டது.

Advertisment

இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் தமிழக மாணவர்களுக்கு அதிக அளவில் மருத்துவ இடம் கிடைக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள். தமிழக அரசின் நிலை என்ன என விசாரித்தபோது, 99% கலந்தாய்வு முடிந்து, மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இனி மாற்றுவது பல சிக்கல்களை உண்டாக்கும். சி.பி.எஸ்.இ. தரப்பு மேல்முறையீடு செல்லும்போது வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற மனநிலையில்தான் அதிகாரிகள் தரப்பு இருக்கிறது.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், ""இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மாணவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இடங்கள் வழங்க முடியும். அரசு கூடுதலாக இடங்களை உருவாக்கலாம். 196 கருணை மதிப்பெண்கள் கொடுத்த பிறகு புதிய தரவரிசை பட்டியல் மூலம் எத்தனை மாணவர்களுக்கு இடம் கிடைக்குமோ அத்தனை இடங்களை அரசு மருத்துவக் கல்லூரியில் உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் கொடுத்தால் முதல்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். கருணை மதிப்பெண் பெறுகிற மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தீனதயாள் மருத்துவக் கல்லூரி மற்றும் அன்னை மருத்துவக் கல்லூரிகளை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டபோது அங்கு படித்த மாணவர்களைப் பிரித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடங்களை அதிகரித்து, அவர்களைச் சேர்த்தனர். அதேபோல செய்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதில் மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், உச்ச நீதிமன்றம் ஆகியவைதான் முடிவு செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ. தரப்பு மேல் முறையீடு செய்து, தற்போதைய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டால் உச்சநீதிமன்றமும் மாணவர்களுக்கு துரோகம் இழைத்ததாகத்தான் பார்க்க முடியும்''’என்கிறார் அழுத்தமாக.

நீட் தேர்வின் கொடுங்கரங்களிலிருந்து தமிழக மாணவர்களுக்கு எப்போதுதான் விடுதலை கிடைக்குமோ!

-சி.ஜீவா பாரதி