இலவச ஆடு-மாடுகள் திட்டத்தைப் போல ஜெ. பாணியில் 110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்பில், "சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் 38,500 பெண்களுக்கு தலா 50 கோழிகள் வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 25 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு நிதித்துறையில் எதிர்ப்புகள் எழுந்து அடங்கியிருக்கின்றன.
நம்மிடம் பேசிய நிதித்துறையினர், ""இலவச ஆடு-மாடு திட்டத்தை 2011-ல் கொண்டுவந்தார் ஜெயலலிதா. 5 ஆண்டுகளில் 7 லட்சம் பெண்களுக்கு தலா 4 ஆடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 925 கோடி. ஆனால், துவக்கத்திலிருந்தே ஏகப்பட்ட குளறுபடிகள். தகுதியான பயனாளிகளுக்குப் போய்ச்சேரவில்லை. கடுமையான நிதி நெருக்கடியில் இத்திட்டம் ஊழல்களுக்குத்தான் வழிவகுத்ததே தவிர பலனளிக்கவில்லை. அதேபோல தான் மாடு வழங்கும் திட்டமும். அதனால், 2016-ல் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இப்போது இலவச நாட்டுக்கோழியை அறிவித்துள்ளனர். திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டபோது, "வருசத்துக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் சுரண்டப்பட்டுவிடும். நாட்டுக்கோழி இனம் அழிந்து வரும் நிலையில், ப்ராய்லர் பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளைத்தான் பர்ச்சேஸ் செய்து தரமுடியுமே தவிர அசல் நாட்டுக்கோழிகள் கிடைப்பது அரிது. அதனால் தனியார் கோழி பண்ணையாளர்களுக்குத்தான் லாபம். அதனால், நிதி நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இத்திட்டம் தேவையில்லாதது' என அதிகாரிகள் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டும், பிடிவாதமாக திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்'' என்கிறார்கள்.
இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு எதிராக எடப்பாடி செயல்படுகிறார் என அ.தி.மு.க.விலுள்ள அந்த சமூகத்தினர் அவர் மீது எரிச்சலடைந்து வருகின்றனர். ஜெயலலிதா இல்லாத நிலையில் வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வன்னியர்கள் பா.ம.க. பக்கம் தாவிவிடக்கூடும் என கருதும் எடப்பாடி, அச்சமூகத்தின் ஆதரவை பெரும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார். குறிப்பாக, வன்னியர் சமூகத்தின் மூத்த தலைவர் ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தல், முடங்கிக்கிடக்கும் வன்னியர் நலவாரியத்துக்கு உயிர்கொடுத்தல், வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு என நீண்ட வருடங்களாக கிடப்பில் இருக்கும் கோரிக்கைகளை பரிசீலித்திருக்கிறார். இது சார்ந்த அறிவிப்புகள் வரவிருக்கிறது’’ என்கிறது கோட்டை வட்டாரம். கொங்கு மண்டலத்திற்கான அத்திக்கடவு கூட்டு குடிநீர்த் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்பட எல்லாவற்றையும் ஓட்டுகளை மனதில் வைத்து அறிவித்தால், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் சமாளிக்கலாம் என நினைக்கிறாராம் எடப்பாடி.
-இளையர்