கேரள மாநில கொல்லம் நகரில், கடந்த 6-ந் தேதி மாயமான இலங்கைத் தமிழர்கள் அடுத்தடுத்து பிடிபட்டதுதான் தமிழக க்யூ பிரிவை திகைக்க வைத்திருக்கிறது.
வயிற்றுப் பிழைப்பிற்காக சட்ட விரோதமான வழியில் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ள முனைந்தபோது, தமிழக க்யூ பிரிவு போலீசாரின் தகவலால் கொல்லம் சிட்டி போலீஸ் அவர்களை வளைத்தது. மொத்தம் 22 இலங்கைத் தமிழர்கள். இது வெளியுறவுத்துறை விவகாரம் என்பதால் இதை காவல்துறை ரகசியமாக வைத்திருக்கிறது.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது பெயரைப் பதிவிட விரும்பாத அவர்கள்...
"கடந்த ஆக. -16 அன்று ஸ்ரீலங்கா ப்ளைட் மூலமாக அங்கிருந்து சென்னை வந்திறங்கிய இலங்கையைச் சேர்ந்த ஆன்டனி கேசவன், பவித்ரன் ஆகிய இரண்டு பேரையும் நாங்கள் எங்கள் தொடர் கண்காணிப்பிற்குள் கொண்டு வந்தோம். இவர்கள் இருவரும் இலங்கையிலிருக்கும் ஏஜென்ட் லட்சுமணனின் கையாட்கள் என்பது தெரியவந்தது.
ஒரு வார கண்காணிப்பில் இருந்த அந்த 2 பேரும் திடீரென மாயமானார்கள். அதே சமயம், திருச்சி அகதிகள் முகாமி-ருந்து 6 பேர், சென்னை அகதிகள் முகாமிலிருந்து 3 என 9 பேர் மொத்தமாகக் காணாமல் போனது தெரியவந்தது. அத்தனை பேருக்கும் வலை விரிக்கப்பட்டது. குறிப்பாக, இலங்கை ஏஜென்ட்டின் அல்லக்கை களான ஆன்டனி கேசவன், பவித்ரன் ஆகிய இருவரின் செல் நம்பரை ஃபாலோ செய்ததில் அது கேரளாவின் கொல்லம் நகரைக் காட்டியது. இந்த சிக்னல் தொடர்ந்து இரண்டு நாட்கள் நீடித்ததால் எங்கள் தமிழக க்யூ பிரிவு, கொல்லம் சிட்டி கமிஷனர் நெரின் ஜோசப்பிற்கு 2 பேர்களைப் பற்றிய தகவலைக் கொடுத்து, அவர்களை வளைக்கும்படி தகவல் அனுப்பியது.
சற்றும் தாமதிக்காத கமிஷனர் ஜோசப், அவர்களைப் பிடிக்க தனிப்படையை அனுப்பினார். சிட்டியிலுள்ள லாட்ஜ் ஒன்றில் ஆன்டனி கேசவன், பவித்ரன் ஆகிய இரண்டு பேரையும் வளைத்த தனிப்படை, அவர்களுடனிருந்த, மாயமான 9 இலங்கைத் தமிழர்களையும், சேர்ந்து வளைத்தது. அடுத்து அங்கே சிட்டியிலுள்ள அனைத்து லாட்ஜுகளிலும் குடைந்ததில், தனிப்படையிடம், மேலும் 11 இலங்கைத் தமிழர்கள் என மொத்தம் 22 பேர் அவர்களின் கஸ்டடிக்கு வந்தனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது, அதிரவைக்கும் தகவல்கள் கிடைத் தன. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய தால், அங்கிருந்து தப்பித்து வெளிநாட்டுக்குப் போக விரும்புகிறவர்களை சட்டவிரோதமாக தோணிகளிலும், போட்களிலும் அனுப்பி வைக்கிற ஏஜண்ட்தான் லட்சுமணன். இவர் ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்குச் சட்ட விரேதமாக நிறைய பேரை ரொம்ப காலமாக அனுப்பிவருகிறா ராம். அவர்தான் இந்த 22 பேரிடமும் தலா ரெண்டரை லட்சம் வீதம் வசூலித்திருக்கிறார்.
கள்ளத்தோணி ஆசாமிகளுக்கு இடைஞ்சல் தராத நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா போன்ற வற்றுக்கு அந்த நபர் ஆட்களை அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அங்கே செல்பவர் களுக்கு வேலையும் ஒரே வருடத்தில் குடியுரிமையும் கிடைத்துவிடுமாம். இந்தப் பயணத்துக்காகத்தான் ஆகஸ்ட் 19 அன்று, ஏஜண்ட்டுகள், இலங்கைத் தமிழர்களை கேரளா வரச்சொல்லி இருக்கிறார்கள். அதற் குள் அந்தத் திட்டம் லீக் ஆகி, சிக்கிவிட்டார்கள்.
இந்தமுறை வெளிநாட்டுக்கு அனுப்ப இருந்தவர்களுக் காக கொல்லம் பக்கமுள்ள சக்திகுளங்கரா ஏரியாவில், போட் ஏற்பாடாகி இருந்ததாம். இப்படி சட்டவிரோத மாக இங்கிருந்து போட்களில் ஆஸ்திரேலியா போகிற அத்தனைபேரும் அங்குபோய்ச் சேர்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. புயல், மழை வழி மறித்தால் அவர்கள் நிலை அவ்வளவுதான். சில நேரம் வழியிலேயே பலரும் அமெரிக்கன் நேவியிடம் சிக்கி அவர்களின் கண்ட்ரோலிலுள்ள லட்சத்தீவு பக்கமுள்ள தீவுச் சிறையில் அடைக்கப்படுவதும் உண்டு. எங்களிடம் பிடிபட்ட அவர்கள், தங்களை இலங்கைக்காரர்கள் என்றார்கள். வயிற்றுப் பாட்டிற்காக அத்தனை ரிஸ்க் எடுக்கும் அப்பாவிகளை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.
20 வருடங்களுக்கு முன் இலங்கையில் விடுதலைப் போர் நடந்த நிலையில், எதிர்த்துப் போராடிய ஈழத் தமிழர்களுக்குத் தேவையான உணவு மற்றும் டீசல், மண்ணெண்ணை போன்ற அத்யாவசியப் பொருட்கள் தமிழகத்திலிருந்து போக முடியாத அளவுக்கு லாக் செய்யப்பட்டது. அப்போது, இப்படிப்பட்ட ஏஜண்டுகள், கொல்லம் மீனவர்களோடு தொடர்புவைத்துக் கொண்டு, அந்த சரக்குகளை இலங்கைக்கு அனுப்பியதில் கோடி கோடியாய் லாபம் பார்த்திருக்கிறார்கள். அப்போதிலிருந்தே இலங்கை ஏஜண்ட்கள் கேரள மீனர்வகளிடம் தொடர்பில் இருந்துவருகிறார்கள். அந்தத் தொடர்பில் கள்ளத்தோணியில் ஆட்களை இப்போதும் அனுப்பி வருகிறார்களாம்''’என்றார்கள் அழுத்தமாய்.
பிடிபட்ட இலங்கைத் தமிழர்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் ரகசியமாக வைத்தபடி, அவர்கள் 22 பேரையும் ரிமாண்ட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
வயிற்றுப்பாட்டிற்காக பிழைப்பு தேடி வெளிநாடு களுக்குத் தப்பியோடும் அளவுக்கு, அந்நாட்டு மக்களை கடும் நெருக்கடியில் தள்ளியிருக்கிறது உருப்படாத ரணிலின் இலங்கை அரசு.