குடும்பச் செலவுகளைச் சமாளிக்க கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.
சேலம் மாநகராட்சியில் முதன்மை அலுவலகம் மட்டுமின்றி நிர்வாக வசதிக்காக அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் கட்டுப்பாட்டில் 60 கோட்டங்கள் உள்ளன.
தூய்மைப் பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் என 2,743 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் உள்பட பொறியாளர்கள், வரித்தண்டலர்கள், ஆர்.ஐ.,க்கள், உதவி ஆணையர்கள், அலுவலக கிளர்க்குகள் என மொத்தம் 4,065 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டாகவே குறித்த தேதியில் சம்பள பட்டுவாடா வழங்கப்படாமல் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. இடையில் ஊதிய பட்டுவாடாவில் உள்ள தாமதம் சரிசெய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மூன்று மாதம் வரை தாமதமாக ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் நம்மிடம் பேசினர்.
''கொரோனா பேரிடர்க் காலத்திலும் இரண்டு முதல் மூன்று மாதத்திற்கு மேல் ஊதிய பட்டுவாடா தாமதம் ஆவதால் மாநகராட்சி ஊழியர்கள் வீட்டுத் தேவைகளுக்காக வாங்கிய கடனுக்கான இ.எம்.ஐ. செலுத்த முடியவில்லை. இ.எம்.ஐ. தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்படும்போது வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் அதற்கும் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன.
அடுத்த ஓரிரு மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுவிடும். இதே நிலை தொடர்ந்தால் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி கட்டணம்கூட செலுத்த முடியாத நிலை ஏற்படும். குடும்பச் செலவைச் சமாளிக்க ஊழியர்கள் பல இடங்களில் கைமாற்று, கடனென கைநீட்டவேண்டிய நிலை உள்ளது.
பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் பென்ஷன் வழங்குவது சில மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஓய்வூதியம் தவிர வேறு வருமானம் இல்லை. எல்லா தரப்பு ஊழியர்களையும், ஓய்வூதியர் களையும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. இதனால் வேலை மீதான ஆர்வமும் குறைகிறது,'' என்று புலம்புகிறார்கள் ஊழியர்கள்.
சம்பளம் பட்டுவாடா செய்வதில் ஏன் காலதாமதம் என மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.
''சேலம் மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், திரையரங்குகளில் கேளிக்கை வரி, அபாயகரமான மற்றும் அருவருக்கத்தக்க தொழில்களுக்கான பதிவுக் கட்டணம், பாதையோரக் கடைகளுக்கான கட்டணம், மார்க்கெட் ஏலம், பேருந்துகள் நுழைவுக் கட்டணம், கல்யாண மண்டபங்களுக்கான கட்டணம், கழிப்பறைக் கட்டண வசூல், செல்போன் கோபுரங்களுக்கான கட்டணம் ஆகியவற்றின் மூலம்தான் வருமானம் வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டாகவே பேருந்துகள் இயக்கம் குறைந்துவிட்டது. திரையரங்குகள் முழுமையாகச் செயல்படவில்லை. கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு, வருவாய் இழப்பு காரணமாக வீடு, கட்டட உரிமையாளர்களிடம் கறாராக சொத்து வரி வசூலிக்க முடியவில்லை.
இப்போதுள்ள நிலையில் மாநகராட்சிக்கு எல்லா இனங்களின் மூலமும் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தவிர, 300 கோடி ரூபாய்க்கு மேல் உலக வங்கிக்கடன், குடிநீர் திட்டங்களுக்கான கடன்கள் இருக்கின்றன. இதற்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது.
மின்கட்டணத்திற்கு மட்டுமே மாதம் 3.50 கோடி ரூபாய் செலவாகிறது. இவை தவிர, வாகனங்களுக்கு டீசல் உள்ளிட்ட எரிபொருள் செலவும் இருக்கிறது. வருமானத்தைவிட செலவினங்கள் அதிகரித்துள்ளதால் மாதந் தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம் வழங்க முடியவில்லை'' என்றார் மூத்த அதிகாரி ஒருவர்.
சேலத்தில் மட்டுமின்றி, கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள எல்லா மாநகராட்சிகளிலும் இதே நிலைதான் என்றும் சொல்கிறார்கள்.
இதுதொடர்பாக நாம் சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ''சேலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் வருமானம் வரவேண்டும். ஆனால் சொத்து வரி வசூல், குடிநீர் கட்டணம் வசூல், குத்தகை வருவாய் என 50 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிகிறது.
பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் மக்களிடம் ரொம்பவும் நெருக்கடி கொடுத்து வரிகளை வசூலிக்க முடியவில்லை. எங்களுக்கும் ஊழியர்களின் நிலைமை புரியாமல் இல்லை. வருமானம் இல்லாததால் சம்பளம் போடுவதில் தாமதம் ஏற்படுகிறது, இன்னும் ஒரு வாரத்திற்குள் க்ளீயர் செய்துவிடுவோம்'' என்றார்.
முன்னாள் முதல்வர் மாவட்டம், தலைமைச் செயலாளரின் சொந்த மாவட்டம் என்ற சிறப்புகளைப் பெற்ற சேலம் மாநகராட்சியில் சம்பளமின்றி ஊழியர்களின் வயிறு காய்ந்துவரும் பிரச்சினையின் மீதும் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும்.