ஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பைகளைத் தரம்பிரித்து அப்புறப்படுத்தும் ஒப்பந்தத்தில் சுமார் ரூ.10 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் போடப்பட்ட பொதுநல வழக்கின் கிடுக்குப்பிடி யால் முன்னாள் மாநகர ஆணையர் சரவணகுமார், பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர் ஆகிய 4 பேர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தினந் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை ஜெப மாலைபுரம் குப்பைக் கிடங்கில் சேகரித்துவைத் துள்ளனர். உடனுக்குடன் இந்த குப்பைகளை தரம்பிரித்து வெளியேற்றாததால் மலைபோல காட்சியளித்தது. இதில் 2018-ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயந்திரங் களை வைத்து பயோமைனிங் முறையில் குப்பை களை தரம்பிரித்தனர். இந்த நிலையில் முதல் ஒப்பந்தகாலம் முடிவடையும் முன்பே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சாஃப்ட்பெர்ரி சொல்யூசன் என்ற நிறுவனத்திற்கு குப்பைகளைத் தரம்பிரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

Advertisment

இந்தக் காலகட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்காமல் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜ.க. பிரமுகர் போர்வாள் கோவிந்தராஜ் என் பவர் பல்வேறு தகவல்களைத் திரட்டி லஞ்ச ஒழிப்பு போலீசா ரிடம் புகார் கொடுத்தார். புகார் கிடப்பில் போடப்பட்டது. இதனை யடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஒரு வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் "ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. காலம்கடத்தினால் உயரதிகாரி கள் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் சொல்ல வேண்டும்?' என்று கிடுக்கிப்பிடி போட்டவுடன் அவசர அவசரமாக வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் முதல் தகவலறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த முதல் தகவலறிக்கையில், "2018 முதல் 2023 வரை சுமார் 2,30,000 கனமீட்டர் குப் பையை தரம்பிரிக்க திருவாரூர் கோயில்வெண்ணி எம்.எஸ்.ஜி இன்ஃப்ரா என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு, சுமார் 77,000 மெட்ரிக் டன் குப்பைகளை தரம்பிரித்துள்ள நிலையில், ஒப்பந்த நிறுவனத்திற்கு தெரிவிக்காமலேயே மாநகராட்சியில் பதிவுசெய்யாத சிவகங்கை சாஃப்ட்பெர்ரி சொல்யூசன் என்ற நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் கொடுத்ததுடன், குப்பைகளை அளவீடுசெய்ய நிர்ணயிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திடம் சான்றுபெறாமல், வேறு பல்கலைக்கழகத்தில் சான்றுபெற்றதாக முறை கேடாக ஆவணங்கள் தயார்செய்துள்ளனர். மாநகராட்சி புத்தகத்தில் தரம்பிரிக்கப்பட்ட குப்பையின் அளவு குறித்து மிகையாகப் பதிவு செய்து பொய் ஆவணங்கள் வைத்துள்ளனர். போலி பில்கள் மூலம் அதற்கான தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 9,56,82,048 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதுசம்பந்தமாக உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் முன்னாள் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர்கள் ஜெக தீசன், கார்த்திகேயன், ஒப்பந்தக்காரர் மணிசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்த விவகாரத்தை நீதிமன்றம்வரை கொண்டுசென்ற  போர்வாள் கோவிந்தராஜ், “"தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கு சி.ஆர்.சி. டெப்போ அருகிலுள்ளது. இதில் 2018-ல் பயோமைனிங் முறையில் தரம்பிரிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. அதற்காக மும்முனை மின்சாரம் பயன்படுத்தி கொஞ்சகாலம் தரம் பிரிக் கப்பட்டு மக்கும் குப்பைகளை விவசாயிகளுக்கும், மக்காத குப்பைகளை சிமெண்ட் பாக்டரிகளுக் கும் அனுப்பினர். கொரோனாவுக்குப் பிறகு அந்தப் பணிகள் முடங்கின. ஆனால் அந்த இயந்திரங்கள் அங்கேயே இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளதாகக் கூறினர். அதன் பிறகுதான் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைக் கேட்டுப் பெற்றேன். ஒப்பந்தம் கொடுப்பதற்கு முன்பே பதிவு செய்யாத ஒரு நிறுவனத்திற்கு ஒர்க் ஆர்டர் கொடுத்திருந்தார் கள். ஒரு கனமீட்டர் குப்பையை பிரிக்க 0.63 யூனிட் மின்சாரம் தேவை. ஆனால் அங்கே மின்சாரமே பயன்படுத்தப்படாமல் இருந்ததும் தெரிந்தது. அதன்பிறகு மேலும் தகவல்களைத் திரட்டி தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லையென்ற தும் வழக்குத் தொடர்ந்தேன். உயரதிகாரி நீதிமன்றத்தில் வந்து பதில் சொல்லவேண்டும் என்று நீதிமன்றம் கறாராக கூறிய பிறகே 4 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

carbage1

மாநகராட்சிப் பணிகள் மேயருக்குத் தெரியாமல் நடந்திருக்காது. லஞ்ச ஒழிப்பு போலீசார் மேயர் சன்.ராமநாதன் பெயரை முதல் தகவலறிக்கையில் சேர்க்கவில்லை. இதில் சம்பந்தப்பட்டு அரசு பணத்தை கையாடல் செய்தவர்கள் அனைவரையும் சேர்க்கவேண்டும். இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் முறையிடப் போகிறோம். இந்த முதல் தகவலறிக்கையை அமலாக்கத்துறைக்கும் அனுப்பி விசாரணை செய்ய கேட்கப்போகிறோம். இந்த மாநக ராட்சியில் குப்பைக் கிடங்கில் மட்டுமல்லாமல் மேலும் பல திட்டங்களில் ஊழல் நடந் துள்ளது''”என்றார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரோ, "குப்பை தரம் பிரிப்பதில் முறைகேடு நடந்துள்ளது. ஆதாய நோக்கத்தில் அரசு பணத்தை போலி பில்கள் தயாரித்து எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. முதல்கட்டமாக அதிகாரிகள், ஒப்பந்தக்காரர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். அனை வருக்கும் சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்போம். வேறு யாரெல்லாம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்ததும் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுப்போம்''’என்றனர்.

"மேயர் சன்.ராமநாதன் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு குறிவைத்துள்ளார். இந்த முறை கேட்டில் மேயர் பெயரை சேர்க்கவேண்டும் என்று மறைமுகமாக தி.மு.க.வினரே பா.ஜ.க. வினரிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த முறைகேடு குறித்து அமலாக்கத்துறைக்கு புகாரனுப்பும் ஆலோசனையை தி.மு.க.வினரே பா.ஜ.க.வினருக்கு கொடுத்துள்ளனர்' என்கின்ற னர் விவரமறிந்தவர்கள்.