காவல்துறை வரலாற்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொய்யான தகவலை தாக்கல் செய்தார்கள் என ஓய்வுபெற்ற சென்னை போலீஸ் கமிஷனரான முத்துக்கருப்பனுக்கு திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஒருவருக்கும்தான் இதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை கொடுத்தது. இரண்டாவது முறையாக உயர்நீதிமன்றத்தில் பொய் தகவல் கூறியதாக தண்டனை பெற்றவரென, ஐ.ஜி. அந்தஸ்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக இருந்த செந்தாமரைக் கண்ணன் அவப்பெயர் சேர்த்துள்ளார்.
குரூப் ஒன் தேர்வு எழுதி டி.எஸ்.பி.யாக இவர் பதவி ஏற்றபோதே சுப்ரீம் கோர்ட் இவரை கண்டித்துள்ளது. 1989-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணிக்கு சேர்ந்தார். காவல்கிணறு என்கிற கிராமத்தில் ஏற்பட்ட ஒரு தகராறில் இரண்டு தரப்பினர் புகார் தெரிவித்தனர். அதில் ஒரு தரப்புக்காக காவலர் படையுடன் உள்ளே புகுந்த செந்தாமரைக் கண்ணன் அந்த கிராமத்தில் உள்ள ஏழை மக்களை பந்தாடினார். அதற்காக சுப்ரீம் கோர்ட் செந்தாமரைக் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தமிழக அரசு இவரை சஸ்பெண்ட் செய்தது. இதுதான் இவரது முதல் ரெகார்டு என்கிறார்கள் காவல்துறையினர்.
இவருக்கு பெயர் வாங்கித் தந்த சந்தன வீரப்பன் வேட்டை (உண்மையில் அது வேட்டையே அல்ல) யிலும் நொங்கு பறித்தவன் ஒருத்தன் அதை நோண்டித் தின்றவன் இன்னொருத்தன் என்கிற வகையில் பெயர் வாங்கினார். அப்போது அதிரடிப்படைத் தலைவர் நட்ராஜ்தான் தனது நெருங்கிய உறவினர்கள் மூலமும் போலீஸ் உளவாளிகள் மூலமும் வீரப்பனை நெருங்கினார். இந்தத் தகவல் கசியாதபடி, வேறு இடங்களில் வீரப்பனை தேடுவது மாதிரி நாடகம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.
இதை நட்ராஜுக்கு கீழே வேலைசெய்த செந்தாமரைக் கண்ணன் தெரிந்துகொண்டார். உடனே அப்பொழுது சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமாரிடம் சொன்னார். புகழ் விரும்பியான விஜயகுமாருக்கு ஜெ.விடம் செல்வாக்கு இருந்தது. அவர் ஜெ.விடம் போய் வீரப்பன் எங்கிருக்கிறான் என கண்டுபிடித்து விட்டேன் எனச் சொன்னார். உடனே ஜெ., விஜயகுமாரை அதிரடிப்படை தலைவராகவும் நட்ராஜை சென்னை நகர கமிஷனராகவும் மாற்றினார். நட்ராஜ் போட்டுக் கொடுத்த பாதையில் போய் கொல்லைப்புறமாக வீரப்பன் கதையை முடிக்க முடிந்தது. (வீரப்பன் வேட்டையில் இப்பவும் ஏகப்பட்ட சந்தேகம் இருக்கிறது) அதிரடிப்படை டீமில் இருந்த செந்தாமரைக் கண்ணனுக்கு பதவி உயர்வு கிடைத்தது.
இவர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது இவரை எதிர்த்து திருவண்ணாமலை போலீசார் ஒட்டுமொத்தமாக போராடினார்கள். பெண் போலீசாரிடம் ஆபாசமாக வரம்பு மீறி நடந்துகொள்கிறார் என்பதுதான் இவர்மீது அப்போது போலீசார் வைத்த குற்றச்சாட்டு. அதனால், சீருடைப் பணியாளர் பிரிவுக்கு மாற்றப்பட்டதை நினைவுகூர்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சீருடைப் பணியாளர் தேர்வாணைய விவகாரத்தில் செந்தாமரைக் கண்ணனுடன் இணைந்து அங்கு மேனேஜராக இருக்கும் லலிதா என்பவர் பேசப்படுகிறார். லலிதாவுக்கு சென்னை நகரில் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நன்கு பழக்கம். அவர், செந்தாமரைக் கண்ணன் வழியாக சீருடை தேர்வாணையம் நடத்தும் வினாத்தாள்களை அந்த நிறுவனங்களுக்கு முன்கூட்டியே அனுப்பி வைப்பார் என்கிறார்கள் தேர்வாணையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகரப் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார் என்பவரும் வாக்குமூலமாகத் தந்துள்ளார்.
""உயர்நீதிமன்றத்தில் செந்தாமரைக் கண்ணன் சொன்னது போல நான் சென்னை ஐ.ஐ.டி.யில் கணித பேராசிரியராக பணிபுரியவில்லை. ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். என்னை சீருடைப் பணியாளர் வாரியத்தின் ஆலோசகராக லலிதாவின் சிபாரிசில் செந்தாமரைக் கண்ணன் நியமித்தார். சீருடைப் பணியாளர் தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தேன். அதில் கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வும் அடங்கும். அதில் ஒரு கேள்விக்கு அருணாச்சலம் என்கிற காவலர் சரியாக எழுதிய விடையை தவறு என நான் மதிப்பிட்டேன். அது சம்பந்தமான வழக்கிலிருந்து தப்பிக்க, ஐ.ஐ.டி.யில் மூர்த்தி என்கிற பேராசிரியர் வேலை செய்வதாகவும் அவர் சொன்னபடி இப்படி செய்ததாகவும் செந்தாமரைக் கண்ணன் ஒரு அபிடவிட் தாக்கல் செய்யச் சொன்னார். அதைப்பார்த்த அருணாச்சலம் "ஐ.ஐ.டி.யில் அப்படி யாரும் இல்லை. கோர்ட்டில் சொன்னது பொய்' எனப் பதிவு செய்தார். இத்தனை விவகாரங்களும் செந்தாமரைக் கண்ணனுக்கு தெரிந்தே நடந்தது'' என ஜி.வி.குமார் சொல்கிறார்.
இந்த வழக்கில் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் என்ற வகையில் அதன் டி.ஜி.பி.யான திரிபாதியை நீதிமன்றம் குற்றவாளியாக்க முயற்சிக்கிறது. ஆனால், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தை நிர்வகிப்பது ஐ.ஜி. அந்தஸ்திலான செந்தாமரைக் கண்ணன்தான். அவர் அனுப்பிய அபிடவிட்டில் நான் கையெழுத்து மட்டும் போட்டேன் என திரிபாதி கோர்ட்டில் போட்டுடைத்தார். இதையடுத்தே, செந்தாமரைக் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்கிறார்கள் போலீசார்.
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ஸ்டாலின்