சேலம் மாநகராட்சியில், ஸ்கில்டு அசிஸ்டன்ட் பணி நியமனத்தில் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடந்துள்ள தாக புகார்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன.
இதுதொடர்பாக ஆர்.டி.ஐ. ஆர்வலரும், சேலம் தாதகாப்பட்டி கிளை பா.ஜ.க. முன்னாள் தலைவருமான சிவராமன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.
"சேலம் மாநகராட்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதியில், வாரிசுரிமை அடிப்படையில் 248 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 40 பேரின் வாரிசுச் சான்றிதழ்கள் போலியானவை. இதுதொடர்பாக பலமுறை ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் தகவல் கேட்டும் இன்றுவரை தகவல் தர மறுக்கிறது சேலம் மாநகராட்சி.
இந்நிலையில், தற் போது ஸ்கில்டு அசிஸ்டன்ட் கிரேடு-2 பதவிக்கான நேர்காணல் நடத்திமுடிக்கப் பட்டுள்ளது. இந்த நேர்காணலே முற்றிலும் கண்துடைப்பாக நடத்தப்பட்டதுதான். இந்த 6 காலிப் பணியிடத்திற்கும் கடந்த பிப்ரவரி மாதமே ஆட்கள் தேர்வுசெய்யப்பட்டு விட்டனர். ஆளுங் கட்சியினரின் அழுத்தம் காரணமாக மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், கண்துடைப்பாக நேர்காணலை நடத்திமுடித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் மேயரின் உதவியாளராக பணியாற்றி வரும் அனந்தசயனத்தின் மகன் ஹரீஷ், சூரமங்கலம் உதவி ஆணையர் (பொறுப்பு) செல்வராஜின் மகன் கனீஷ்ஹரன், முன்னாள் செயற்பொறியாளர் லலிதாவின் மகன் பிரவீன், அஸ்தம்பட்டி மண்டலத்தில் "பில்' கலெக்டராக பணியாற்றி வரும் குப்புசாமியின் மகன் தமிழரசன், முன்னாள் அலுவலக கண்காணிப்பாளர் மனோகரன் மகன் தர்ஷன், உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வன் மகன் சூர்யா ஆகியோருக்கு பணி நியமன ஆணைகள் காத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் தவிர, உதவிப் பொறியாளர் பாஸ்கரின் மகன் விக்னேஷ், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் பழக்கடை கணேசனின் உறவினரும், வருவாய் ஆய்வாளரு மான முரளிதரனின் அக் காள் மகள், அவருடைய நண்பர் "ரேஷன் கடை' சக்தி என்பவரின் மகன் ஆகியோரின் பெயர் களும் அடிபடுகின்றன.
இந்த 9 பேரில் இருந்து ஆறு பேருக்கு ஸ்கில்டு அசிஸ்டன்ட் கிரேடு -2 பணி நியமனம் கெட்டி என்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு வரிடமிருந்தும் தலா 40 லட்சம் ரூபாய் வீதம் 6 பணியிடங்களுக்கு மொத்தம் 2.40 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு ஆரம்பத்தில் 25 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. போட்டி அதிகமாக இருந்ததால், தற்போது 40 லட்சம் ரூபாயாக உயர்த்திவிட்டனர்''’என்கிறார் ஆர்.டி.ஐ. ஆர்வலர் சிவராமன்.
இதுதொடர்பாக மாநகராட்சி அனைத்துப் பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், "சென்னை நீங்கலாக மற்ற 20 மாநகராட்சிகளில் பணியமைப்பு, ஏற்கனவே உள்ள பணியிடங்களை சீரமைத்தல் தொடர்பாக கடந்த 20.10.2022-ல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஓர் அரசாணை (எண். 152) வெளியிட்டது. அதன்படி, காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிதாக ஆட்களை நியமனம் செய்யாமல், மற்ற மாநகராட்சிகளில் உபரியாக இருக்கும் ஆட்களை பணிநிரவல் செய்துகொள்ள வேண்டும்.
மேலும், புதிய அரசாணையில், ஸ்கில்டு அசிஸ்டன்ட் என்ற பணியிடம் பற்றி எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. ஆகையால், அரசாணை எண்.152க்கு எதிராக நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால், பணி நியமன நடவடிக்கையே செல்லாதென அரசு அறிவிக்கவேண்டும்.
இந்த நேர்காணலில் இன்னொரு உள்குத்தும் நடந்திருக்கிறது. ஸ்கில்டு அசிஸ்டண்ட் பதவிக்கு, டிப்ளமோ படிப்புதான் குறைந்தபட்ச, கல்வித்தகுதியாக நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்தப் பணியிடத்திற்காக ஏற்கனவே தெரிவுசெய்து வைக்கப்பட்டுள்ள 6 பேரும் பி.இ. படித்தவர்கள். அவர்களுக்கு இரண் டே ஆண்டுகளில் உதவிப் பொறியாளர் புரமோஷன் கிடைத்து விடும் என்று ஆசை காட்டியே வசூல் பேரத்தை அதிகப் படுத்தியுள்ளனர்'' என்கிறார்கள்
இதுதொடர்பாக விளக்கம் பெற, உள்ளாட்சிகள் நிர் வாக ஆணையர் பொன்னையாவின் செல்போன் எண் ணுக்கு பலமுறை தொடர்புகொண்டோம். அவர் எடுக்கவில்லை.
சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், நிர்வாகப் பயிற்சிக்காக அரசு சார்பில் இஸ்ரேல் நாட்டிற்குச் சென்று விட்டதாகச் சொல்லப்பட்டது. அவர் சார்பில் பேசிய மாநகரப் பொறியாளர் ரவி, "ஸ்கில்டு அசிஸ்டன்ட் பணிக்கான நேர்காணல், பணி நியமனம் தொடர்பாக கமிஷனர் வந்தபிறகு அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது'' என்று ஜகா வாங்கினார்.
மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "ஸ்கில்டு அசிஸ்டன்ட் பணி நியமனம் தொடர் பாக செல்போனில் சொல்லமுடியாது. நேரில் வாருங்கள். விளக்கமாகச் சொல்கிறேன்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.