ரசு வெளியிடும் கரன்சிக்கு இணையான தரத்துடன் கள்ளநோட்டு அச்சிடும் நெட்வொர்க், பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.

Advertisment

கடந்த சில மாதங்களாக நெல்லை மாவட்டத்தின் உளவுப்பிரிவு, பணமதிப்பிழப்புக்குப் பின்னர் அறிமுகமான கரன்சிகளின் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான புலனாய்வில் இறங்கி, கடையநல்லூரில் உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்த அசன் என்பவனை ஷேடோ செய்தது.

Advertisment

currencynotes

மேலும் தகவல்திரட்டிய போலீசுக்கு ஜூன் 25ஆம் தேதி கள்ளநோட்டு கைமாறும் தகவலும் கிடைத்தது. அந்தத் தகவல்படி, சங்கரன்கோவிலில் உள்ள லாட்ஜ் ஒன்றிற்கு பையோடு வந்த இருவர், அங்கிருந்தவரிடம் கொடுக்கும்போது, தனிப்படை சுற்றிவளைத்து கையும்களவுமாக பிடித்ததோடு, ஒரு ஆம்னியையும் கைப்பற்றியது.

கைமாற்றப்பட்ட பையில் 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய்க்கான கள்ளநோட்டுகள் இருந்துள்ளன. காவல்துறையினரிடம் சிக்கிய கொலைவழக்கில் சஸ்பெண்டாகியிருக்கும் ஆலங்குளம் நகர் காவல்நிலைய சிறப்பு எஸ்.ஐ. சண்முகம், ஏஜெண்ட் மகாலிங்கம் மற்றும் கள்ளநோட்டைக் கைமாற்றும் சங்கர்கணேஷ் ஆகியோர், "நாங்கள் வெறும் அம்புகள்தான். ஷெரீப் மற்றும் அசனிடம்தான் விஷயமிருக்கிறது' என வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.

Advertisment

அவர்கள் விரித்த வலையில் ஷெரீப் சிக்க, அசன் மட்டும் எஸ்கேப் ஆகியிருக்கிறான். ஷெரீப்பிடம் இருந்து 20 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், அதை அச்சடிப்பதற்கான பிரிண்டர்கள் மற்றும் கட்டிங் மெஷின் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

“அசல் நோட்டுகளை ஸ்கேன் செய்து பத்து கள்ளநோட்டுகள் தயாரிக்கின்றனர். அச்சான பத்து நோட்டுகளில் அசலுக்கு மூன்று வீதம் லட்சக்கணக்கான நோட்டுகளை ஏஜெண்டுகளின் மூலம் புழக்கத்தில் விடுகிறார்கள். இந்த எக்ஸேஞ்சின்போது சந்தேகம் வராமலிருக்க, தனிநபர் அல்லது வியாபாரம் குறைந்த இடம் என்று செல்லாமல், எப்போதும் பரபரப்பாக இருக்கும் டாஸ்மாக் கடைகளையே குறிவைக்கிறார்கள். கள்ளநோட்டுகளை சோதனை செய்யும் அரசு மெஷின்கள் பல டாஸ்மாக்குகளில் செயல்படாதது இவர்களுக்கு வாய்ப்பாகி விடுகிறது. இதில் கவனிக்கவேண்டிய விஷயமே கள்ளநோட்டுக்காக அவர்கள் பயன்படுத்தும் பேப்பர்தான். அவை சாதாரண மார்க்கெட்டுகளில் கிடைப்பவை அல்ல. ரொம்பவும் தரம்வாய்ந்த, கரன்சி அடிக்க பயன்படும் இந்தவகை பேப்பர் அசனுக்கு எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. கேரளாவில் தலைமறைவாகியிருக்கும் அவனைப் பிடித்தால் பல உண்மைகள் வெளிவரலாம்’’ என அதிரவைக்கும் தகவலைத் தருகிறது தனிப்படை.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கேரளாவின் கருநாகப்பள்ளியில் ஐ.எஸ். அமைப்பினால் கள்ளநோட்டு புழக்கத்தில் விடப்பட்டதை, மத்திய உளவுப்பிரிவான ஐ.பி. டீம் தீவிரம்காட்டி முறியடித்தது. அதில் முக்கியமாக பேசப்பட்டதே கள்ளநோட்டுக்காக பயன்படுத்திய பேப்பர்தான். அதே சந்தேகம் இப்போது அசன் மீதும் எழுந்து இந்த விவகாரத்தை பல்வேறு கோணத்தில் யோசிக்கவைத்திருக்கிறது. அசன் சிக்கும்போது மட்டுமே உண்மையும் பிடிபடும்.

-பரமசிவன்

படம்: ராம்குமார்