கடலுக்குச் செல்லவேண்டிய மீனவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ரோட்டுக்கு வந்து போராடுகின்றனர்... ஏன்?
இதுவரை நிலப்பரப்பில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்தியத் துறைமுகங்களில் ஆதிக்கம் செலுத்துவது, மீன்பிடித் தொழிலை கட்டுக்குள் கொண்டு வருவது என்ற மறைமுகச் செயல்திட்டங்களில் இறங்கியுள்ளனர். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை கடல் என்பது மீன்வளத்தைத் தாண்டி, பெட்ரோலிய உற்பத்தி மையமாகவும், ஹைட்ரோ கார்பன், கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகவும் பார்க்கப்படுகின்றது. எனவே அவர்களின் தொழிலை கடலுக்குள்ளும் விரிவுசெய்யும் நோக்கில், மீன்பிடித் தொழிலில் இருக்கும் மீனவர்களை அப்புறப்படுத்தப் பார்க்கிறார்கள்.
கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக கடல்சார் மீன்வள மசோதா இருப்பதாகக் கூறி, இந்த மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்று ஒன்றிய அரசின் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வைகோ, வேல்முரு கன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசால் கொண்டு வரப்படும் மீன்பிடித் தொழில் குறித்த மசோதாக்கள் அனைத்துக்கும் எதிர்ப்புகள் எழுவது ஏன் என்றும், தற்போது கொண்டுவரப் படும் மசோதாவிலுள்ள மீனவர் விரோத ஷரத்து கள் என்னவென்றும் அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.மகேஷிடம் கேட்டபோது, "ஏற்கனவே 1991-ம் ஆண்டில் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (Coastal Regulation Zone CRZ) என்ற பெயரில் அப்போதைய ஒன்றிய அரசு மசோதாவைக் கொண்டுவந்தது. அதிலிருந்த ஷரத்துகளில் பெரும்பாலானவை மீனவர்களின் தொழில் பாதுகாப்புக்கு ஏற்றதுபோல் இருந்தன. ஆனால் அவற்றை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அடுத்ததாக 2009-ம் ஆண்டில் கடலோர மேலாண்மை மண்டலம் (Coastal Management Zone (CMZ) என்றொரு சட்ட மசோதாவைக் கொண்டுவந்தார்கள். இதில் மீனவர் களுக்கு விரோதமான ஷரத்துகள் பெருமளவில் இருந்தன.
குறிப்பாக, மீனவர்கள் மீன் பிடிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளும், அதை மீறுவோருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதற்கான விதிமுறைகள் நிறைய இருந்தன. மீனவர்கள், 12 நாட்டிங் கல் மைல் எல்லைக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும். மீனவர்களைக் கண்காணிக்க கடல் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருந்தன. காலங்காலமாக மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் எங்களுடைய வாழ்வாதாரத்துக்கு எல்லை வகுக்கும் இந்த சட்ட மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இதுகுறித்து கருத்துக்கேட்பு நடத்திய மத்திய நிலைக்குழு அமைப்பிடம் எங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தோம். இந்த சட்ட மசோதா, ஒட்டுமொத்த இந்திய மீனவர் களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந் தாலும், தமிழக மீனவர்களின் கடுமையான போராட்டத்தின் காரணமாகத்தான் கைவிடப் பட்டது.
அந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ஏற்கனவே 1991-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலம் சட்ட மசோதாவின் ஷரத்துக்களைக் கொண்டுவாருங்கள் என்ற கோரிக்கையையும் நாங்கள் வைத்திருந்தோம். உடனே இதற்கடுத்த தாக, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (2011) என்ற ஒரு சட்ட மசோதாவைக் கொண்டுவந்தார் கள். இதன் ஷரத்துகள் பெரும்பாலும், 2009-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கடலோர மேலாண்மை மண்டல மசோதாவிலிருந்த, மீனவர் நலனுக்குப் புறம்பானவையாகவே இருந்தன. இது ஏமாற்று வேலைகளில் ஒன்று. எனவே இதற்கும் எங்கள் எதிர்ப்புக்களைப் பதிவுசெய்தோம்.
இப்படியாக, ஒன்றிய அரசின் மீனவர் விரோத மசோதாக்களைத் தொடர்ந்து மீனவர்கள் எதிர்ப்பதைப் புரிந்துகொண்டவர்கள், நாடாளுமன் றத்தில் விவாதம் நடத்தி சட்டமாக்கி அவற்றைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, அதிலிருக்கும் சில ஷரத்துக்களை, நேரடியாகவே நடைமுறைக்குக் கொண்டுவரத் தொடங்கினார்கள். அதன்படி, தற்போது கடல் காவல் நிலை யங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. அதன்மூலம் மீனவர் களைக் கண்காணிக்கத் தொடங்கிவிட் டார்கள். விசைப்படகுகளுக்கு டோக் கன், லாக்ஷீட் பராமரிப்பது போன்ற ஷரத்துக்களையும் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். இந்த லாக்ஷீட் மூலமாக, மீனவர்கள் பிடிக்கும் மீன்களின் வகை, அளவு உள் ளிட்ட அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போது கொண்டுவரவுள்ள கடல்மீன் வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) மசோதாவில் இதேபோல மேலும் பல்வேறு கடுமையான ஷரத்துகள் உள்ளன. இதிலிருக்கும் ஒரேயொரு நல்ல விதிமுறை, "இந்தியக் கடற்பரப்புக்குள் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மீன் பிடிக்க அனுமதியில்லை' என்ப தாகும். உள்நாட்டின் பெருமுதலாளிகளின் மீன்பிடிக் கப்பல்கள் மீன்பிடிப்பதற்கு எவ்விதத் தடையும் கிடையாது. அதேபோல, இயந்திர மோட்டார் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளில், பாரம்பரிய மீன்பிடிப்படகுகளுக்கு இம்மசோதாவிலுள்ள கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை என்றொரு ஷரத்தை வைத்திருக்கிறார்கள். இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது நல்ல விஷயம்தானே என்று தோன்றக்கூடும். ஆனால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள, மோட்டார் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளின் எண்ணிக்கை வெறும் அரை சதவீத (0.5%) அளவுகூட கிடையாது. ஆக, இதன்மூலம், விசைப்படகுகள், ஃபைபர் படகுகள், நாட்டுப்படகுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அனைவரையும், மீன்பிடிக் கப்பல்களுக்கிணையாகக் கொண்டுவந்து, அவற்றுக்கான சட்டதிட்டங்களுக்குள் பாரம்பரிய மீனவர்களையும் அடக்குகிறார்கள்.
இந்த மசோதாவில், மீன்பிடி கப்பல்களுக்குக் கட்டணம் விதிப்பது போல் மீனவர்களின் படகுகளுக்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது. மீனவர் கள் மீன் பிடிப்பதற்கு கட்டணம் விதிப்பதே மீனவர்களின் அடிப்படை உரிமையின்மீது கை வைப்பதாகும். மீன்பிடிப் படகுகளின் அடிப் படையில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதில் இருவேறு முறைகள் இருக்கின்றன. விசைப்படகுகளில் மீன் பிடிப்பவர்கள், பல நாட்கள் நடுக்கடலில் தங்கி மீன்பிடித்து வரு வார்கள். ஆனால் நாட்டுப்படகு களைப் பொறுத்தவரை, தேவையின் பொருட்டும், மீன்கள் தென்படு வதைப் பொறுத்தும் அவ்வப்போது உடனுக்குடன் கடலுக்குள் சென்று மீனைப் பிடித்துவிட்டு கரையேறு வார்கள்.
தற்போது கொண்டுவரப்படும் சட்டத்தின்படி இப்படி நினைத்த மாத்திரத்தில் கடலுக்குள் செல்ல முடியாது. கடலுக்குள் செல்ல டோக்கன் போட்டு அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டும். அவர்கள் அனுமதிக்கும்போதுதான் கடலுக்குள் நுழைய முடியும்.
நம்முடைய மீன்பிடிக் கடல்பரப்பு 200 நாட்டிங்கல் மைல் தொலைவுவரை இருக்கிறது. ஆனால் 12 நாட்டிங்கல் மைல் என்ற கடல் எல்லைக்குள்தான் நாங் கள் மீன் பிடித்தாக வேண்டும். அதைத் தாண்டி மீன் பிடிப்ப தாக இருந்தால் அதற்கென தனிப்பட்ட அனுமதி யைப் பெற வேண்டும். அந்த அனுமதிக்கான கட்டணம், சிறிய அளவில் மீன்களைப் பிடிக்கச் செல்பவர்களுக்கு கட்டுபடியாகாத தொகையாக உள்ளது. அடுத்து, கல்ச்சுரல் ஃபிஷ் என்ற பெயரில் கூண்டுக்குள் மீன் வளர்த்து அந்த மீன்களை விற்பனை செய்ய மீனவர்களை நிர்ப்பந்திக்கிறார்கள். இதன்மூலம் மீன் பிடித்தல் என்ற செயல்பாடே முடக்கப்படுவதோடு, பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் மீன் வளர்ப்பில் இறங்கக்கூடிய சூழலை உருவாக்குகிறார்கள்.
இன்னொரு கொடுமை என்னவென்றால், மீனவர்களின் படகுக்கான டீசலில், சாலை வரி என்றொரு வரியைப் பிடித்தம் செய்கிறார்கள். கடலுக்குள் எதற்கு சாலை வரி? எனவேதான் மீனவர்களையும் உள்ளடக்கிய ஒரு கமிட்டி உருவாக்கி அதன்மூலம், மீனவர்களுக்கு நெருக்கடி தராத வகையில், மீனவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்காத வகையி லான ஷரத்துக்களுடன்கூடிய சட்ட மசோதாவை உருவாக்க வேண்டு மென்கிறோம்'' என்றார்.
மக்களுக்கான ஓர் அரசாங்கம், தன் நாட்டு பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு சுதந்திரமான கடற்பரப்பை உறுதி செய்யவேண்டும். இதை விடுத்து, பாரம்பரிய மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், கட்டணங்கள், அபராதங்கள் என விதித்து, அவர்களை மீன்பிடி தொழிலிலிருந்தே விரட்டியடிக்க முயல்வது சரியான செயலல்ல. ஏற்கனவே இலங்கை கடற்படையாலும், புயல், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் மீனவர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்த, அவர் களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு பரிசீலித்து நல்லதொரு தீர்வைக்காண முன்வர வேண்டும்.