கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டது, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல வேண்டுமா?, இரயில் டிக்கட் புக் செய்ய வேண்டுமா?, ஊரடங்கில் அவசரமாக வெளியூர் செல்கிறீர்களா?, அரசுத் துறை தேர்வுகள் எழுதுபவர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும் என்கின்றன மத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகள்.
கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றில் பயணம் செய்யவும் கொரோனா சான்றிதழ் கேட்கிறார்கள். தற்போது இந்த கொரோனா சான்றிதழால் சிக்கலை எதிர்க்கொள்ளத் தொடங்கியுள்ளனர் மக்கள்.
இந்திய ஒன்றிய அரசு, கோவின் (cowin) என்கிற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் தான் ஒவ்வொரு மாநில அரசின் சுகாதாரத்துறை யும் தாங்கள் தினந் தோறும் யார் யாருக்கு தடுப் பூசி செலுத்தி யுள்ளோம் என்கிற தகவலை பதிவேற்று கின்றன. இந்தியாவில் 88 கோடி சொச்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி 63 கோடி சொச்சம் பேர் செலுத்திக்கொண்டார்கள் என்கிறது. தமிழ்நாட்டில் முதல் டோஸ் 5.27 கோடி பேருக்கும், இரண்டாம் டோஸ் 3.58 கோடி பேருக்கும் போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபரும் தடுப்பூசி செலுத்திக்கொள் ளும்போது சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண், மொபைல் எண் போன்றவற்றை வாங்கி பதிவு செய்கின்றனர் சுகாதாரத்துறையினர். இப்படி பதிவு செய்ததும் ஊசி போட்டுக்கொண்டவரின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வழியாக தகவல் வரும். அதிலேயே இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதி குறித்த தகவல் வரும். தமிழ்நாட்டில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 70 சதவீதம் பேருக்கு மட்டுமே எஸ்.எம்.எஸ். சென்றுள்ளது, மீதி 30 சதவிதம் பேருக்கு செல்லவில்லை. இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்டதற்கான குறுந்தகவல் 40 சதவிதம் பேருக்கு வரவில்லை என்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென் னாத்தூரை சேர்ந்த வீடியோகிராபர் சொக்காநாதன் நம்மிடம், "சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் பணிக்காக வீடியோ எடுத்தேன். அப்போது கலெக் டர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டார்கள், நான் போட்டுக்கொண்டேன். இரண்டாவது டோஸ் அதன்பிறகு போட்டுக்கொண்டேன். முதல் றை போட்டதுக்கான சான்றிதழே கடந்த மாதம் தான் வந்தது. அதில் இப்போது ஊசி போட்டது போல் பதிவாகியுள்ளது. இன்னும் இரண்டாவது டோசுக்கான சான்றிதழ் வரவில்லை. ஆனால் இப் போது எங்கே சென்றாலும் தடுப்பூசி சான்றிதழ் கேட் கிறார்கள். அது இல்லாமல் ஒவ்வொரு இடத்திலும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது'' என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 டிசம்பர் வரை இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ்.சும் வரவில்லை, சான்றிதழும் கிடைக்கவில்லை. இதனால் விமானம், இரயிலில் டிக்கட் பதிவு செய்ய முடியாமல் தவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை உயர் அதிகாரியிடம், பலரும் புகார் சொல்லி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகள் மூலமாக தற்போது முதற்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்ககளின் மொபைல் எண்ணை எடுத்து ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு "இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? எங்கே போட்டீர்கள்?, எப்போது போட்டீர்கள்?' என கேட்டு உறுதி செய்துகொண்டு பதிவு செய்கிறார்கள்.
இதுபற்றி தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றபோது, "கோவின் இணையதளத் தில் பதிவிடுவதை சென்ட்ரல் கவர்மெண்ட்டின் டெக்னிக்கல் டீம்தான் செய்கிறது. இதுகுறித்து 6 மாதங்களுக்கு முன்பே அவர்களிடம் பேசினேன். அவர்கள் சரி செய்துகொண்டு வருவதாக கூறினார் கள். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க ஒரு மொபைல் எண்ணை அறிவித்துள்ளார்கள். மக்கள் அதை பயன்படுத்தி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார். டெக்னிக்கல் டீமில் இருப்பவர்களோ, "ஆன்லைனில் பதிவு செய்யும்போது மருந்து குப்பி எண், நர்ஸ் பெயர், எங்கே ஊசி போட்டார் என்கிற தகவல்களோடு, சம்பந்தப்பட்டவரின் மொபைல் எண், ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவேண்டும். ஆயிரக்கணக்கானவர்களுக்கு மொபைல் எண்ணை மாற்றி பதிவு செய்ததால் சான்றிதழ் செல்லவில்லை. சான்றிதழ் கிடைக்காதவர்கள் நேரடியாக எங்கே ஊசி போட்டார்களோ அங்கே சென்று திருத்தவோ அல்லது பதிவு செய்யவோ வேண்டும்'' என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள், பள்ளிகளில் நடைபெற்றன. இப்போது அந்த முகாம் நடைபெறவில்லை. "ஊசி போட்டயிடத்தில் போய் கேளு என்றால், யாரிடம் கேட்பது?' என கேட்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் ஓரய் கிராமத்தைச் சேர்ந்த 84 வயது பிரம்மதேவ் மண்டல் என்பவர், தனது ஆதார் கார்டு மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். 12-வது முறை ஊசி போடும்போது சிக்கியுள்ளார். 8 முறை தனது மொபைல் எண், ஆதார் எண்ணையே தந்து ஊசி போட்டுள்ளார். பதிவு செய்யும்போது எப்படி கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது பெரும் கேள்வியாக எழுந்து விசாரணை நடைபெற்று வருகிறது.