ஹலோ தலைவரே,
எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கொரோனா, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனையும் பாதிச்சிருக்குன்னு அதிகாரப்பூர்வமாக அறிவிச்சிருப்பதை கவனிச்சீங்களா?''
""தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் 10 நாட்களுக்கு முன்பே, கொரோனா தொற்றுக்கு ஆளான அமைச்சர் நலம்பெறனும்னு வாழ்த்திய போது, அமைச்சருக்கு கொரோனா இல்லைன்னு முதல்வர் எடப்பாடி திரும்பத் திரும்ப மறுத்தாரே?''
""ஆமாங்க தலைவரே, அமைச்சருக்கான தொற்றில் தொடங்கி கொரோனா விசயத்தில் பல தகவல்களை தமிழக அரசு மறைப்பது பற்றியும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பிரதமர் அலுவலகத்துக்கும் சுகாதார துறை அமைச்சகத்துக்கும் தெரியப்படுத்தியிருக்கார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் அன்பழகன் அட்மிட்டாகி இருக்கும் மியாட் மருத்துவமனைத் தொடர்புகொண்டு அவரது மெடிக்கல் ரிபோர்ட்டை வாங்கிய, மத்திய அரசு, இதை எதற்காக மறைக்கறீங்கன்னு கண்டிச்சிருக்கு. மத்திய அரசின் கண்டிப்புக்குப் பிறகுதான் உண்மை நிலவரம் வெளிவந்திருக்கு.''
""ஆளும்கட்சியையும் எதிர்கட்சியையும் ஒரே நேரத்தில் மிரளவைக்குதே கொரோனா?''
""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர்களோடு தொடர்பில் இருந்த கட்சி நிர்வாகிகள் மிரண்டுபோயிருக்காங்க. அதனால் பரிசோதனை, தனிமைப்படுத்திக்கிறதுன்னு அல்லாடறாங்க. இந்த தி.மு.க. எம்.எல்.ஏக்களில் சிலருடன் அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் சிலரும் நட்பில் இருந்திருக்காங்க. அதனால் ஆளுங்கட்சிப் புள்ளிகளும் மிரட்சியில் இருக்காங்க.''
""அப்போ ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்கும் எதிர்க்கட்சிப் பிரமுகர்களுக்கும் இடையில் ரகசிய உறவுகளும் இருக்குன்னு சொல்லு.''
""பல பகுதியிலும் நிலைமை அப்படித்தான் இருக்கு. ஒரு சம்பவத்தைச் சொல்றேன். கடலூர் மேற்கு மாவட்ட எல்லையில் இருக்கும் இரண்டு மணல் குவாரிகளில் ஒன்றை அமைச்சர் சம்பத் தரப்பும், இன்னொன்றை அ.தி.மு.க எம்.எல்.ஏ. சத்யா தரப்பும் நடத்துது. இதை அம்பலப்படுத்த வேண்டிய தி.மு.க. புள்ளிகளே இவங்களை கண்டுக்காம இருக்காங்கன்னு, தி.மு.க.வினரிடமிருந்தே அறிவாலயத்துக்கு ஒரு அதிரடிப் புகார்க் கடிதம் போயிக்கு.''
""ஏன் கண்டுக்கலையாம்?''
""ஆளுந்தரப்பிலிருந்து கண்டுகொள்வதால் இதை கண்டுக்கலைன்னு சொல்றாங்க. நெய்வேலி எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரனையும், அவர் சகோதரரான பண்ருட்டி யூனியன் சேர்மன் சபா பாலமுருகனையும் அமைச்சர் தரப்பு நெருங்கியிருப்பது சம்பந்தமா, கடலூர் மேற்கு தி.மு.க. மா.செ. கணேசனிடம் புகார் செய்தோம். ஆனா இப்ப அவரும் சைலண்ட்டாயிட்டாரு. அமைச்சர் தரப்பு அவர் வரைக்கும் வந்திடிச்சின்னு புகார்க் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்காம். தி.மு.கவுக்குள் நடக்கும் போட்டி அரசியலில் இப்படி பல புகார்கள் கிளம்புதுன்னு ஒருதரப்பும், தேர்தல் வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்ங்கிறதால அ.தி.மு.க. அமைச்சர்கள் தரப்பு இப்பவே தி.மு.க தரப்பிடம் நெருக்கம் காட்டுதுன்னு இன்னொரு தரப்பும் சொல்லுது.''
""ஐ.பி.எஸ். அதிகாரிகள் மெஹா டிரான்ஸ்பர் அதிரடியா நடந்திருக்கே?''
""ஆமாங்க தலைவரே, 30-ந் தேதி அதிரடியா 39 ஐ.பி.எஸ். அதிகாரிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் போடப்பட்டிருக்கு. அதற்கு முன்னாடி நடந்த ஒரு மாற்றத்தின் பின்னணி பற்றி சொல்றேன். எடப்பாடிக்கு நெருக்கமான உளவுப்பிரிவு டி.ஜி.பி. ஜாபர்சேட், சென்னை கமிஷனரா நியமிக்கப் படுவார்னு செய்தி பரவிக்கிட்டிருந்த நிலையில், பவர் இல்லாத சிவில் சப்ளைத் துறைக்கு சில வாரங்களுக்கு முனனாடி மாற்றப்பட்டாரு. என்ன காரணம்னு விசாரிச்சேன். தி.மு.க. மாஜி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மீதான பல வழக்குகள் பைசல் ஆன நிலையில் அவரது கல்லூரி தொடர்பான வழக்கு ஒன்று மட்டும் நிலுவையில் இருந்திருக்கு. அதை வச்சி ஜெகத்துக்கு செக்வைக்க, எடப்பாடித் தரப்பு திட்டமிட்டிருந்த நேரத்தில், அந்த வழக்கும் முடிச்சி வைக்கப்பட்டிருக்கு.''
""எப்படி?''
""அதேதான், எடப்பாடிக்கும் டவுட்டு. இந்த நிலையில் மத்திய அமலாக்கத்துறை, ஜெகத்ரட்சக னுக்கும் ஜாபர்சேட்டுக்கும் இடையே நடந்த ஃபாரின் பரிவர்த்தனை ஒன்றைக் கண்டுபிடிச்சி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை அதைக் கொண்டு போயிருக்கு. டெல்லித் தரப்போ இதை எடப்பாடி கவனத்துக்குக் கொண்டு வந்து அவருக்கு பிரஷர் கொடுத்ததால்தான், எடப்பாடி, அவரை டிரான்ஸ்பரில் தூக்கியடிச்சாராம். நம்பிக்கை வைத்த ஒரு அதிகாரி இப்படி செயல்பட்டது எடப்பாடிக்கு பெரிய ஷாக். இப்பவும் குமுறிக்கிட்டு இருக்காராம்.''
""திருச்சி மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் மீது முதல்வர் எடப்பாடித் தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பது பற்றி நாம பேசிய நிலையில், அவர் மாற்றப்பட்டிருப்பது பற்றிய செய்தியை நான் சொல்றேன். திருச்சி மண்டல அ.தி.மு.க. பொறுப்பாளரா நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர் தங்கமணி, திருச்சிக்கு வரும் போதெல்லாம் தன் உறவினர் ஒருவர் பங்களாவில்தான் தங்குவாராம். அந்த பங்களாவின் உரிமையாளருக்கும் எடப்பாடியின் மகன் மிதுனுக்கும், பங்களா தொடர்பா உரசல் இருந்ததாம். இந்த நிலையில் மிதுனை ஓவர் டேக் செய்த அமல்ராஜ், அந்த பங்களாவை விற்பதற்குத் துணை நின்றாராம். இதுதான் எடப்பாடித் தரப்பை எரிச்சலாக்கியிருக்கு. அதன் விளைவாகத்தான் அமல்ராஜ், இப்போ 39 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் லிஸ்டில், சென்னை தலைமையிட ஐ.ஜி.யாக பவர்குறைந்த போஸ்டுக்கு வந்திருக்காராம்.''