கொரோனா தொற்று பாதிக்கபட்டவர் களைப்போல் வீட்டு காவலில் இருப்பவர்களும் மனதளவில் அதிகம் பாதிக்கபட்டவர் களாகியுள்ளனர். அதோடு வீட்டுக்குள்ளே வைத்து ஊரையும் சீல் வைத்தியிருப்பது வேதனையிலும் வேதனையாக உள்ளது என்கின்றனர் வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர்கள்.

தமிழகத்தில் கொரோனா அதிகம் தாக்க கூடும் மாவட்டம் என்று ஆரம்பத்தில் கருதபட்ட குமரி மாவட்டத்தில் இதுவரை 15 பேருக்குத்தான் கொரோனா பாசிட்டிவ் உள்ளது. அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த 15 பேர்கள் வசிக்கும் பகுதியை கடந்த 31-ம் தேதி சீல் வைத்தது மாவட்ட நிர்வாகம். இதனால் தேங்காய் பட்டணம் தோப்பு, வெள்ளாடிச்சி விளை, டென்னிசன் ரோடு, மணிகட்டி பொட்டல் ஆகிய ஊரை சேர்ந்த சுமார் 2500 குடும்பங்கள் மற்ற மக்களோடு தொடர்பை துண்டித்து தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

g

Advertisment

இது குறித்து நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி மா.செ. உவைஸ், ""சீல் வைக்கப்பட்ட அந்த 4 ஊர்களில் ஆரம்பத்தில் தலா ஓருத்தர்தான் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு அவர்களின் நெருங்கிய ரத்தபந்தங்கள் 11 பேருக்கு வைரஸ் உறுதிபடுத்தப் பட்டு அவர்களும் கொரோனா வார்டில் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தாக்கிய வெள்ளாடிச்சி விளையை சேர்ந்தவரின் மனைவி, மகன், தம்பி, பாட்டி என மொத்த குடும்பத்தை மருத்துவமனையில் அட்மிட் செய்து பரிசோதித்ததில் மகனுக்கும் தம்பிக்கும் நெகடிவ் வந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் வீட்டில் தனிமைபடுத்தப் பட்டுள்ளனர். அதேபோல் டென்னிசன் ரோட்டில் கணவருக்கு வைரஸ் பாசிட்டிவ் என்பதால் மனைவியை அட்மிட் செய்து பரிசோதித்ததில் அவருக்கு நெகட்டிவ் என தெரிய வந்ததும் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினார்கள். மணிகட்டி பொட்டலை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியானதும் உடனே குடும்பத்தில் உள்ள எல்லாரையும் செக் பண்ணியதில் மூன்று பேருக்கு நெகடிவ் என்பதால் அவர்கள் வீட்டில் தனிமை படுத்தபட்டுள்ளனர்.

f

இப்படி பரிசோதனைக்கு பிறகு வீட்டில் தனிமைப்படுத்தபட்டுள்ள இவர்களுடன் உறவினர்கள், நண்பர்கள் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்கள். மேலும் வீட்டில் சமையல் கூட எதுவும் செய்ய முடியாமல் உதவிக்கரம் நீட்டுபவர்களின் ஓரு வேளை சாப்பாட்டை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அரசு முதலில் கூறியதுபோல் இவர் களுக்காவது மூன்று வேளை உணவை கொடுத்திருக்க வேண்டும். அதையும் அரசு செய்யவில்லை. அதேபோல் சீல் வைக்கப்பட்ட ஊருக்குள் அத்தியாவசிய பொருட்கள் தேவையான நேரத்தில் கிடைக்கவில்லை.

Advertisment

அதேபோல் சீல் வைப்பதற்கு முன் அந்த மக்களுக்கு எந்த முன்னேற்பாடுகளும் செய்து கொடுக்காமல் வெளியே போனவர்கள் உள்ளே வருவதற்குள் அவசரகதியில் சீல் வைத்து விட்டனர். மேலும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மக்களில் தேவைப்படுவோருக்கு மனோதத்துவ மருத்துவர் மூலம் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்'' என்றார்.

சீல் வைக்கபட்ட பகுதியை சேர்ந்த அரசு பெண் ஊழியர் ஒருவர் நம்மை தொடர்பு கொண்டு கூறும் போது, ""தொடர்ந்து 15 நாளா சொந்த வீட்டுக்குள்ளே அகதிகளாக வாழுறோம். வீட்டுல மின் இணைப்பு கட்டாகி மூணு நாளு இருட்டு லேயே குடும்பத்தோடு இருந்தோம். அதை பழுது பாக்கிறவர போலீஸ்காரங்க உள்ளே விடல. அதேபோல அத்தியாவசிய பொருளுக்கு அரசு தந்திருக்கிற போன் நம்பர்ல கூப்பிட்டா ரெண்டு நாளு கழிச்சி வாராங்க. தேவையான பொருளு கிடைக்கவும் இல்ல வாங்கவும் முடியல. வயசுக்க வந்த பெண் பிள்ளைகளுக்கு மாதவிலக்கு காலத்தில் தேவைப்படும் நாப்கின் உள்பட எதையும் வாங்க முடியல. இதுனால பொம்பள பிள்ளைங்க ரெம்ப கஷ்டபடுறாங்க.

gbt

மாநகராட்சி ஊழியர்களும் மருத்துவ துறையை சேர்ந்தவர்களும் வந்து உங்களுக்கு காய்ச் சல் இருக்கா சளி இருக்கா? தும்மல் வருதானுதான் கேக்கிறாங்களே தவிர... சாப்பிட்டீங்களா... அத்தியாவசிய பொருள் கிடைக்குதானு கேட்கலை. வைரஸ் தாக்குனவங்கள விட அதிகமா கஷ்ட படுறோம். கொரோனாவைவிட இது கொடுமையா இருக்கு'' என ஆதங்கத்தை கொட்டினார்.

தேங்காய்பட்டணத்தை சேர்ந்த ஜிஸ்தி முகம்மது கூறும் போது...“""இந்த ஊர்ல மட்டுமே 1500 குடும்பங்கள லாக்டவுன் பண்ணி வச்சி யிருக்காங்க. இதுனால அந்த மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்காங்க. 18 வயசு பெண் பிள்ளைக்கு டயாலிஸிஸ் பண்ணனும். போலீஸ் காரங்க வெளிய விடமாட்டாங்கனு சொல்லி ஒண்ணரை மணி நேரம் அந்த பிள்ளையை காக்க வச்சி கடைசியில் பிள்ளைக்கு மூச்சு திணறல் வந்ததும் அழுது உழிச்ச பிறகு விட்டாங்க.

அதேபோல் ஓரு வீட்டுல கணவனுக்கும் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்குனு சொல்லி பரிசோதனைக்கு கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணுனாங்க. ஆனால் இதுவரை அவங்களுக்கு பாசிடிவ்னும் சொல்லல, நெகடிவ்னும் சொல்லல. அவங்களுக்கு இரண்டரை வயசு குழந்தை பக்கத்து வீட்டுல அம்மாவ பாக்காம தினமும் கதறுது. என்ன மருத்துவதுறையினு தெரியல.

gg

அதேபோல உளவுத்துறை போலீஸ்காரங் களுக்கு யாரை புடிக்கலியோ உடனே மருத்துவ துறையினருகிட்ட சொல்லி அவங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யணும்னு சொல்லி கூட்டிட்டு போய் தனிமைப்படுத்தி கஷ்ட படுத்துறாங்க. மேலும் இங்கிருந்து பரிசோதனை செய்யணும்னு சொல்லி 40 கிமீ தூரத்தில் இருக்கிற ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108ல கூட்டிட்டு போயிட்டு, அங்கே விட்டுட்டு போயிடு றாங்க. கடைசியில அவங்க வீட்டுக்கு வர்றதுக்கு படாத கஷ்டம் படுறாங்க. இத நான் கலெக்டர் கிட்ட புகாரா சொல்லியிருக்கேன்.

ஊரை லாக்டவுன் பண்ணி தேங்காய்பட்டணம் கொரோனா தொற்று பகுதி போல் அரசு சித்தரிப்பதால் இங்கு பால்காரங்க ட வாரங்க இல்ல. சுற்றுமுற்றும் கடை களை எல்லாம் அடைச்சிட்டு பறந்திட்டாங்க. இதுனால இருந்த ஒரே ஓரு தனியார் மருத்துவமனையும் அடைச்சே கிடக்குது. உள்ளே இருக்கிறவங்களுக்கு தலைவலி, கை கால் வலி வந்தா கூட ஆஸ்பத் திரிக்கு போக முடியல. அரசு நல்லதுக்கு வேண்டி இதையெல்லாம் செய்வதாக இருந்தாலும் அதை பெரிசு படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கிறது'' என்றார்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் கூறும் போது....“தனிமை படுத்தப் பட்டியிருக்கும் மணிகட்டி பொட்டலை தவிர மற்ற மூன்று ஊர்களிலும் முதலில் பாதிக்கபட்டவர்கள் தப்லீக் மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள். இதனால் அந்தப் பகுதிகளில் அதிக கவனம் எடுத்து வருகிறோம். தினமும் மூன்று நேரம் கிருமி நாசினி அடிக்கிறோம். அந்த பகுதியை சேர்ந்தவர்களும் பாதிக்கபட்டு விடக்கூடாது என்பதற்காக தான் சில கட்டுப்பாடுகள் கடுமையாக்கபட்டுள்ளன. இது எல்லாமே அவர்களின் நல்லதுக்கு வேண்டித்தான். அந்த குறிப்பிட்ட நாட்கள்வரை அவர்கள் கொஞ்சம் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஒழுங்காக சென்று சேருகிறதா என்பதை என் தலைமையில் உள்ள ஓரு குழு கண்காணிக்கிறது. இந்த நேரத்தில் கண்டிப்பாக எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை'' என்று வேண்டுகோள் குரலாக.

இரு கை ஓசை போல் இந்த தருணத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் கொரோனாவை துரத்த முடியும். அதேநேரத்தில், நோய்த் தொற்று பரவலைத் தடுத்தல் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்படும் குடும்பத் தினர்மீது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகமும் அச்சமும் ஏற்படுகிறது. அரசு இயந்திரம் என்பது இயந்திரத் தனமாக செயல்படுவதால், வீட்டுக்குள் தனிமைப்பட்டிருப் போரின் உளவியல் சிக்கல்களைப் புரிந்துகொள்வதில்லை. வீட்டுக் குள்ளும் வெளியேயும் அவர்கள் மீதான மற்றவர்களின் பார்வையும் அணுகுமுறையும் முற்றிலுமாக மாறியிருப்பதால், தங்களுக்கு பாசிட்டிவ்வா நெகட்டிவ்வா என்று தெரியாமலேயே நோயாளிகளைப் போல மாறியிருக்கிறார்கள்.

இந்த உளவியல் சிக்கல் என்பது அவர்களின் தனிமைக்காலம் முடிந்தபிறகும் அத்தனை எளிதாக மாறிவிடாது. வெளியில் வந்தாலும், அக்கம்பக்கத்தார், கடைக்காரர்கள் உள்ளிட்டோரின் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கும். இத்தனை காலம் பழகிய மக்கள் தங்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதும், சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும், அச்சப்படுவதும் மனரீதியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதுவே அவர்களை நிரந்தர நோயாளியாக்கும் அபாயம் உள்ளது.

-மணிகண்டன்