நாம் நினைத்தால் கொரோனாவுக்கு முழுதாக முடிவு கட்ட முடியும். அதற்கு முதல் தேவை, தளர்வே இல்லாத முழுமையான ஊரடங்கு’’என்று அறிவுறுத்தி வருகிறார் வாழப்பாடி ஸ்ரீ உதயா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் மோதிலால். அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.
இப்போது தமிழக அரசு ஆறாவது முறையாக ஜூலை 31 வரை ஊரடங்கு அறிவித்திருக்கிறதே... இதனால் கொரோனா கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?’’
இப்போதைய நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. காரணம், கொரோனா தொற்று மின்னல் வேகம் எடுத்திருப்பதோடு, அதன் உயிர்குடிக்கும் வேகமும் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இந்த நேரத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கையே நீட்டித்துக்கொண்டு போவதில் பெரும் மாற்றம் வந்துவிடாது. ஏனென்றால் தளர்வுகளால்தான் தொற்று கட்டுமீறுகிறது. சில அதிரடி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் கொரோனாவை நாம் முழுதுமாக ஒழித்துவிடமுடியும்’’
கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத நிலையில் இது எப்படி சாத்தியம்?’’
ஆங்கில மருத்துகளோடு, நம் சித்த மருந்துகளையும், ஆயுர்வேத, ஹோமியோ மருந்துகளையும் கொடுத்தால், கொரோனா நோயாளிகளை அதன் பாதிப்பிலிருந்து மீட்கமுடியும் என்பதை நாம் அனுபவப் பூர்வமாகவே கண்டறிந்திருக்கிறோம். அரசும், இந்தக் கூட்டுமருத்துவத்தைக் கையிலெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதன்மூலம் கொரோனா நோயாளிகள் வெற்றிகரமாகப் பெருமளவில் குணம்பெற்று வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் 50 ஆயிரம் பேர்வரை கொரோனா விடம் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி கொரோனா நோயாளிகளை மீட்கக் கூடிய, கூட்டு மருத்துவ டெக்னிக் நம்கையில் இருக்கும்போது, அதை சரியாகப் பயன்படுத்தினால், கொரோனாவை நாம் எளிதாகக் கடந்துவிடலாம். அதற்கு அதிரடி முயற்சிகளை எடுக்கவேண்டும்’’
என்ன மாதிரியான நடவடிக்கைகள் தேவை?’’
கொஞ்சமும் தயங்காமல், தமிழகம் முழுதிற்கும் தளர்வில்லா முழுமையான ஊரடங்கைக் குறைந்த பட்சம் 20 நாட்களுக்காவது கடுமையாகப் பிரகடனம் செய்யவேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்போடு, ஒவ்வொரு வீட்டிற்கும் கொரோனாவை எதிர்கொள்வதற்கான கூட்டு மருந்துகளை, அரசு விநியோகிக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு அதிகப்படியாக 100 ரூபாய் அளவிற்கே ஆகும். கூடவே சத்தான உணவு முறைகளையும் மக்களிடம் பரிந்துரைக்க வேண்டும்.
இப்படி தமிழகம் முழுக்க அரசின் கூட்டுமருந்துகள் போய்ச் சேர்ந்துவிட்டால், முழுமையான தளர்வில்லா ஊரடங்குக் காலத்திலேயே, கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். மேல் சிகிச்சை தேவைப்படுவோரை மட்டும் மருத்துவமனைகளில் வைத்து குணப்படுத்திவிடலாம். அதன்பின் மெல்ல மெல்லத் தளர்வை ஏற்படுத்தி, இயல்பு நிலைக்கு நாம் விரைவில் வந்துவிட முடியும். ’
- தமிழ்நாடன்