"வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தில் கட்டிப்புடி வைத்தியம் மூலம், மருத்துவக் கல்லூரி மாணவரான கமல் பலரது பிரச்சனைகளைத் தீர்ப்பார். அதேபோல முத்தமிட்டே பக்தர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டு வந்தவர் மத்தியப்பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்லம் பாபா. அந்த அஸ்லம் பாபாவையே ஆவி போகும்படி இறுகத் தழுவி பாடம் கற்பித்திருக்கிறது கொரோனா.
ஆட்டுமந்தையின் மீது பாய்ந்த ஓநாய்க்கூட்டத்தைப் போல், கொரோனா மனித உயிர்களை வேட்டையாடி குவித்தபடியே செல்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் "நோய்க்கும் பார் பேய்க்கும் பார்'… என்ற மனப்பான்மை சகஜம்.
மத்தியபிரதேசத்தின் பாமர மக்களுக்கு நடுவே பிளாக் மேஜிக் எனப்படும் மந்திரதந்திர வித்தைகள் செய்து தனக்கென ஒரு பக்தர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர் அஸ்லம் பாபா.
கொரோனா வைரஸ் அச்சம் மத்தியப் பிரதேச மக்களிடம் தாக்கம் செலுத்தியிருப்பதையும் அப்பகுதி மக்கள் வைரஸுக்கு அஞ்சி நடுங்குவதை யும் கண்ட அஸ்லம் பாபா, வேறெல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதைப்போலவே கொரோனாவுக்கும் தீர்வளித்தார். தன்னிடம் வரும் பக்தர்களின் கைகளை முத்தமிட்டு அவர்களது பிரச்சனைகள் அவர்களைவிட்டு விலகிப்போகும் என அருள்வாக்குச் சொல்வது அஸ்லம் பாபாவின் ஸ்டைல்.
கொரோனா ஊரடங்கில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்திய பின்னும் தனது ஸ்டைலிலான அருள்வாக்கை நிறுத்தவில்லை. தன்னைப் பரிகசிக்கும் அஸ்லம் பாபாவிடம் தனது திருவிளையாடலைக் காட்ட தீர்மானித்தது கொரோனா. ஜூன் 3-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மருத்துவமனை செல்ல நேர்ந்த அஸ்லம்பாபாவுக்கு. சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஊரடங்கில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரானது காவல்துறை.
ஆனால் அதற்கு முன்பே கொரோனா வேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருந்தது. ஒரே நாளில் அஸ்லம் பாபா கொரோனாவுக்கு பலியானார்.
ரட்லம் மாவட்டத்தில் மட்டும் 85 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ரட்லம் எஸ்.பி. கௌரவ் திவாரி, ""அஸ்லம் பாபா மறைவுக்குப் பின் அவரோடு தொடர்பிலிருந்த 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளோம். 150 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தியுள்ளோம்'' என்கிறார். பாபாவால் முத்தமிடப்பட்டவர்கள் எல்லாம் தற்போது திகிலில் இருக்கிறார்கள்.
இந்திய மாநிலங்களில் அதிகளவு கொரோனா தொற்று பாதிப்படைந்த மாநிலங்களில் ஏழாவது இடத்தில் இருக்கும் மத்தியப் பிரதேசத்தில், ஒரு அஸ்லம் பாபாவை அடையாளம் தெரிந்துவிட்டது. கிராமப்புறங்களில் இன்னும் எத்தனை பாபாக்களும் ஆனந்தாக்களும் யாருடைய கவனத்துக்கும் வராமல் கொரோனா மேஜிக் செய்துகொண்டிருக்கிறார்களோ….
-க.சுப்பிரமணியன்