"ஹலோ தலைவரே, கொரோனா எப்போது முடியும்னு கடவுளுக்குத்தான் தெரியும்னு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரொம்ப கவலையா சொல்லியிருக்காரே?''
""இதே முதல்வர்தானே, 3 நாளில் கொரோனா ஒழிஞ்சிடும்னு சொன்னவரு? “சட்ட மன்றம் நடந்தப்ப இருந்தே கொரோனா பற்றிய விழிப்புணர்வை எதிர்க்கட்சிகள் சொன்னபோது, ஆளுந்தரப்பு அலட்சியப்படுத்தியது. இப்ப நிலைமை படு சீரியஸா இருக்கு. தலைமைச் செயலகத்தில் எந்தெந்தத் தளத்தில் கொரோனாத் தொற்று அதிவேகமாப் பரவுதுன்னு நம்ம நக்கீரன் தெளிவா சுட்டிக்காட்டிய பிறகும், 60 சதவீத ஊழியர்களைப் பணிக்கு வந்தே ஆகனும்னு கட்டாயப்படுத்துச்சு எடப்பாடி அரசு. அதனால் அத்தனை பேரும் அங்க பதட்டத்திலேதான் இருக்காங்க.''
""தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன்னு பெரிய இடங்களே கொரோனாவால் மரணத்தை தழுவிய நிலையில் பதற்றம் அதிகமாகத்தானே இருக்கும்?''
""அமைச்சர்கள் வரை அந்தப் பதற்றமும் பயமும் அதிகமாயிடிச்சி. அதனால் மந்திரிகளைத் தொடர்பு கொண்டு தைரியமூட்டிய எடப்பாடி, வாரம் ஒருதடவை பரிசோதனை பண்ணிக்கங்க. கவனமா இருங்க. நான் சாப்பிடும் ஆரோக்கிய டயட்டையே நீங்களும் பின்பற்றுங்கன்னு தன் மெனுவை அனுப்பி வச்சார். இந்த சூழல்லதான் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் இப்ப கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி இருக்கார். அவரைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக் கும் கொரோனா தொற்றுன்னு தகவல் பரவியது.’’
""ஆனா, அமைச்சர் அன்பழகனுக்கு தொற்று இல்லைன்னு அவரே சொன்னதா பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் சொன்னாரு. மு.க.ஸ்டா லினோ அமைச்சரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தாரு. ஸ்டாலின் சொல்வதை முதல்வர் மறுக்கும் வகையில் பதில் சொன்னாரு. ஆனா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அமைச்சர் அன்பழகனுக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதியாகியிருக்குன்னும் அவர் சீக்கிரம் குணமடையணும்னும் ட்விட்டரில் பதிவிட பரபரப்பாயிடிச்சே...''
""ஆமாங்க தலைவரே, சி.வி.சண்முகம் சைடிலிருந்தும் உடனடியா மறுப்பு அறிக்கை வந்தது. பாதுகாப்பாக தன்னை தனிமைப்படுத்தி யிருந்தவர் வழக்கமான பரிசோதனை செய்த தை திரித்து விட்டார்கள்னு அவர் தரப்பில் சொன்னாங்க. அமைச்சர்கள் பற்றிய கொரோனா தகவல்களால் உயரதிகாரிகளும் பயத்தில் இருக்காங்க. நிவாரணப் பணிகளைப் பார்க்கச் சொன்ன எடப்பாடியிடம், அமைச்சருக்கே தொற்றுவர்ற நிலையில், நாங்கள் அதைப் பார்க்க விரும்பலைன்னு மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அவர் முகத்துக்கு நேராவே மறுத்திருக் காங்களாம். பலரும் தெறித்து ஓடுறாங்க.''
""இந்த நேரத்தில் கொரோனா முடிவுக்கு வர்றது பத்தி கடவுளுக்குதான் தெரியும்னும் எடப்பாடி சொன்னது, பல தரப்பிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கேப்பா...''
""எடப்பாடியின் இந்த ஸ்டேட்மெண்ட் பொதுமக்களையும் திகைக்க வச்சிருக்கு. கடவுளுக்குத்தான் தெரியும்னா, நீங்கள் எதுக்கு லாக் டவுனை அறிவிச்சீங்க? நாங்க கும்புடுற கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை பூட்டி வச்சிட்டு, கடவுளை எதுக்குக் கை காட்டறீங்கன்னு மக்கள் கேள்வி எழுப்பறாங்க. தேர்தலுக்கு எங்ககிட்ட ஓட்டு கேட்பீங்களா? கடவுள்கிட்ட போய் கேட்பீங்களான்னு காரசாரமா கோபத்தைக் கொட்டறாங்க. மக்களின் இந்த மனநிலை பத்திய ரிப்போர்ட்டும் எடப்பாடிக்கு உளவுத்துறையால் அனுப்பப்பட்டி ருக்குதாம்.''
""சரிப்பா.. அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு எப்படி தொற்று ஏற்பட்டதாம்?''
""தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் கொரோனாவில் மரணமடைந்த நேரத்தில், ஏற்கனவே கல்லீரல் போன்ற ரிஸ்க்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அமைச்சர்களும் உயரதிகாரிகளும் மிகவும் கவனமா இருக்கனும்னு அரசின் மருத்துவக் குழு, அட்வைஸ் செய்திருக்கு. இந்த நிலையில், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை அமைச்சர் அன்பழகனிடம் ஒப்படைச்சார் எடப்பாடி. அப்பவே, அமைச்சரிடம், ஏற்கனவே உடல் குறைப்புக்கான அறுவை சிகிச்சையை செஞ்சிருக்கீங்கன்னு அவர் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரைத் தடுக்க முனைஞ்சாங்க. பொதுவாழ்க்கையில் இருக்கும் அவரால் ஒதுங்கி இருக்க முடியலை. நோய்த் தொற்றால் அட்மிட் ஆகறதுக்கு முன்புவரை அவர் கலந்துக்கிட்ட பல நிகழ்சிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப் படலைங்கிறதை, நக்கீரன் சுட்டிக்காட்டி எச்சரித்தும் யாரும் பொருட்படுத்தலை.''
""அது மாதிரி பல நிகழ்வுகளில் கலந்துக் கிட்ட அமைச்சர்கள் பயத்திலும் பதட்டத்திலும் இருக்காங்க. அவங்க குடும்பத்தினர் கோபமும் எடப்பாடி பக்கம் விமர்சனமா திரும்பியிருக்குது.''
""டாக்டர்கள், தொழில்துறையினர், பொது மக்கள் எல்லாரும் விமர்சிக்கிறாங்க. ஊரடங்கை அறிவிச்சிட்டு கூடவே தளர்வையும் அறிவிச்சி அதில் பொத்தல் போடுவதால்தான் கொரோனா தமிழகத்தில் இந்த அளவுக்கு வேகம் எடுத்திருக்குன்னு சகல தரப்பினரும் குமுறுறாங்க. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் 19ஆம் தேதியில் இருந்து முழு ஊரடங்குன்னு அறிவிச்சிட்டு, அதிலும் தினசரி அரைநாள் பொதுமக்களை எடப்பாடி அரசு நடமாட விடுது. அதே சமயம், முக்கியமான பணிகள் காரணமா இடம் பெயர்றவங்ககிட்ட மட்டும், இ-பாஸ் கேட்டு கெடுபிடி காட்டப்படுது.''’’
""தமிழகம் முழுக்க மணல் அள்ளும் பணிகள் அதிரடியா நிறுத்தப்பட் டிருக்குதாமே? கொரோனா கால நடவடிக் கையா?''
""முதல்வர் எடப்பாடி, தனக்கு நெருக்கமான பலருக்கும் மணல் அள்ளும் உரிமத்தைக் கொடுத்திருந்தார். அப்படி மணல் எடுத்தவங்க, அங்கங்க இருந்த அதிகாரிகளை கவனிச்சிக் கிட்டாங்களே தவிர, வெயிட்டா கவனிக்க வேண்டிய மேலிடங்களை கவனிக்கலை. அதனால் எடப்பாடிக்கும் துறை அமைச்சரான சி.வி.சண்முகத்துக்கும் இடையில் பெரும் ஃபைட்டே நடந்திருக்கு. எரிச்சலான எடப்பாடி, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரா அவர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.பி.அன் பழகனை பவர் பாயிண்ட் ஆக்க முயற்சித்தார். இந்தக் கடுப்பில் யாரும் மணல் எடுக்கக்கூடாதுன்னு ஒரேயடியா பிரேக் போட்டுட்டார் மந்திரி. இருந்தும் அங்கங்கே தூர்வாரும் சாக்கில் பலரும் மணலை வாரிக்கிட்டுதான் இருக்காங்க.''
""காவிரி டெல்டாவில் குடிமராமத்து பணிகள் நடக்கிற இடத்திலும், ஆற்றின் கரைகளிலும் படித்துறைகளிலும் அளவுக்கதிகமான மண் அள்ளப்பட்டதால், தண்ணீர் வரும் சூழலில் விவசாயிகள் பயப்படுற சூழல் உருவாகியிருக்கு.''
""தலைவரே இன்னொரு விஷயம் சொல்றேன்.. சமீபத்தில் டி.ஜி.பி. திரிபாதிக்கு பர்த்டே. கொரோனா காரணமாக அவர் தரப்பில் அடக்கியே வாசிச்சிருக்காங்க. அதே சமயம், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பிரசாதத்தை தனி காரில் எடுத்துக்கிட்டுபோய், டி.ஜி.பி.க்கு வழங்கி அவரை மகிழ வச்சிருக்கார், அறநிலையத்துறை இணை ஆணையரான ஜெயராமன். காவல்துறை போஸ்டிங் விவகாரத்தில், தன் செல்வாக்கைக் காட்டிவரும், எடப்பாடியின் ரைட் ஹேண்டான சேலம் இளங்கோவன் தரப்புதான், இந்த பிரசாத ஏற்பாட்டை இணை ஆணையர் மூலம் கொடுக்க செய்ததாம்.''
""ஒன்றிணைவோம் வா செயல்பாடு நிறைவடைந்த நிலையில் தி.மு.க. சைடில் என்ன மூவ் நடந்துக்கிட்டிருக்கு?''
""உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ள தி.மு.க.வினரிடம் காணொலியில் ஸ்டாலின் பேசி, மக்களுக்கு உதவச் சொல்லியிருக்காரு. ஆங்காங்கே தி.மு.க நிர்வாகிகள் உதவிகள் செய்துக்கிட்டி ருக்காங்க. "ஒன்றிணைவோம் வா' முடிந்தபிறகு, சென்னை அண்ணா நகரில் செயல்பட்டுவந்த பிரசாந்த் கிஷோரின் ’ஐ பேக்’ அலுவலகக் கிளை யும் மூடப்பட்டு விட்டதாம். பீகார் தேர்தலில் கவனம் செலுத்தியபடியே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கான வியூகங்களையும் வகுக்கத் தொடங்கியிருக்கார் பிரசாந்த் கிஷோர்.''
""தி.மு.க நிர்வாகிகள் இது பற்றி என்ன சொல்றாங்க?''’
""சீனியர் நிர்வாகிகளைக் கேட்டால், தேர்தல்ல இளைஞர்களுக்குத்தான் பெரும் பாலான சீட்டுக்களைக் கொடுக்கனும்னு பிரசாந்த் கிஷோர் சொல்றதாகவும், 65 வயதைக் கடந்த சீனியர்கள் எவருக்கும் சீட் தரக்கூடாதுன்னும் ஆலோசனை சொல்லியிருக்காராம். அப்படிப் பார்த்தால் பெரும்பாலான கட்சியின் வி.ஐ.பிக்களுக்கே சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். அது களப்பணியில் சுணக்கத்தை ஏற்படுத்திடும்னு நினைக்கிறாங்க. சித்தரஞ்சன் சாலை குடும்பமும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கு. அதனால பிரசாந்த் கிஷோருக்கும் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் இது சம்பந்தமா உரசலாம். உங்க சண்டையில் எங்க சட்டையை கிழிச்சிடா தீங்கன்னு கட்சி நிர்வாகிகள் கவலைப்படுறாங்க.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ரிலீசுக்கு தடைகள் இருந்தாலும் சின்ன பிரஷர் கொடுத்தால் போதும், நீங்க செப்டம்பர் வாக்கில் வெளியே வந்துடலாம்னு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் சிலரால் சொல்லப்பட்டிருக்கு. சசிகலாவோ, செப்டம்பரில் கொரோனா உச்சத்தில் இருக்கும்ன்னு சொல்றாங்க. அந்த நேரத்தில் நான் ரிலீஸ் ஆனால் என்னை வரவேற்க பெரும் கூட்டத்தைத் திரட்ட முடியாது. கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு சொல்லியிருக்காராம் சசி.''