தேர்தல் பிரச்சாரம் மட்டும் தான் வேகமெடுக்குமா... நானும் கூட வேகமெடுப்பேன்' என கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டு பிரச்சாரம் நடந்துவரும் நிலையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் கவலையடையச் செய்துள்ளது.
கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஆரம்பித்த கொரோனா ஊரடங்கு படிப்படியாக சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. எனினும், பள்ளி, கல்லூரிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. பல தொழில்கள் முடங்கிப் போயின. வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு என மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை தொடங்கியிருப்பது மக்களை கலக்கத்தில் தள்ளியுள்ளது.
உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,09,831 பேர். பலியானோர் எண்ணிக்கையோ 1,58,856.
கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளொன்றுக்கு 16000 பேருக்கு மேல் பாதிக்கப் படுவதால், அங்கு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதுஅலைத் தொற்று 19 மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் அதிகபட்சமாக 867 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 352 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 பேரும், கோவையில் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டம் நடத்தினார்.
காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் காவல்துறை டி.ஜி.பி திரிபாதி, வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் பனீந்தர்ரெட்டி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் என அனைவரிடமும் உரையாடினார். இதில் நோய்த் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தகுதியுள்ள வர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்றவற்றைப் பற்றி ஆலோசித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ் ணன், “""தற்போது இரண்டாம் அலை தொற்று பரவிவருவதால் நாளொன்றுக்கு ஆயிரம்பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பொதுநிகழ்ச்சி, தேர்தல் பணி, அரசியல் கட்சி சார்ந்த கூட்டம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, சானிடைசர்கள் பயன்படுத்தாமை போன்றவை நோய்த்தொற்றை மோசமாக்குகின்றன. உடனடியாக இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால், நிலைமை மிகவும் மோசமடையும்''’என்று கூறினார்.
கடந்த புதன்கிழமை அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் பேசிய பிரதமர் மோடியும் இரண்டாம் அலை பரவலை உறுதி செய்ததோடு, "நோய்த்தடுப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும்' என்றும் பேசினார். தேர்தலைக் காரணம் காட்டி எடப்பாடி இதில் பங்கேற்காமல் எஸ்கேப்பானார்.
நம்மிடம் பேசிய சில சுகாதாரத்துறை அதிகாரிகள், ""மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்தபடி யாக கேரளவிலும், தமிழகத்திலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகின்றது. தொற்றின் வீச்சைப் பொறுத்து மராட்டிய மாநிலத்தைப் போலவே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஊரடங்கு அமலில் கொண்டுவருவார்கள். தேர்தலுக்குப் பின் தொற்று அதிகமானால் முழு ஊரடங்கு கொண்டுவரவும் வாய்ப்புள்ளது''’என்று தெரிவித்தனர்.
முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் மாஸ்க் பற்றியும் தடுப்பூசி பற்றியும் பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசியல் நோக்கர்களோ, “""கொரோனோ தொற்று குறித்த இந்த மிகைப்படுத்தப்பட்ட அபாயச் சங்குகள் மோடி-எடப்பாடி தேர்தல் வியூகத்தின் ஒரு அம்சமாக இருக்குமோ என சந்தேகம் கொள்ள வைக்கின்றன. பிரச்சாரம் ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகம், கேரளம் இரண்டிலுமே பா.ஜ.க.வுக்கும் அதன் கூட்டணிக் கும் பிரகாசமான வாய்ப்புகள் எதுவுமில்லை யென்பது நாளுக்கு நாள் மெல்ல மெல்ல உறுதியாகிவருகிறது. தமிழகத்தில் தி.மு.க. அணி பலம்பெற்று வருவதாகவும் டெல்லிக்கு ரிப்போர்ட் போயுள்ளது.
எனவே கொரோனாவை காரணம் காட்டி கொஞ்ச காலத்துக்கு தேர்தலைத் தள்ளிப் போட வோ, இல்லை மக்களை அச்சுறுத்தி வாக்களிப்பு சதவிகிதத்தைக் 60%க்கு கீழே குறைத்து ஆளும் கட்சிக்கான சேதாரத்தைக் குறைக்கவே இந்த திடீர் கொரோனா அலைகுறித்த கெடுபிடிகள் நடக்கிறதோ என யோசிக்கத் தோன்றுகிறது'' என்கிறார் கள். இதற்கிடையில் "கொரோனா ஊரடங்கை அறிவித்துவிட்டு ஆளும்கட்சி மட்டும் பண விநியோகத்தை செழிப்பாக நடத்திவிட்டு, தேர்தலுக்கு நெருக்கத்தில் ஊரடங்கு விலக்கம் அறிவித்து தேர்தலை நடத்தலாம், வாக்கு எந்திரத்தில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக முடிவை மாற்றலாம்' என விதவிதமான யூகங்களை சமூக ஊடகங்களில் காணமுடிகிறது.
"முதல் ஊரடங்கின்போது கொரோனாவுக்கு தடுப்பூசி இல்ல... அதான் இப்ப தடுப்பூசி வந்தாச்சே... மத்திய அரசு எல்லாருக்கும் இலவசமா போட்டுவிட்டு, வீண் பதட்டதை தணித்தால் என்ன? இன்னொரு லாக்டவுன் என்றால் வாழ்வாதாரம் என்னாவது?' என்ற அதிருப்திக் குரல்களும் கேட்கின்றன.