ஜூன் 2021-வரை கொரோனா காரண மாக ஏற்பட்ட மரணம் என மத்திய அரசு தெரி விப்பது 4 லட்சம் பேர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த சென்டர் ஃபார் குளோபல் டெவலப்மெண்ட் எனும் அமைப்பு நடத்திய ஆய்வு இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் துணைக்காரணிகளால் ஏற்பட்ட மரணம் 49 லட்சம் இருக்கும் என கணித்து அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத் தின் அபிஷேக் ஆனந்த், ஜஸ்டின், அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்குபெற்ற இந்த ஆராய்ச்சியின் முடிவானது, கொரோனா மரணங்களை இந்தியா சரிவரக் கணக்கிடவில்லை என தெரிவித்துள்ளது.
கொரோனா மரணங்களைத் துல்லியமாகப் பதிவு செய்யவில்லை என்று மட்டும் இந்த ஆய்வு சொல்லவர வில்லை. கொரோனா தொற்றாளர்கள் மேல் மட்டுமே கவனம் குவிந்ததால், கொரோனா தொற்றுக்குப்பின் கவனம் செலுத்தவேண்டியவர்கள் மேல் கவனம் செலுத்தப்படாமல் போனது, இதர உடல்நலக் குறைபாடுகள் உடையவர்களுக்கு முழு மருத்துவக் கவனம் கிடைக்காமல் போனதால் இயல்பாகவே மரணங்கள் அதிகரித்தன. இத்தகையவர்களின் மரணமும் ஒருவகையில் கொரோனா மரணங்கள் வகைப்பாட்டிலேயே வரும் என்கிறது இந்த ஆய்வு.
மேலும், பரவலாக நம்பப்படுவதுபோல் கொரோனா முதல் அலையில் மரணம் குறைவு என்பது தவறான நம்பிக்கையாக இருக்கலாம் என இந்த ஆய்வு சந்தேகங் களைக் கிளப்புகிறது.
மாநில அரசால் பதிவுசெய்யப்படும் இறப்பு எண்ணிக்கைகள், இந்தியாவின் தொற்று இறப்பு விகிதம், சி.எம்.ஐ.ஈ. எனப்படும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் எனும் மும்பையைச் சேர்ந்த அமைப்பு அளித்த தரவு கள் ஆகியவற்றை ஆராய்ந்து இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களை கணக்கிட்டிருக்கிறது இவ்வமைப்பு.
இந்திய அரசின் தரவுக்கும், அமெரிக்க ஆய்வு அமைப்பின் தரவுக்கும் பத்து மடங்கு வித்தியாசம் இருக்கிறது. அதாவது இந்தியா பத்தில் ஒரு மரணத்தை மட்டும்தான் பதிவுசெய்திருக்கிறது. அல்லது அமெரிக்கா, இந்தியாவின் கொரோனா மரணங்கள் குறித்து பத்து மடங்கு மிகைப்படுத்தி கூறியிருக்கிறது. இரண்டில் ஒன்றுதான் நிஜம்.
அது ஒருபுறம் இருக்க, இந்தியத் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 19-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று தொடர்பான விவகாரம் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக எந்த மாநிலத்திலும் மரணங்கள் நடைபெறவில்லையென தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிக அளவில் நடைபெற்றதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை தான் காரணமா என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார், கொரோனா உயிரிழப்புகள் குறித்த அறிக்கையைச் சமர்ப் பிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு விரிவான வழி காட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படை யில் மாநிலங்கள் உயிரிழப்பு குறித்த விவரங்களை அளித்து வருகின்றன. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸி ஜன் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் 3995 மெட்ரிக் டன்னிலிருந்து 9000 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த மாநிலத்திலும் உயிரிழப்பு நேரவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், “கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவகாரங்களை மாநில அரசுகளே பதிவுசெய்கின்றன. அந்த விவரங்கள் மத்திய அரசால் தொகுக்கப்படுகின்றன. கொரோனா உயிரிழப்பு தொடர்பான விவரங்களை குறைத்துப் பதிவுசெய்து தருமாறு எந்த மாநில அரசிடமும் மத்திய அரசு கேட்கவில்லை''’ என்றார்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் ஒரேயொரு மரணம்கூட நிகழவில்லை என்று அரசு சொல்வதை நம்பினால், இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்கள் வெறும் நான்கு லட்சம் என்பதையும் நம்பித்தான் ஆகவேண்டும். கொரோனா போலவே ஈவிரக்கமின்றி அரசும் செயல்பட்டால் எப்படி?