கொரோனாவால் சகப்பணியாளர்கள் இறந்தபிறகும் எங்களுக்கெல்லாம் டெஸ்ட்கூட எடுக்காமல் அலுவலகம் வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’’என்று கொரோனா அச்சத்தால் அலறித்துடித்துக்கொண்டிருக்கிறார்கள் சென்னை எழிலகத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள்.
தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும் என்று உத்தரவிட்டது தமிழக அரசு. இதனால், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட ஆரம்பித்தது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்திலுள்ள எழிலகம் கட்டிடத்தில் வருவாய் நிர்வாக ஆணையரகம், நில நிர்வாகம், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம், மாநில திட்ட ஆணையம், பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, வணிக வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நல வாரியம் உள்ளிட்ட அரசுத்துறைகள் இயங்கிவருகின்றன.
இதில், வருவாய் நிர்வாக ஆணையரகத்தில் பணிபுரிந்த அலுலக உதவியாளர்கள் மற்றும் துணை ஆணையர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்கள். மேலும், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உதவி ஆணையர் கடந்த 2020 ஜூன் -28ந் தேதி பரிதாப மாக உயிரிழந்துவிட்டார். அவரது, தாயாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். அதேபோல், நில நிர்வாக ஆணையரகத்தில் ஒரு துணை ஆணையருக்கும் நில சீர்திருத்தத்துறையில் இரண்டு துணை ஆணையர்களுக்கும் கலால் துறையைச் சேர்ந்த கண்காணிப்பாளருக்கும் மற்றொரு உதவி ஆணையருக்கும் கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகிவிட்டது.
இப்படி, எழிலகத்திலுள்ள பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர் களுக்கும் கொரோனா தொற்றிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இந்தச் சூழலில்கூட யாருக்கும் கொரோனா பரிசோதனையை அரசாங்கம் செய்யவில்லை. குறைந்தபட்சம் வளாகத்தை சுத்தப்படுத்தக்கூட இல்லை என்று குற்றஞ் சாட்டுகிறார்கள். மேலும், ""இந்த பேரிடர் சூழலில் 10:15 மணிக்கு வந்தால்கூட வருகைப் பதிவேட்டை க்ளோஸ் பண்ணி வைத்துவிடுகிறார்கள். வீட்டிலுள்ளவர்களுக்கு கொரோனா இருந் தால்கூட வேலைக்குவந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்'' என்று குற்றச் சாட்டுகளை அடுக்குகிறார்கள்.
இதுகுறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டியை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் அவருடன் தொடர்பிலிருந்த பணியாளரையும் பரிசோதித்து தனிமைப்படுத்திவிடுகிறோம். அவருக்கு, இல்லை (நெகட்டிவ்) என்று வந்தால்தான் அலுவலகம் வரச்சொல்கிறோம். கொரோனா சூழலில் எல்லோருமே கஷ்டங்களுக்கிடையில்தான் பணிபுரி கிறார்கள். அதற்கேற்றாற்போல் அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று உறுதியளித்தார்.
உறுதியை நடைமுறைப்படுத்தினால்தான் எழிலக அரசுப் பணியாளர்கள் அச்சம் நீங்கி மக்கள் பணி செய்வார்கள்.
-மனோசௌந்தர்