கொடூர கொரோனா, சுனாமி வேகத்தில் சென்னையைப் பதம் பார்த்தாலும் தென்மாவட்டங்கள் அதன் தாக்கத்திலிருந்து முடிந்தளவு தற்காத்துக் கொண்டன. அதற்கேற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் ஹோட்டல்கள், சிறிய கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதியும் வழங்கப்பட்டது.
சுவாமி வரமருளினாலும் பூசாரிகளின் தயவின்றித் தளர்வுகளில்லையே. ஒரு சில பகுதிகளில் தளர்வுத் திட்டத்தால் அதிகாரிகளின் அறுவடையும் நடக்கத் தொடங்கியிருக்கிறது.
தளர்விற்கேற்ப தென்தமிழகம், தென்மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டன. அதுநாள்வரை பூட்டப்பட்டிருந்த தூத்துக்குடி மாநகரின் கடைகளும் திறக்கப்பட்டு சுவாசிக்கத் தொடங்கியது.
வியாபாரிகளை மிரட்டும் போலீஸ்
நகரின் நீதிமன்றமருகேயுள்ள காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருக்கும் கண்ணன் நைட் கிளப் எனப்படுகிற புரோட்டாக் கடையும் விதிகளுக்கு உட்பட்டு திறக்கப்பட்டு, மதியம் அடைக்கப்பட்டது. கோகுல பரமாத்மாவின் மறுபெயரைக் கொண்ட அந்த ஆய்வாளர் சென்னை யிலிருந்து மாறுதலாகி அந்தக் காவல் நிலையத்திற்கு அண்மையில்தான் வந்திருக்கிறார். பரபரப்பிற்கும், வியாபாரப் புழக்கத்திற்கும் சளைக்காத அந்தப் பகுதி லாக்டவுனில் முடக்கப்பட்டு பின் உயிர்த்தெழுந்தபோது இன்ஸ்பெக்டருக்கு மூக்கு வியர்த்துவிட்டது.
விதிப்படி கடைகள் அடைக்கப்படுகிறதா என ஆய்வுக்குக் கிளம்பியிருக்கிறார் அந்த இன்ஸ். எல்லாம் விதிப்படியே நடந்தாலும் அவருக்கென்று ஒரு விதியை ஏற்படுத்திக்கொண்டு தேவையில்லாத நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறார். ஐயா, எதையோ எதிர்பார்க்கிறார் என்று ஹோட்டல்காரர்களுக்கு புரிந்திருக்கிறது. புரிந்துகொண்டவர்கள் சக்திக்கேற்ப கிஸ்தியைச் செலுத்தியிருக்கிறார்களாம். ஆனால் சிறிய ஹோட்டலான கண்ணன் புரோட்டா கிளப்பினால் தேவையைப் பூர்த்தி செய்யமுடியவில்லை. அந்தக் கடைக்காரர், வம்பு எதற்கு என்ற எண்ணத்தில் கடையைத் திறக்கவே இல்லை.
லாக்டவுனுக்குப் பின்பு மே 01-ம் தேதி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்கலாமென அரசு தளர்வு அறிவித்தது. இதனால் முடங்கிக்கிடந்த ஓனர், தனது கண்ணன் நைட் கிளப் புரோட்டா கடையை மே-4 அன்று திறந்திருக்கிறார். அன்று இரவு 8 மணி வரையான வியாபாரத்திற்குப் பின்பு விதிப்படி முன்னதாகவே கடையை அடைக்கத் தயாரானபோது மணியடித்தாற்போல கடைக்குப் போலீசாருடன் வந்த இன்ஸ்பெக்டருக்குப் பழைய கடுப்பு. "இவ்வளவு நேரம் கடையைத் திறந்தது தவறு. ஏன் அடைக்கல' என்றவர் கடையை மூடி, சீல் வைக்கப்போறேன் என்று சொல்லிவிட்டு அதற்கான ஏற்பாட்டினைச் செய்திருக்கிறார். பிழைப்பு போய்விடுமே என்ற பதைபதைப்பில் கடைக் காரரும், ஐயா 9 மணி வரைக்கும் கடைகள் திறக்கலாம். இப்ப மணி 8.30. அங்க கடைக திறந்திருக்கும்போது எங்களுடைய கடையை மட்டும் அடைக்கச் சொல்லுதீகளே என்று மன்றாட, காதில் வாங்காத அந்த இன்ஸ்பெக்டர் கடையை மூடி சீல்வைத்துவிட்டு கடை ஓனரையும் காவல் நிலையத்திற்குக் கொண்டுபோய் விட்டார். விதிப்படி, முறைகேடிருப்பின் வருவாய்த்துறைதான் சம்பந்தப்பட்ட கடையை சீல் வைக்கமுடியும். போலீசுக்கு அந்த உரிமை இல்லை என சில முக்கியப் புள்ளிகள் மூலம் மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் வரை இந்தத் தகவல் போனது.
விவகாரம் எஸ்.பி. வரை சென்றதையறிந்த இன்ஸ் டேலண்ட்டாக, அந்தச் சரகத்தின் (செல்லமான) தாசில்தாரை வரவழைத்து விஷயத்தைச் சொல்ல, தாசில்தாரும் தன் பங்கிற்கு கண்ணன் புரோட்டா கடையில் போலீ சின் சீல் பூட்டுக்குமேல் பூட்டுப்போட்டு, சீல் வைத்துவிட்டு, திறப்பதற்குப் டீலிங் பேசியிருக்கிறார். அதிகாரிகள் தரப்பில் நடந்த இந்த இரட்டை டீலிங்கை அப்படியே நகரின் முக்கியப் புள்ளிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஆதாரங்களோடு தெரிவிக்க, சூடாகிவிட்டார் கலெக்டர்.
போனில் அந்த தாசில்தாரைப் பிடித்த கலெக்டர், என்ன நெனைச்சிட்டிருக்கீங்க என்று வறுத்தெடுத்திருக்கிறார். ஆடிப்போன தாசில்தார், ஹோட்டல் ஓனரை வரவழைத்து, சாவியைக் கொடுத்து நீங்களே திறந்துகொள்ளுங்கள் என்று சொன்னவர், பையில என்ன வைச்சிருக்கீக, என்று நாசூக்காகக் கேட்டு அவரிடமிருந்த இரண்டாயிரத்தையும் காலிசெய்து அனுப்பியிருக்கிறாராம்.
உயரதிகாரிகளின் அழுத்தத்தைத் தாங்கமுடியாத இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.யிடம் சாவியைக் கொடுத்துவிட்டு நைசாக நழுவிவிட்டார்.
கொரோனா சீசன் அறுவடை 2
கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியின் நெருக்கமான காமராஜர் காய்கறிக்கடை மார்க்கெட்டை மூடிவிட்டுத் தற்போது சமூக இடைவெளியுடன் கூடிய காய்கறிக் கடைகளை நகரின் புதிய பேருந்து நிலையத்தில் அமைத்துக்கொடுத்தது மாநகராட்சி நிர்வாகம், அதன் தரைத்தளத்திற்கேற்ப சொற்ப தொகையை நாள் வாடகையாக நிர்ணயம் செய்தது. மாநகராட்சியிலேயே பதியம்போட்டிருக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் கவுன்சிலர்கள் ஐந்து பேர், வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கார்ப்பரேஷனில் கடைகளுக்கான அனுமதிக்கு நாங்கள் பொறுப்பு. எங்களை மீறித் தடங்கல் வராது என்று தவிப்பிலிருப்பவர்களிடம், கடைக்கு 10, 20 ஆயிரங்கள் வீதம் ஆட்டையைப் போட்டிருக்கிறார்களாம். கட்சியின் மாவட்ட நிர்வாகம் வரை பங்கு போகிறதாம்.
இந்த சிலரின் வசூல்மேளா குறித்து நாம் மாநகராட்சிக் கமிசனரான ஜெயசீலன் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ""மாநகராட்சியின் அனுமதிப்படி 40 கடைகள்தான் தரப்பட்டுள்ளது. மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட கடைகளை மீறி வேறுயாராவது கடைபோட்டால் பொருட்களைப் பறிமுதல் செய்துவிடுவோம்'' என்கிறார் அழுத்தமாக.
தூத்துக்குடியில் கொரோனா வைரஸுடன் போட்டிபோடுகின்றன கமிஷன் வைரஸ்கள்.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்