காலனி ஆதிக்க அடக்குமுறை!
தி.மு.க. எம்.பி. கனிமொழி, ""ஒரு கவர்னர், அதுவும் நாளிதழ் ஒன்றின் உரிமையாளர் எந்தவித சகிப்புத்தன்மையும் இல்லாமல் பத்திரிகை ஆசிரியர் ஒருவர்மீது அரதப்பழைய, காலனியாதிக்க காலத்து சட்டத்தைச் சுமத்தியிருப்பது அவமானகரமானது. அவரைத் திருப்திப்படுத்துவதற்காக துரிதமாக நடந்துகொண்ட தமிழக அரசின் செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. நக்கீரன் கோபால் மீதான வழக்கினை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்''’என வலியுறுத்துகிறார்.
உரிமையைப் பறிக்கும் சட்டம்!
""ஜனநாயகம் மற்றும் கருத்துரிமை மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவரையும், நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட செய்தி கொந்தளிக்கச் செய்தது. நீதியின்மீது கொண்டிருந்த நம்பிக்கை வீண்போகாதவண்ணம் ஆசிரியரின் விடுதலை அமைந்தது. இதுகுறித்து தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், "பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தில், 1870-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 1898-இல் திருத்தப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 124 மற்றும் 124-ஆ பிரிவுகள் உருவாக்கப்பட்டன. 124 என்பது பிரிட்டிஷ் பேரரசி மற்றும் பிரிட்டிஷின் இந்திய கவர்னர் ஜெனரல் ஆகியோரின் அதிகாரம் செயல்பட முடியாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உருவாக்கப்பட்ட தண்டனைப்பிரிவு.
விடுதலைபெற்ற இந்தியாவில் 1950-ஆம் ஆண்டு இப்பிரிவில் உள்ள “பேரரசி’’ என்பதைக் குடியரசுத்தலைவர் என்றும், கவர்னர் ஜெனரல் என்பதை மாநில ஆளுநர் என்றும் திருத்திக் கொண்டார்கள். அரசை விமர்சித்தாலே 124ஆ-இன் கீழ் வழக்குப் பதிவுசெய்ய முடியும்.
திருத்தப்பட்டாலும் இந்த 124இன்கீழ் யார் மீதும் இந்தியாவில் வழக்குப் போட்டதில்லை என்கிறார்கள். இப்போது இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றிலும் குறுக்கே புகுந்து பொருந்தாத பிரிவுகளின் கீழ் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முயற்சித்தது, மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதில் இறங்குவதற்கான ஆளுநரின் முன்னோட்டமாகும்.
காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில், காலனிய ஆட்சியாளர்கள் போட்ட தண்டனைச் சட்டப்பிரிவுகள் 124, 124ஆ போன்றவற்றை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஜனநாயக ஆற்றல்கள் வலியுறுத்த வேண்டும்''’என கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பட்டமான அச்சுறுத்தல்!
"நீதிமன்றம் விசாரித்து வழங்கும் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் இயல்பான, சட்டப்பூர்வமான ஜனநாயக நடவடிக்கை. அப்படியில்லாமல், ஒரு செய்திக்காகக் கைதுசெய்வது, நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பே தண்டனையளிக்கிற செயல்தான்' எனக் குறிப்பிட்ட மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன், “""ஒரு ஊடகம் தனக்கு கிடைக்கிற, தான் கேள்விப்படுகின்ற தகவல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை மக்கள் முன் வைப்பது ஊடக நெறி, ஊடகக் கடமை. அதைத்தான் நக்கீரன் ஏடு செய்திருக்கிறது. அதன் உண்மைத்தன்மையை மக்கள் அடுத்தடுத்த நிகழ்வுகளில் தீர்மானிப்பார்கள். ஒருவேளை தவறானது என்றால், வழக்குத் தொடரும் சட்டப்பூர்வ உரிமை இருக்கிறது. அதை ஆளுநர் உட்பட யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்குத் தொடரவும், எதிர்வழக்காடவும் உரிமை இருக்கிறது.
நக்கீரன் போன்ற மக்களிடையே பரவலாக அறிமுகமான, பல்வேறு உண்மைகளை மக்களிடம் கொண்டுசென்ற ஒரு பத்திரிகையின் ஆசிரியரைக் கைது செய்திருப்பது அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையே. ஊடகங்களில் செயல்படுகிற மற்றவர்களைப் பார்த்து உன் பேனாவை மூடி வைத்துக்கொள், உன் கேமராவை நிறுத்தி வைத்துக்கொள் என்று ஆணையிடுவதைப் போன்ற அடக்குமுறை நடவடிக்கையே.
ஆளுநரும் முதல்வரும் சந்தித்த இரு நாளில் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் ஊடகங்கள் பின்வாங்கிட மாட்டார்கள். அடக்கி வாசியுங்கள் என்று சொல்ல நினைத்தால், இப்படி வாய்ப்பூட்டுப் போடப்படுகிறது என்பதையும் ஊடகங்கள் சேர்த்தே வெளியிடும்''’என்கிறார் அழுத்தமாக.
ஆளுநர்தான் தேசமா?
கவிஞர் மனுஷ்யபுத்ரன், “""ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்டால் அதற்கு தேசத்துரோக வழக்கு. ஆளுநர்தான் இந்திய தேசம் என்பதையும், ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறைப்பதுதான் இந்த தேசத்தை பாதுகாப்பது என்பதையும் எதிர்காலச் சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். நானே அரசன், நானே நாடு என்று சொன்னவர்களையெல்லாம் வரலாறு எங்கே அனுப்பி வைத்ததோ அங்கேதான் இவர்களும் அனுப்பப்படுவார்கள்''’என்கிறார்.
கவர்னரை பதவி நீக்கம் செய்!
நக்கீரன் ஆசிரியர் மீதான காவல்துறையின் அவசர கதியிலான நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்திருக்கும் இந்திய மொழிகள் செய்தித்தாள் சங்கம், “""கவர்னரின் செல்வாக்கில் கொடுக்கப்பட்ட இந்த வழக்கில் நீதியரசர் கோபிநாதனின் செயல்பாடு மனநிறைவளிக்கிறது. ஒரு கட்டுரை எழுதியதற்காக அரசமைப்புச் சட்டம் 124 பதியப்படுவது இந்தியாவிலேயே இதுவரை நடக்காத விஷயமாகும். பத்திரிகையாளர்கள் மீது நாடு முழுவதும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த இந்திய நீதிமன்றங்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலையிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். அதேபோல், அரசின் உத்தரவை ஏற்று கண்மூடித்தனமாக கைது மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என அதன் செய்திக்குறிப்பில் வலியுறுத்தியிருக்கிறது.