Advertisment

பாலியல் பலாத்காரம் செய்த காவலர்கள்!  கொந்தளிப்பில் கோவில் நகரம்!

police


திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவில் கிரிவலம் வந்துவிட்டு பகலில் அண்ணாமலையாரை தரிசனம் செய்கிறார்கள். பக்தர்களுக்கு வழிகாட்டியாக, பாதுகாப்பாக திருவண்ணாமலை பகுதி மக்களும், காவல்துறையும் இருந்துவரும் நிலையில், இரண்டு காவலர்கள் செய்த செயல் ஆன்மிக நகரத்தை தலைகுனிய செய்துள்ளது.

Advertisment

செப்டம்பர் 30ஆம் தேதி விடியற்காலையில், திருவண்ணாமலை மாநகரத்துக்குட்பட்ட ஏந்தல் கிராமத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ்க்கு ஒருவர் போன் செய்து வரவைத்து இரு பெண்களை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட 18 வயது இளம்பெண்ணின் பெண்ணுறுப்பு, மார்பகம் சிவந்துபோயிருந்தது. அவர்களிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, "இரண்டு போலீஸ்காரங்க என் மகள் மீனாட்சியை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)ரேப் செய்துட்டாங்க'' எனச்சொல்ல மருத்துவர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர். 

Advertisment

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகருக்கு அந்த தகவல் சொல்லப்பட, மருத்துவமனைக்கு ஓடிவந்த போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், "நாங்க ஆந்திர மாநிலம் சித்தூர். எங்க சொந்தக்காரர் ஒருவர் அடிக்கடி வாழைத்தார்களை ஏத்திக்கிட்டு திருவண்ணாமலைக்கு வருவாரு. எனக்கும், என் மகளுக்கும் திருவண்ணாமலை கோவிலுக்கு வரணும்னு ஆசை. நான் கூட்டிட்டுபோறேன்னு சொல்லி வண்டியில அழைச்சிக்கிட்டு வந்தார். திருவண்ணாமலைக்கு வரும்போது இரண்டு போலீஸ்காரங்க எங்க வண்டிய தடுத்து நிறுத்தி விசாரிச்சாங்க. உங்களப் பார்த்தா சந்தேகமா இருக்குன்னு சொல்லி, கீழ இறங்கச் சொன்னாங்க. வண்டிய எடுத்துக்கிட்டு அவனை போகச்சொன்னாங்க, அவன் போகமாட்டேன்னு சொன்னான். அவனை அடிச்சி துரத்திட்டு, "கோவிலுக்கு நாங்க கொண்டுபோய் விடறோம், நீ பொருளை இறக்கிட்டு ஸ்டேஷனுக்கு வா'ன்னு சொல்லி அவனை அனுப்பிட்டாங்க. 

அதுக்கு பிறகு என் மகளை ஒருத்தரும், என்னை ஒருத்தரும் வண்டியில உட்காரவச்சி எங்கயோ அழைச்சிக்கிட்டு போய் ஒரு சுடுகாட்டுக்கு பக்கத்தில் வச்சி என் மகளை ஒருத்தர் மாத்தி, ஒருத்தர்னு இரண்டு போலீஸ்காரங்களும் நாசம் பண்ணாங்க. ஒரு மணி நேரம் அவுங்களோட போராடி என் மகள் முடியாம மயக்கமாகிட்டாள். எங்களை அங்கயே விட்டுட்டு போய்ட்டாங்க. நான் ரோட்டுக்கு ஓடிவந்து லைட் எரிஞ்ச இடத்துக்கு ஓடினேன். அங்க செங்கல் செய்துக்கிட்டு இருந்தவங்க எங்களை காப்பத்தி ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஆம்புலன்ஸ் வரவச்சி அனுப்பி வச்சாங்க'' என வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. சுதாகரிடம் கூறினர். 

திருவண்ணாமலை நகர ஏ.எஸ்.பி. சதீஷ் தலைமையிலான படையினர், திருவண்ணா மலை நகர கிழக்கு காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய ஏந்தல் கிராமப்பகுதியில் ரோந்துபோன போலீஸார் யார் என டூட்டி ரிஜிஸ்டர் பார்த்தபோது, முதல்நிலை காவலர் சுந்தர், காவலர் சுரேஷ்ராஜ் என்பது தெரிந்தது. அவர்களை தூக்கிவந்து விசாரித்தபோது, குற்றங்களை ஒப்புக்கொண் டனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயாரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று உறுதி செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, "டூட்டி நேரத்தில் இருவரும் சேர்ந்து சரக்கடித்துவிட்டு ரோந்து சென்றுள்ளனர். வண்டியில் பெண்களை பார்த்ததும் தப்பான பெண்கள் என நினைத்து மிரட்டி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்கள். சுரேஷ்ராஜ் வேட்டவலத்தை சேர்ந்தவர், சுந்தர் விழுப் புரம் மாவட்டத்திலுள்ள சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன். ஒழுங்கு நடவடிக்கையாக விழுப்புரம் மண்டலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டவர். இருவரும் டூட்டி முடிந்ததும் ஒன்றாகத்தான் சுத்துவார் கள். இவர்களை கண்காணிக்கவேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரியே இரவு 7 மணியானதுமே போதையை நாடுகிறார்'' என்கிறார்கள். சமூக ஆர்வலர்களோ, "புகாரளிப்பதற்காக, அரசாங்கம் காவல்துறை அதிகாரிகளுக்கு சி.யூ.ஜி. நம்பர் தந்துள்ளது. அந்த எண்தான் மக்களிடமும் தரப்பட்டுள் ளது. அந்த எண்களை பெரும்பாலான அதி காரிகள் பயன்படுத்துவதேயில்லை. இதனால் மக்களால் போலீஸை தொடர்புகொள்ள முடியவில்லை'' எனக் குற்றம்சாட்டுகிறார்கள். 

அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேரடியாக வந்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆந்திர காவல்துறையின் ஒரு டீமும் விசாரித்துவிட்டு சென்றுள்ளது.



படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்


___________
இறுதிச் சுற்று 

"இந்தியாவை மீட்கவேண்டும்'' -முதல்வர் ஸ்டாலின் டுவிட்!

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை, காந்தி பிறந்த அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். இதனை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள். மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும்போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர். நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவலநிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும். இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதி மொழி'' என்று குறிப்பிட்டுள்ளார்.        

 -கீரன்

nkn041025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe