தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் முந்தைய அ.தி.மு.க. அரசில் நடந்த ஊழல்களுக்காக எடப்பாடிக்கு நெருக்கமான 2 முக்கிய நிறுவனங்கள் உட்பட இந்திய தேசிய சாலைகள் ஆணையத்தின் உயரதிகாரி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ.
மதுரை -இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையை மதுரை-பரமக்குடி வரை 75 கி.மீ. நீளத்திற்கு 4 வழிச்சாலையாகவும், பரமக்குடி-இராமநாதபுரம் வரை 39 கி.மீ. நீளத்திற்கு 2 வழிச்சாலையாகவும் மேம்படுத்த 1,400 கோடி ரூபாயில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சனுடனும், அதேபோல, தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 55 கி.மீ. நீளத்திற்கு நடைபாதைகளுடன் கூடிய 2 வழிப்பாதையை ரூ. 160 கோடியில் மேம்படுத்துவதற்காக சென்னையைச் சேர்ந்த காயத்ரி-எஸ்.பி.எல். நிறுவனத்துடனும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம். இந்த 2 நிறுவனங்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான நிறுவனங்கள்.
மேற்கண்ட 2 வேலைகளையும் காரைக்குடியிலிருக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்டங்களை செயல்படுத்தும் அலகு (பிரிவு) கவனித்துக்கொண்டது. இந்த அலகின் திட்ட மேலாளராக இருந்தவர் முத்துடையார். தற்போது இவர், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தின் மதுரை திட்டங்கள் அலகின் துணைப் பொதுமேலாளராக இருக்கிறார். இவர் மீதான புகார் மனுக்களை விசாரித்துதான் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதுபற்றி நாம் விசாரித்தபோது,”சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தில் செயற்பொறியாளராக இருக்கும் முத்துடையார், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அயல்பணியாக நியமிக்கப்பட்டார். சாலைகளை அகலப்படுத்தும் பகுதியிலுள்ள மின்சார கம்பங்கள், குடிநீர் குழாய்கள், ட்ரான்ஸ்ஃபார்மர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சற்று தூரத்தில் அமைப்பதற்கான வேலையைச் செய்யவேண்டும். மதுரை-இராம நாதபுரம், தஞ்சை-புதுக்கோட்டை ஆகிய 2 தேசிய நெடுஞ்சாலை களிலும் எந்த ஒரு மின்சார பயன்பாடு களையும் மாற்றம் செய்யாமல், மாற்றம் செய்ததாக ஒப்பந்த நிறுவனங்களிட மிருந்து போலி பில் பெற்று, நடைபெறாத வேலைகளுக்காக கே.என்.ஆர். நிறுவனத்துக்கு 76.40 லட்சம் ரூபாயும், காயத்ரி-எஸ்.பி.எல். நிறுவனத்துக்கு 62.51 லட்சம் ரூபாயும் என 1 கோடியே 39 லட்சம் கொடுத்துள்ளார் முத்துடையார்.
இந்த ஊழல்களை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்த தால் முத்துடையார் மீது ஆக்சன் எடுக்க, சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தின் தலைவர் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ்.சிடம் அனுமதி பெற்றது சி.பி.ஐ. இதனையடுத்து, அதி காரத்தைப் பயன்படுத்தி அரசுக்கு 1.39 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஆதாயம் அடைந்ததாக முத்துடையார் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த மேற்கண்ட 2 நிறுவனங்கள் மீதும், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்''’என்று சுட்டிக்காட்டினார்கள் துறையினர்.
நெடுஞ்சாலைத்துறையின் ஊழல்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தொடர்ச்சி யாகப் புகார் தெரிவித்து வருபவரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.ரவியிடம் பேசியபோது,”"அ.தி.மு.க. ஆட்சியில் தஞ்சை, கோவை, காஞ்சி, பொன்னேரி, புதுக்கோட்டையில் பாலங்கள் கட்டியதில் ஊழல்கள், டெண்டர் முறைகேடுகள், தென்காசியில் டெண்டர் விடுவதற்கு முன்பே காண்ட்ராக்டரை அழைத்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வேலையைச் செய்ய வைத்தது உள்ளிட்ட பல ஊழல்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஆதாரப்பூர்வமாகக் கொடுத் துள்ளேன். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய இந்த ஊழல் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், நெடுஞ்சாலைத்துறையின் இயக்குநருக்கே அனுப்பியுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.
தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் நடந்துள்ள ஊழல்களைக் கண்டறிந்து இரண் டாவது குற்றவாளியாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருக்கும் கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக நெருக்கமானது. அதனால்தான் தனது துறை சார்பில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான காண்ட் ராக்ட்டை கொடுத்தார் எடப்பாடி.
சேலத்தில் 441 கோடி ரூபாய் செலவில் 5 ரோடு இரண்டடுக்கு மேம்பாலம், கோவையில் 150 கோடி ரூபாய் செலவில் டாக்டர் நஞ்சப்பா சாலையில் மேம்பாலம், 185 கோடி ரூபாய் செலவில் காஞ்சி-வந்தவாசி சாலைப் பணிகள், 320 கோடி செலவில் ஆற்காடு-விழுப்புரம் சாலைப் பணிகள், 230 கோடி ரூபாய் செலவில் மல்லியக்கரை-ஈரோடு சாலைப்பணிகள் ஆகியவைகளை கே.என்.ஆர். நிறுவனம் செய்திருக்கிறது.
தற்போது, கோவை அவினாசி சாலையில் 1,240 ரூபாய் கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை இந்த நிறுவனம்தான் கட்டிக்கொண்டி ருக்கிறது. இந்த காண்ட்ராக்ட்டை இந்த நிறுவனத் துக்கு தாரை வார்க்க டெண்டர் விதிகளை தளர்த்தி யுள்ளது என்பதை, நெடுஞ்சாலைத்துறையின் அப்போதைய செயலாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ்.சிடம் புகார் தெரிவித்தேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. புகாரில் நான் தெரிவித்திருந்தபடியே கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சனுக்கே 1,240 கோடி ரூபாய் மேம்பால காண்ட்ராக்ட்டை தாரை வார்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்திய அரசுக்கு 1.39 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதற் காக அதிகாரி முத்துடையார், காண்ட்ராக்ட் நிறுவனங்களான கே.என்.ஆர்., காயத்ரி-எஸ்.பி.எல். நிறுவனங்கள் மீது குற்றவியல் நட வடிக்கையை தாமத மின்றி எடுக்கிறது சி.பி.ஐ. ஆனால், பல ஆயிரம் கோடி களில் நடந்த ஊழல்களுக்கு ஆதா ரங்கள் இருந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுப்பதில்லை. எடப்பாடி ஆட்சியில் போடப் பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் விசா ரணைக்கு உட்படுத்தினால் பல ஆயிரம் கோடி ஊழல்களுக்காக தண்டிக்கப்படுவார். தி.மு.க. ஆட்சியிலாவது, எடப்பாடிக்கு எதிரான நெடுஞ்சாலை ஊழல்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆக்சன் எடுக்குமா?'' என்கிறார் ஆவேசமாக.
நெடுஞ்சாலை ஊழல்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திவரும் சமூக ஆர்வலர் பாலாஜி நம்மிடம், "அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ் சாலைத் துறையில் நடந்த ஊழல்களுக்கெல்லாம் சூத்திரதாரியாக இருந்தது 2014-2016-ல் நடந்த 1000 கோடி ரூபாய் தார் ஊழல்தான். நக்கீரன் இதனை அப்போதே அம்பலப்படுத்தியது.
பொது மார்க்கெட்டில் தார் விலை குறையும் போது, அதற்கேற்ப விலையையும் குறைத்து காண்ட்ராக்டர்களுக்கு பணத்தை நெடுஞ்சாலைத் துறை கொடுக்க வேண்டும். அதுதான் ஒப்பந்த விதி. ஆனால், தார் விலை குறைந்திருந்தும் விலையைக் குறைக்காமல் 41 கோட்டங்களிலும் காண்ட்ராக்டர் களுடன் கூட்டுச் சேர்ந்து அள்ளிச் சுருட்டினார்கள் துறையின் அதிகாரிகள். இதனால் 1000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பினேன். கண்டுகொள்ளப்படாததால் தார் ஊழலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதனையடுத்து, திருச்சி கோட்ட அதிகாரிகள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, மற்ற 40 கோட்ட அதிகாரி களையும் தப்பிக்க வைத்தது. 6 ஆண்டுகளாகியும் ஊழல் அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆர்வம் காட்டவே இல்லை. மாறாக, ஊழல் அதிகாரிகளை சொகுசாக ஓய்வு பெற அனுமதித்தது எடப்பாடி அரசு. பலருக்கு பதவி உயர்வும் கொடுக்கப்பட்டது.
ஆதாரங்களுடன் இந்த ஊழல் புகாரை எடப்பாடிக்கு நான் அனுப்பி வைத்தேன். ஆனால், துறையின் முதன்மை இயக்குநராக இருந்த ராஜேந்திரன், இந்த புகாரில் உண்மையில்லை என எடப்பாடிக்கு ரிப்போர்ட் கொடுத்தார். இதே ராஜேந்திரன் தான், சம்பந்தப்பட்ட கோட்டப் பொறியாளர் 6,36,34,609 ரூபாய் நிதியிழப்பை ஏற்படுத்தினார் என அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்தவர். மேலும், நான் தொடர்ந்த இந்த ஊழல் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, அந்த கோட்டப் பொறியாளர் காண்ட்ராக்டர்களுக்கு வழங்கிய அதிக பில் தொகை 22,80,92,576 ரூபாயை பிடித்தம் செய்யப்பட்டதாக எடப்பாடி அரசு தரப்பில் ரிப்போர்ட் தாக்கல் செய்யப்பட்டது. ஊழலை எடப்பாடி அரசே ஒப்புக்கொண்டும், ஊழல் அதிகாரிகளைத் தண்டிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முன்வரவில்லை.
நெடுஞ்சாலைத்துறையின் முந்தைய ஊழல் புகார்கள் இன்னமும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் குவிந்து கிடக்கிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் காட்டும் வேகம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இல்லை என்பது துரதிர்ஷ்டம்''’என்கிறார்.
எடப்பாடி ஆட்சியில் கோலோச்சிய ஊழல் அதிகாரிகள் தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் உயர் பதவியிலும் பவர்ஃபுல் பதவியிலும் இருக்கிறார்கள். அரசாங்கத்திடம் இருப்பதும், அரசு செலவு செய்வதும் மக்களின் வரிப்பணம் தான். அதில் ஊழல் செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் தலைமைப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள், காண்ட்ராக்டர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். லஞ்ச ஒழிப்புத்துறை இனியாவது இந்தப் பக்கம் பார்வையைத் திருப்பி வேகம் காட்டுமா?