சுகாதாரத்துறை செயலாளராக டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இருந்தவரை, யதார்த் தத்தைப் புரிந்துகொண்டு பணியாளர் களை வழிநடத்தினார். அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்த பீலா ராஜேஸ், தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்' என்று குமுறுகிறார்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மாவட்ட இணை இயக்குனர் வரையிலான அதிகாரிகள்.
பொது சுகாதாரத்துறையின் உயிர்நாடியாக இருப்பது கிராம சுகாதார செவிலியர்கள்தான். தாய்-சேய் நலனில் தமிழ்நாடு இன்றளவும் முன்னிலையில் இருப்பதற்கு, சாதாரண குக்கிராமங்கள் வரையிலும் முழுமையான பணிசெய்யும் கிராம சுகாதார செவிலியர்களே முக்கியக் காரணம். ஆனால், இவர்களின் அடிப் படைப் பணிகளைக்கூட கவனிக்கமுடியாத அளவிற்கு பணிச்சுமையை அதிகப்படுத்தி விட்டதாக குற்றச் சாட்டு எழுகிறது. பிக்மி பதிவிற்காக லேப்டாப்பும் கையுமாக இருந்து கொண்டு, மணிக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்ப இவர்களுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
""மகப்பேறு நிதி தொடர்பான விண்ணப்பத்தை பதிவுசெய்து, அதை அடுத்த நிலைகளுக்கு கிராம சுகாதார செவிலியர் அனுப்பிவிடுவார். அது பல்வேறு நிலைகளைக் கடந்து சுகா தாரத்துறை இயக்குனர் அலுவலகத் திற்கு செல்லும். மத்திய அரசு மூலமாக வழங்கப்படும் இந்த நிதியை முறைப்படுத்தாமல், சுகாதாரத்துறையில் குளறுபடி கள் நடப்பதால் அது கீழ் மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் சுகாதாரத்துறை தலைமை, கிராம சுகா தார செவிலியர்களை பலிகடா ஆக்குகிறது.
தாய்-சேய் நலனைக் கருத்தில் கொள்ளவேண்டிய செவிலியர்கள் மீது, கணக்கு வழக்கையும், ரெக்கார்ட் வேலைகளையும் திணிப்ப தால் மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். இதையெல்லாம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டுபோனால், "செகரட் டரியே பார்த்துக்கொள்வார்' என ஒதுங்கி நிற்கிறார். செகரட்டரி பீலா ராஜேஸோ, இதைப் புரிந்துகொள்ளமால் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து, ஒரு சேடிஸ்டைப் போல் நடந்துகொள்கிறார். இதனால் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்'' என கொந்தளித்தனர் மருத்துவத்துறை பணியாளர்கள்.
இந்த நிலையில்தான், திருச்சி அரசு மருத்துவமனையில் 27-ந்தேதி காலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வீடியோ கான்ஃபரன்சிங் நடத்தினார். அவரது சில கேள்விகளால் மனஉளைச்சலுக்கு ஆளான மகப்பேறியல் துறைத்தலைவர் பேரா சிரியை பூவதி ஸ்ரீஜெயந்தன் திடீரென எழுந்து, "மேடம் என் வேலையை ராஜினாமா செய்கிறேன்' என்று கூறிவிட்டு வெளியேறினார்.
அதன்பிறகு, அவர் வெளியிட்ட கடிதத்தில், ""என் வருத்தத்தை வெளிப் படுத்தவோ, நான் செய்த வேலைகளை விளக்கவோ விரும்பவில்லை. போது மான பணியாட்களும், உட்கட்ட மைப்பு வசதிகளும் இல்லாமலே, மிகவும் சிக்கலான சூழலில் இருக்கும் நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் எடுத்த முயற்சிகள் ஏராளம். அதற்காக உண்டான மனஅழுத் தத்தால் வாழ்க்கையின் பாதி நாட்களை இழந்திருக்கிறோம். இன்று வீடியோ கான்ஃபரன்சிங்கில் இறப்புகள் குறித்து கேட்டார்கள். அதில் எனது பங்கு என்று ஒன்றுமில்லை.
இதற்காக என்மீது நடவடிக்கை எடுக்க மாண்புமிகு ஹெல்த் செகரட்டரி மேடம் அறிவுறுத்தியிருப்பதைக் கேட்டு, நான் மனச்சோர்வு அடைந்துள் ளேன். ஒரு திறந்த மன்றத்தில் எனக்குக் கொடுக்கும் வெகுமதி இதுதான் என்றால், இனி அந்தப்பணியில் தொடர் வதில் மதிப்பு இல்லை. அரசு ஊழியர் என்பதை விடவும், எனக்கு சுயமரியாதையே முக்கியமாகப் படுகிறது. யாரையும் குற்றஞ்சொல்ல விரும்ப வில்லை. நான் விருப்ப ஓய்வுபெற அனுமதியுங்கள். இனி கடவுள் பதில் சொல்வார்'' என மன உளைச்சலோடு எழுதியிருக்கிறார்.
வாட்ஸ்-ஆப்பில் வெளியான இந்தக் கடிதம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, ""ஒவ்வொரு வாரமும் வீடியோ கான்ஃபரன் சிங்கில் யாரையாவது சஸ்பெண்ட் செய்துவருகிறார்கள். இந்தமுறை மாவட்டத்தில் கர்ப்பிணிகள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை, இறப்பு விகிதம் பற்றி மருத்துவக் கல்லூரி துறைத்தலைவரிடம் கேட்டார் ஹெல்த் செகரட்டரி. உண்மையில், இந்த விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தான் கேட்கவேண்டும்.
சிறந்த, நேர்மையான மருத்துவராக அறியப்படும் பூவதி இதனால்தான் ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார்'' என்றனர்.
இந்நிலையில், "பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. அறிக்கை கேட்டு தொல்லை தரக்கூடாது. ஆன்லைன் பதிவு என்கிற பிக்மி பதிவுகளில் ஈடுபட வைத்து டார்ச்சர் கொடுக்கக்கூடாது. வாரந்தோறும் மாவட்ட அளவில் அதிகாரிகள், மருத்துவ அலுவலர்களை வைத்து வீடியோ கான்ஃபரன்சிங் கூட்டத்தை நடத்தி, அதில் சஸ்பெண்ட், டிஸ்மிஸ் போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளில் செகரட்டரி பீலா ராஜேஸ் ஈடுபடுவதைக் கைவிடவேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 27-ந் தேதி மாலை மாவட்டத் தலைநகரங்களில் சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஹெல்த் செகரெட்ரி பீலா ராஜேஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-ஜீவாதங்கவேல், ஜெ.தாவீதுராஜ்