கிறிஸ்டி நிறுவனத்தில் நடக்கிற ரெய்டு கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட ஆபரேஷன் என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

egg-corruption

முன்னாள் அமைச்சர் + கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி + அக்னி பவுண்டேசன்ஸ் ஜெ.பி. தரப்பின் லிஸ்ட்டையும் சொத்து பரிவர்த்தனைகளையும் கவனிக்க... அனுபவமுள்ள தாசில்தார்களை அனுப்பினர். ஜெ.பி.யின் அக்னி பவுண்டேஷன் நிறுவனத்தை கவனிப்பவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சையது முனீர் ஹோதா. தமிழகத்தின் உள்துறை செயலாளராக இருந்தவர். முத்திரைத்தாள் மோசடி வழக்கு நடைபெற்ற காலத்தில், உள்துறை செயலாளராக இருந்த ஹோதாவுக்கு சத்யப்ரியா, சந்தீப்ராய் ரத்தோட் ஆகிய இருவரும் நெருக்கம். இதில் சந்தீப்ராய் ரத்தோட் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.ஐ.ஜி. முகமது அலியுடன் பணிபுரிந்தவர். இவர்களைப் பிடித்த வருமானவரித்துறை, இவர்கள் மூலமாக ஒரு ஆடிட்டரை அக்னி நிறுவனத்திற்கு அனுப்பியது. கிறிஸ்டி குமாரசாமி நிறுவனத்திற்கும், "சையது முனீர் ஹோதா அனுப்பி வைத்தார்' என ஒரு ஆடிட்டரை அனுப்பியது வருமானவரித்துறை.

இரண்டு நிறுவனங்களிலும் உட்கார்ந்த அந்த ஆடிட்டர்கள் ப.சிதம்பரம் எப்பொழுது ஜெயப்பிரகாஷிடம் நிலத்தை விற்றார், ஜெ.பி.யிடமிருந்து எப்படி கிறிஸ்டி நிறுவனம் வாங்கியது என கண்டுபிடித்து, அது தொடர்பான பரிவர்த்தனைகளை வருமானவரித்துறையிடம் கொடுத்தார்கள். அத்துடன் கிறிஸ்டி நிறுவனம் எப்படி தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்கிறது என கண்டுபிடித்தார்கள். இப்பொழுது கிறிஸ்டி நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் பாலமாக செயல்படுவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருக்கும் சுதாதேவி ஐ.ஏ.எஸ்.தான். அவர்மூலமாக தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பருப்பு உட்பட பல பொருட்களை கிறிஸ்டி நிறுவனம் சப்ளை செய்திருக்கிறது. இந்த சுதாதேவி, எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனின் மாமனாரான தங்கமணியின் உறவினர். இவர்தான் கிறிஸ்டி நிறுவனம் அந்த நிலத்தை வாங்குவதற்கு உதவி புரிந்தார். அதன் விற்பனைக்காக ப.சி.யின் மனைவியும், வழக்கறிஞருமான நளினியிடம் சட்ட ஆலோசனைகளைப் பெற்றார் என கண்டறிந்து வருமானவரித்துறையினரிடம் சொன்னார்கள்.

egg-corruption

Advertisment

கிறிஸ்டி நிறுவனம், முட்டையின் விலை 3 ரூபாய் இருக்கும் காலகட்டத்திலும் முட்டையை 4 ரூபாய் 34 காசுகள் என்ற ரேட்டில் வருடம் முழுவதும் சப்ளை செய்ய வைத்தவரும் தங்கமணிதான். தினமும் பல லட்சம் முட்டை சப்ளை ஆகும் தமிழகத்தில் ஒவ்வொரு முட்டையிலும் கிடைக்கும் 1 ரூபாய் 34 காசுகளில் கிறிஸ்டி கொடுக்கும் தொகையை, எடப்பாடியின் மகன் மிதுனிடம் லஞ்சமாகக் கொடுத்து வந்தார். 2012-ஆம் ஆண்டு முதல் கடந்த 6 வருடங்களாக சுமார் 5000 கோடி ரூபாய் அளவிற்கு கிறிஸ்டி நிறுவனம் ஊழல் பணத்தை சேர்த்துள்ளது. இதில் ஜெ. உயிருடன் இருந்தவரை சசிகலாவிற்கு லஞ்சம் கொடுத்துவந்த கிறிஸ்டியிடமிருந்து ஜெ. இறந்தவுடன்... எடப்பாடி தரப்பு சுதாதேவி ஐ.ஏ.எஸ். மூலம் லஞ்சம் பெற்றது. இதற்கிடையே முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி, தற்போதைய சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோருக்கும் கொஞ்சம் பங்கு சென்றன என ஆதாரங்களோடு விளக்கினர்.

அத்துடன் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் கிறிஸ்டி நிறுவனம் செய்துள்ள முதலீடுகள், அக்னி நிறுவனம் ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் வாங்கியுள்ள சொத்துக்களையும் பட்டியலிட்டனர். ஆடிட்டர் அறிக்கையை வைத்து மொத்தம் 114 இடங்களில் ஐந்து நாட்கள் மெகா ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு பற்றிய தகவல்கள் கிறிஸ்டி குமாரசாமிக்கும், அக்னி ஜெ.பி.க்கும் முன்கூட்டியே தெரிந்து, அவர்கள் முடிந்தவரை மறைக்கப் பார்க்கிறார்கள். ரெய்டு நடக்கும்போது தனது கம்ப்யூட்டரில் ப.சி.யின் நிலத்தை கிறிஸ்டி வாங்கியதற்கான ஆவணங்களுடன் சுதாதேவி மாட்டிக்கொண்டார் என்கிற தகவலைக் கேட்டு எடப்பாடி அதிர்ந்துபோனார். கேரள கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை தொடர்புகொண்டு நிலவரம் அறிய ஆரம்பித்தார் எடப்பாடி.

அருண்ஜெட்லியோ, ""கிறிஸ்டி நிறுவனம் மூலம் சேலம் இளங்கோவன் தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் சசிகலாவின் 300 கோடி ரூபாயை எடப்பாடி தரப்பு மாற்றியுள்ளது. இப்போதும் எடப்பாடியின் விசுவாசம் சசிகலாவிடம்தான் உள்ளது. அரசு நிர்வாகத்தில் அவர் ஏகப்பட்ட தவறுகளைச் செய்கிறார். அதை மறைக்க நம்மிடம் நாடகமாடுகிறார்'' என விளக்க... அதிர்ந்துபோனார்கள் எடப்பாடியின் தூதுவர்கள்.

1991-96 காலகட்டத்தில் இலவச வேட்டி-சேலை ஊழலில் மதுசூதனனுடன் கைதானவர் ஜெ.பி. தற்போது அவருடைய சொத்து மதிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறது வருமானவரித்துறை. ஜெ.பி.யும் குமாரசாமியும் தினமும் கலங்கித் தவித்து வருமானவரித்துறையை எதிர்கொள்கிறார்கள். குமாரசாமி கொள்ளையடித்த 5 ஆயிரம் கோடி ரூபாயை 1350 கோடி ரூபாய் மட்டும், கணக்கில் காட்டப்படாத சொத்து என கணக்கிட்டுள்ள அதிகாரிகள்... கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சொத்து டாகுமெண்ட்டுகளை பென்டிரைவ்களில் தேடுகிறார்கள். இந்த அதிரடிகளால் திகிலடைந்த எடப்பாடி 500 கோடி ரூபாய்க்கான சத்துணவு முட்டை டெண்டரை கிறிஸ்டிக்கு தராமல் ரத்து செய்துள்ளார்.

-தாமோதரன் பிரகாஷ்