என்.எல்.சி. நிறுவனத்தின் மூன்றாவது நிலக்கரி சுரங்கத்துக்கு ஆள் எடுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அரசு சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்பு மணி திடீரென்று கலந்துகொண்டது சல சலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் அரசியல்ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தந்தைக்கும் மகனுக்குமான மோதல்களாகத்தான் பா.ம.க.வில் எதிரொலிக்கிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணிக்குமிடையில் அதிகாரம் சார்ந்த மனக்கசப்புகள் சமீபகாலமாக முற்றியபடி இருக்கின்றன.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசால் நிய மிக்கப்பட்டவர்களையும் அவரது ஆதரவாளர் களையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் தனது ஆதரவாளர்களை நியமித்து கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்கான சூழலை உரு வாக்கிக்கொண்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி.
காலத்திற்கேற்ப கட்சியில் மாறுதல் கொண்டுவரவேண்டும்; அதற்காக, இளைஞர்கள் கையில் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என்கிற கான்செப்டில் அன்புமணி இயங்குவதாக அன்புமணி யின் ஆதரவாளர்களால் சொல்லப்படுகிறது. ராம தாசுக்கு வயதாகிவிட்ட தால் அரசியலி-ருந்து அவர் விலகியிருப்பது தானே ஆரோக்கியமாக இருக்கும் என்று வாதிடு கிறார்கள்.
டாக்டர் ராமதாசின் ஆதரவாளர்களோ, "வன்னி யர் சமூகமும் சரி, பா.ம.க. நிர்வாகிகளும் சரி, அய்யாவுக்கு (டாக்டர் ராமதாஸ்) வயதானா லும் அவரது அரசியலைத்தான் முக்கியமாக பார்க்கிறார்கள். அவரது அரசியல் அனுபவமும் சமயோஜித யோசனையும்தான் பா.ம.க.வை இன்னமும் உயிருடனும் உயிர்ப்புடனும் வைத்திருக்கிறது.
அரசியல் அனுபவமுள்ள சீனியர்களும், அரசியல் களத்தில் துடிப்புடன் உழைக்கும் புதிய இளைஞர்களும் என இரு துருவங்களும் பா.ம.க.வுக்கு அவசியம். இதனைப் புரிந்து கொள்ளாமல் அய்யாவையும் சீனியர்களையும் ஓரங்கட்ட அன்புமணி திட்டமிட்டு செயலாற்று வதுதான் தற்போதைய பிரச்சனையே.
தனக்கு வயதாகவில்லை என்றும், மக்களிடம் தனக்குத்தான் செல்வாக்கு இருக்கிறது என்றும், கட்சியை வழிநடத்தும் ஆற்றல் இன்னும் அன்புமணிக்கு வரவில்லை என்றும் நினைக்கும் அய்யா ராமதாஸ், அதை அன்புமணிக்கு உணர்த்துவதற்காகத்தான் முன்புபோல அரசிய லில் தீவிரம் காட்டத் துவங்கியிருக்கிறார். இதனைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
கட்சியின் தலைவராக இருப்பதால் அனைத்து முடிவுகளையும் அவரே எடுத்துவிட முடியுமா? அப்படித்தான் நடந்துகொண்டிருக் கிறார் அன்புமணி. டாக்டர் ராமதாசிடம் கலந்தாலோசிப்பதில்லை.
மக்கள் நிமிர்ந்து பார்க்குமளவுக்கு பா.ம.க. வுக்கு ஒரு வெற்றியை அவர் தேடித் தரட்டும். அதன்பிறகு தந்தையோடு மல்லுக்கட்டலாம். அதை தவிர்த்துவிட்டு, இப்போதே ராமதாசிடம் கலந்தாலோசிக்காமல் முக்கிய முடிவுகளை எடுப்பதும் அவரை ஓரங்கட்ட நினைப்பதும் பா.ம.க.வின் அரசியலுக்கும் எதிர்காலத்துக்கும் நன்மையைக் கொடுக்காது. இதை அன்புமணி புரிந்துகொள்ள வேண்டும்''’என்கிறார்கள் ஆதங்கமாக.
அண்மையில் பா.ம.க. சார்பில் அன்புமணி தலைமையில் இஃப்தார் விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் மருந்துக்குக் கூட டாக்டர் ராமதாசின் பெயர் இடம் பெறவில்லை. வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, என்.எல்.சி. நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்துக்கு ஆள் எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் தலைமையிலும் தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையிலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கோட்டையில் நடத்தியது தமிழ்நாடு அரசு.
அரசு சார்பில் நடக்கும் அனைத்து கட்சிகளின் கூட்டம் என்றாலே சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விவாதிப்பதை ஒரு கொள்கை முடிவாகவே கொண்டு இயங்கியது முந்தைய அ.தி.மு.க. அரசு. அதே பாணியில்தான் தி.மு.க. அரசும் இப்படிப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்திவருகிறது.
அந்த வகையில்தான், அரசு சார்பில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு சட்டப்பேரவையிலுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அக்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பா.ம.க. சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்துகொள்வார் என அரசு தரப்பிலும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்களும் நினைத்தனர். ஆனால், அந்த கூட்டத்துக்கு ஜி.கே.மணி வரவில்லை. அதற்கு மாறாக, பா.ம.க. எம்.எல்.ஏ. சிவக்குமாரை அழைத்துக்கொண்டு கூட்டத்திற்குள் திடீரென்று பிரவேசித்தார் டாக்டர் அன்புமணி. இது கூட்டத்தில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. சிலர் எதிர்க்கவும் செய்திருக் கிறார்கள். ஜி.கே.மணிக்கு பதிலாக அன்புமணி கலந்து கொண்டார் என்பதாக பரப்பப்பட்டாலும் பா.ம.க.வில் நடக்கும் உள்கட்சி உரசல் களாகவே எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இது குறித்து, பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘’"அந்த கூட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொள்வதாகத்தான் இருந்தது. ஆனால், "நீங்கள் போக வேண்டாம்; அன்புமணி கலந்து கொள்வார்' என ஜி.கே.மணிக்கு அழுத்தம் தரப்பட்டது. அதனால் அவர் செல்லவில்லை. இதற்கு உடல்நிலையை ஒரு காரணமாக காட்டியிருக் கிறார்கள்.
ராமதாசின் விசுவாசியாக இருப்பவர் ஜி.கே.மணி. அவருக்கும் அன்புமணிக்கும் எப்போதுமே ஒத்துப்போகாது. கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவைத்து அன்புமணி தலைவரானார். அதேசமயம், சட்டமன்ற பா.ம.க. தலைவராக இருக்கும் ஜி.கே.மணிக்கு அப்பதவியின்படி கிடைக்கும் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டுமென்பதற்காகவே அவரை அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுத்துவிட்டார் அன்புமணி''” என்கிறார்கள்.
கோட்டையில் விசாரித்தபோது, "அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒரு கட்சியின் தலைவர் கலந்துகொள்வது தவறல்ல; ஆனால், அக்கட்சிக்கு சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இருக்கும்போது அக்கட்சியின் பேரவைத் தலைவருடன் கலந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், ஜி.கே.மணியுடன் அன்புமணி கலந்துகொண்டிருந்தால் சர்ச்சையாகியிருக்காது. அவர்களின் உள்கட்சி விவகாரத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை பயன்படுத்தியிருக்கக் கூடாது''’என்கின்றனர்.
அன்புமணி ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, "ஜி.கே.மணிக்கு உடல்நலம் சரியில்லாததால்தான் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால் அன்புமணி கலந்து கொண்டார். இதுதான் உண்மை. இதனை கட்சியில் ராமதாசோடு மோதலாக முடிச்சுப் போடுவது சரியல்ல. பா.ம.க.வை பலகீனப்படுத்த சிலர் செய்யும் சதி. மற்றபடி கட்சியில் அதிகார மோதலோ, உரசலோ கிடையாது''’என்கிறார்கள் மிக அழுத்தமாக. இந்த நிலையில், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் மா.செ.க்கள் கூட்டத்தை இந்த மாதம் 6-ந் தேதி திண்டிவனத்தில் கூட்டியிருக்கிறது பா.ம.க.