ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கேம்ஸில் பணத்தை இழக்கும் பெண்கள், நண்பர்களிடம், உறவினர்களிடம் வாங்கிய கடன் பணத்தை திருப்பித் தருவதற்காக வீட்டுக்குத் தெரியாமல் சிலர் நகையை அடமானம் வைத்து கடனைத் திருப்பிச் செலுத்துகின்றனர். சிலர் தாய் வீட்டில் சொல்லியழ, மகளின் வாழ்க்கை பறிபோய்விடுமே எனப்பயந்து கடன் வாங்கித் தந்து மகளை அதிலிருந்து மீட்கின்றனர். இதற்கெல்லாம் வழியில்லாத பெண்கள் இணைய கடன்காரர்களிடம் கடன் வாங்க வைக்கப்படுகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gambling_0.jpg)
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவண்ணா மலையைச் சேர்ந்த சைபர் க்ரைம் பிரிவு அதிகாரி ஒருவர், “"நாம் ஒருவரைத் தொடர்புகொண்டு கடன் கேட்டோ அல்லது நேரிலோ பேசினால் நம் கையிலுள்ள மொபைல் போன் ஏ.ஐ. டெக்னாலஜி யால் அந்த பேச்சு உள்வாங்கப்பட்டு அடுத்த நிமிடத்திலிருந்து நாம் பயன்படுத்தும் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் குறுஞ்செய்தி வழியாக இரண்டு நிமிடத்தில் உங்களுக்குக் கடன் தரப்படும், நோ புரோக்கரேஜ் கமிஷன், நோ டாக்குமெண்டேஷன் சார்ஜ் என்கிற விளம்பரங்கள், மெசேஜ்கள் ஆட்டோமேட்டிக்காக நமது மொபைலுக்கு வரும்.
இதை கடன்கேட்டுத் தத்தளிக்கும் பெண்கள் பார்க்கும் போது, நமக்கு தெரிஞ்சவங்களே உதவமாட்டேன்கிறாங்க, ஏன்? எதுக்கு?ன்னு ஆயிரம் கேள்வி கேட்கிறாங்க, ஆன்லைனில் அப்படி எதுவும் கேட்கப்போவதில்லை, நாம் யார் எனத் தெரியப்போவதில்லை, கடன் வாங்கினாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை என நினைத்துக்கொண்டு ஆன்லைன் கடன் நிறுவனங்களிடம் கடன் வாங்குகிறார்கள். அவர்களும் உடனே எவ்வளவு தொகை எனக் கேட்டு வங்கிக் கணக்கு எண், ஃபான் எண், ஆதார் கார்டுகளை வாட்ஸ்அப் வழியாக வாங்கிக்கொண்டு அல்லது அவர்களது கடன் ஆப் இன்ஸ்டால் செய்யச்சொல்லி அதைச் செய்ததும் அதில் டாக்குமெண்ட் அப்லோட் செய்யச்செய்து, உடனே நமது வங்கிக் கணக்கில் கடன் தொகையை சர்வீஸ் சார்ஜ் பிடித்துக்கொண்டு கிரெடிட் செய்துவிடுகிறார்கள்.
அவர்களின் ஆப் இன்ஸ்டால் செய்த நொடியிலிருந்து கடன் வாங்கியவரின் மொபைல் போன் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும். மொபைலிலுள்ள ஆடியோ, வீடியோ, போட்டோ, வாட்ஸ்அப் தகவல் என அனைத்தையும் கண்காணிப்பார்கள். போட்டோ- வீடியோக்களை எடுத்துவைத்துக்கொள்வார்கள். ஒரு மாதம் இ.எம்.ஐ. கட்ட தாமதமானாலோ, கட்டாமல் விட்டாலோ, கடன் வாங்கியவரின் புகைப்படத்தை செக்ஸியாக மார்பிங் செய்து மிரட்டுவார்கள். மொபைல் கான்டாக்ட் லிஸ்டிலுள்ள அனைவருக்கும் கடன் வாங்கிய தகவலை அனுப்பி நீங்க கட்டுங்க என அசிங்கப்படுத்துவார்கள். நம்முடைய மொபைலுக்குள் உள்ள டேட்டாவும், நமது போட்டோ -வீடியோவும் தான் அவர்களுக்கு அடமானமே. அதை வைத்துதான் பணம் தருகிறார்கள். இந்த சூழ்ச்சி தெரியாமல் கடன்வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள்''” என்றார்.
ரம்மி, கேம்ஸ் போன்றவற்றால் உருவான கடனை அடைக்க, ஆன்லைன் கடன்காரர்களிடம் கடன் வாங்கி சிக்கிக்கொள்பவர்கள், அதனை அடைக்க குடும்பப் பெண்கள் எடுக்கும் தவறான வழி அவர்களை அடுத்த புதை குழிக்குள் தள்ளுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வலம்வரும் பாலியல் பெண் புரோக்கர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல் அதிர்ச்சி ரகம். "மொபைலில் விளையாடினேன் கடனாகிடுச்சி, அதை அடைக்க ஆன்லைன்லயே கடன் தர்றவங்ககிட்ட வாங்கினேன். குறிப்பிட்ட தேதிக்குள்ள இ.எம்.ஐ. கட்டணும், கட்டலன்னா அசிங்கமா பேசறாங்க, என்னோட நிர்வாண போட்டோவ (மார்பிங்) செய்து எல்லோருக்கும் அனுப்பிடுவோம்னு மிரட்டறாங்கன்னு சொல்லி அழுவறாங்க.
இப்படி ஏமாந்தது எங்க வீட்டுக்காரருக்கோ, குடும்பத்துக்கோ தெரிஞ்சா பிரச்சனையாகிடும். என்னை வீட்டை விட்டுத் துரத்திடுவாங்க, அப்படி நடந்தா நான் சூசைட் செய்துக்கறத தவிர வேறவழியில்லன்னு அழுவறாங்க. பணம் வேணும், கடன் அடையற வரைக்கும், நீங்க சொல்றதைச் செய்யறேன்னு கெஞ்சறாங்க. இது அதைவிட மோசமானது, இதில் ஒருமுறை வந்துவிட்டால் திரும்பமுடியாது எனச்சொன்னால் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். தற்கொலை செய்துக்கறதை தவிர வேற வழியில்லன்னு சொல்றாங்க. தினமும் ஒருமணி நேரம், இரண்டு மணி நேரம் எனச் சொல்லி வருகிறார்கள். குடும்பப் பெண்களுக்கு இந்த தொழிலில் டிமாண்ட் இருப்பதால் கண்டிஷனை கஸ்டமர்கள் ஒப்புக்கொண்டு கேட்ட தொகையைத் தருகிறார்கள். இவர்களுக்கு தேவையான பணம் கிடைத்துவிடுகிறது, பணத்தை ஏமாந்துட்டு அதை அடைக்க வழிதெரியாம இதுல வந்து சிக்கறாங்க, என்ன செய்யறது''” என்றார்.
இதுகுறித்து திருவண்ணாமலையிலுள்ள மனநல மருத்துவர் சீதா கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "இணைய சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆர்வம் மற்றும் பொழுது போக்குக்காகவும், சிலர் மனஅழுத்தம், தனிமை, வேலையில் லாமை போன்றவற்றை மறக்கவும், இன்னும் சிலர் தங்களது பணத்தேவைக்காகவும் ஈடுபடுகிறார்கள். இதற்கு ஆண், பெண் என்கிற பேதமில்லை. பெண்கள் திருமணமானதும் தனது குடும்பத்தினர், நண்பர்களைவிட்டுப் பிரிந்து இடம்பெயர்ந்து கணவன், அவரது வீடு என வந்தபின் அவர்களுக்கு மனதளவில் ஒரு தனிமை உருவாகிவிடுகிறது. அதோடு குடும்பத்தில் அவருக்கான மன அழுத்தம் உருவாகி அதிலிருந்து வெளியே வரமுடியாமல் உழல்கிறார்கள். ஆண்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறது எனச்சொல்லி நண்பர்களுடன் சென்று மது அருந்துவது, புகைபிடிப்பது போல் பெண்களால் செய்யமுடியாது. மனைவியானவள் தனது கணவரிடம் சின்னச் சின்ன தேவைக்கு பணம் கேட்டால் ஏன்? எதற்கு? எனப் பலப் பல கேள்விகளைக் கேட்கிறார்கள். நாப்கின் வாங்கக்கூட பெண்கள் கணவரை எதிர்பார்க்கவேண்டிய நிலையில் உள்ளனர். இது அவர்களின் சுயமரியாதை மீது தொடுக்கும் தாக்குதல். இப்படி அசிங்கப்படுவதற்கு நாம் ஏதாவது வேலைசெய்து சம்பா திக்கலாம் என நினைக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவி வெளியே சென்று வேலைசெய்ய விடுவ தில்லை. இதனால் தனது தனிமையை போக்கிக்கொள்ள தொலைக்காட்சி சீரியல்கள் பக்கமும், மொபைலில் கேம்ஸ் விளையாட்டின் பக்கமும் மனதை மாற்றிக்கொள்ள முயற்சிப்பார்கள்.
ஒருவருக்கு இணையம் ஆய்ர்ய்ஹ்ம்ண்ற்ஹ் அதாவது அடையாளமறைவு தருவதால் அது பெண்களுக்கு கூடுதல் தைரியத்தையும், ஆர்வத் தையும் தந்து பாதுகாப்பாக நினைக்கிறார்கள். அதனால் பெண்கள் கேம்ஸ், ரம்மி விளை யாட்டின் பக்கம் போகிறார்கள். அதோடு, விளம்பரங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சில சூதாட்ட நிறுவனங்கள் சட்ட வரம்புகளை மீறி விளம்பரம் செய்கின்றன. வயதானவர்கள் தனிமையை போக்கிக்கொள்ள ரம்மி விளையாடுவதுபோல் விளம்பரம் வருகிறது. அதேபோல் பெண்கள் வீட்டிலிருந்து சம்பாதிக்க எளிய வழி என்கிற விளம்பரங்களை நம்பி நாமளும் விளையாடலாம், பணம் வந்தால் லாபம்தானே என நினைத்து விளையாடுகிறார் கள், அதன்பின் அதிலிருந்து அவர்களால் வெளியே வரமுடிவதில்லை. பணம்வைத்து விளையாடும்போது, நட்டம் ஏற்பட்டால் விட்ட பணத்தைப் பிடிக்க கடன் வாங்கி மீண் டும் விளையாடுவார்கள். அதுதான் மனிதனின் மனநிலை. சிலர் இதில் அடிக்டாகிவிடுவார்கள். திருமணமாகி குழந்தை பெற்ற பொண்ணுக்கு நல்லது கெட்டது தெரியாதா எனக் கேட்பார்கள். உண்மையில் பெரும்பாலான இளம்பெண்களுக்குத் தெரிவதில்லை. வீடு, பள்ளி, கல்லூரி, சமூகம் எனப் பெண்கள் எல்லா இடத்திலும் அழுத்திவைக்கப்பட்டு வெளியுலகமே தெரியாமல் வளர்க்கப்பட்டு, திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள், அதுவும் சிக்கலுக்கு காரணம்.
ஒருவருக்கு பெரியளவில் பணநட்டம் வரும்போது கடனுக்குப் பயந்து தற்கொலை முடிவோ அல்லது வேறு முடிவுகளோ எடுத்துவிடுகிறார்கள். இதனை விழிப்புணர்வு வழியாகவே தடுக்கமுடியும். அதுவும் பன்முகமாக இருக்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அன்னியோன்யம் இருக்கவேண்டும், புரிதல் இருக்க வேண்டும். வீட்டில் யாராவது ஒருவர் மொபைலில் அதிக நேரம் இருந்தால் ஏன்? என்ன? எதற்காக? என ஆராயவேண்டும். தவறு செய்தால் அதனை மாற்ற முயற்சிக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே உலக அறிவு குழந்தைகளுக்கு தரப்படவேண்டும். எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டோம் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு பெற்றோரும், திருமணத்துக்கு பின்னர் இணையரும், குடும்ப அங்கத்தினர்களும் தரவேண்டும். சமூகமும் அவர்களுக்கு நம்பிக்கை தரும்விதமாக நடந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் தவறான வழிக்கு செல்வது தடுக்கப்படும்''’ என்றார்.
நமது கைகளில் வெடிகுண்டை விட மோசமான செல்போனை வைத்துக்கொண்டி ருக்கிறோம். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியாவிட்டால், அது ஏற்படுத்தும் சேதாரம் மிக அதிகம்!
-து.ராஜா, பகத்சிங்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/gambling-t_0.jpg)